ஆண்டிமடம்: மு.க.அதியமான் – ச.சு.கிருத்திகா மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!

8 hours ago 5

‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்றார் தந்தை பெரியார்! அந்த மானத்தையும், அறிவையும் கொடுக்கின்ற முறை – சுயமரியாதைத் திருமண முறை!
இம்மணமுறை யாருக்கும் எதிரானது அல்ல;
மக்களை ஒன்றுபடுத்துவது, ஒருங்கிணைப்பது!
பெரியாருடைய கொள்கையைப் பின்பற்றியதினால், யாரும் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்து விடவில்லை, வசதி குறைந்து விடவில்லை!

ஆண்டிமடம், ஜூலை 21 ‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்றார் தந்தை பெரியார். அந்த மானத்தையும், அறிவையும் கொடுக்கின்ற முறை – சுயமரியாதைத் திருமண முறை. ஆகவேதான், இந்த மணமுறை யாருக்கும் எதிரானது அல்ல; மக்களை  ஈர்த்து வெல்லக்கூடியது, மக்களை ஒன்றுபடுத்துவது, ஒருங்கிணைப்பது. பெரியாருடைய கொள்கையைப் பின்பற்றியதினால், யாரும் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்து விடவில்லை, வசதி குறைந்து விடவில்லை. மாறாக வளர்ந்திருக்கிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மணமக்கள்
மு.க.அதியமான் – ச.சு.கிருத்திகா

கடந்த 25.6.2026 அன்று ஆண்டிமடத்தில் மணமக்கள் மு.க.அதியமான் – ச.சு.கிருத்திகா ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தலைமை தாங்கி நடத்தி வைத்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

புரோகிதத் திருமணத்தின் மேல் நமக்கு ஒன்றும் கோபம் இல்லை; அய்யர் மேலே நமக்குத் தனிப்பட்ட முறையில் ஆத்திரம் இல்லை!

மணமகன் அதியமான் அவர்களானாலும், மணமகள் கிருத்திகா அவர்களானாலும் மகிழ்ச்சி யோடு, சிரித்துக்கொண்டே மணவிழாவிற்கு வருகின்றவர்களை வரவேற்று, இரண்டு பேரும் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறார்கள். புரோகிதத் திருமணத்தின் மேல் நமக்கு ஒன்றும் கோபம் இல்லை. அய்யர் மேலே நமக்குத் தனிப்பட்ட முறையில் ஆத்திரம் இல்லை. மாறாக, ஒரே ஒரு கேள்விதான் – ‘‘வைதீகத் திருமணம் நடந்தி ருந்தால், புரோகிதத் திருமணம் நடந்திருந்தால், இங்கே இப்படி அமைதியாக, மகிழ்ச்சியாக மணமக்கள் இருப்பார்களா?’’ என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

மாங்குச்சி சுள்ளியைப் போட்டுக் கொளுத்தி, அதனால் எழும் புகையால், மணமக்கள் கண்கள் கலங்க, அந்த நெருப்பில்  நெய்யை ஊற்றி, இவ்வளவு சடங்கும் நடக்கும். புகையினால் கண்களைக் கசக்கிய மணமக்களைப் பார்த்தவர்கள், ‘‘என்னங்க, கண்களைக் கசிக்கிக் கொண்டிருக்கிறார்களே மணமக்கள்’’ என்று, எதிரே அமர்ந்திருப்பவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

அதற்கெல்லாம் இடமில்லாமல், மகிழ்ச்சியாக நடக்கக்கூடிய ஒரு வாழ்க்கை இணை நல ஒப்பந்தம். இதில், ‘‘’கன்னிகாதானம் செய்விக்க பெரி யோர்களால் நிச்சயித்த வண்ணம்’ என்பது இல்லை. ‘பாணிக்கிரஹணம்’ செய்கிறோம் என்கிற வடமொழி இல்லை.

தாய்மொழி, நம்முடைய தமிழ் மொழியில் நாங்கள் இங்கே பேசுகிறோம்; தோழர்கள் எல்லோரும் பேசினார்கள். மேடையில் உள்ள அறிஞர்கள்,  தலைவர்கள், சான்றோர் எல்லோரும் பேசினார்கள். உங்களுக்கு, அந்தக் கருத்து, எங்கள் கருத்தை ஏற்கிறீர்களோ, இல்லையோ ஆனால், புரிகிறது.

சமஸ்கிருதம் தேவ பாஷையாம்;
நம்முடைய தாய்மொழி நீஷ பாஷையாம்!

புரோகிதர்கள் இந்த மணவிழாவினை நடத்தி வைத்திருந்தால், சமஸ்கிருத மொழியில் சொல்லப்படும் மந்திரங்கள் – அந்தக் கருத்து யாருக்காவது புரியுமா? என்ன சொல்கிறார் என்றாவது தெரியுமா? சரி, அவர் மணமக்களுக்குத்தானே வாழ்த்துச் சொல்கிறார். அப்படியென்றால், மணமக்களுக்காவது புரிய வேண்டும் அல்லவா! அப்படி புரியவில்லை என்றால், ஏன்? அது வடமொழியான சமஸ்கிருத மொழி, அந்த மொழியில்தான் மந்திரம் சொல்ல வேண்டும். அதற்கு  அவர்தான் வர வேண்டும். ஏன்? அவர் மேல் ஜாதி. அதே மாதிரி ஏன் சமஸ்கிருதத்தில் சொல்ல வேண்டும்? சமஸ்கிருதம் தேவ பாஷை. நம்முடைய தாய்மொழி நீஷ பாஷை. தமிழ் மொழியைப் பேசினால் தீட்டுப்பட்டு விடும். இப்படியெல்லாம் சொல்லி, நம்மை அவமானப்படுத்துகின்றவனை அழைத்து, நம்மை இழிவு படுத்துகிறவனைக் கூப்பிட்டு, அவனுடைய காலில் விழுகிறோம்.

யாருக்கும் எதிரானது அல்ல; மக்களை ஒன்றுபடுத்துவது, ஒருங்கிணைப்பது சுயமரியாதைத் திருமண முறை!

‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’. இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சிறப்பாகச் சொன்னார். அந்த மானத்தையும், அறிவையும் கொடுக்கின்ற முறை – சுயமரியாதைத் திருமண முறை. ஆகவேதான், இந்த மணமுறை யாருக்கும் எதிரானது அல்ல; மக்களை  ஈர்த்து வெல்லக்கூடியது, மக்களை ஒன்றுபடுத்துவது, ஒருங்கிணைப்பது. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த மணமுறை இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக உங்களையெல்லாம் பாராட்ட வேண்டும். இம்மணமுறைக்கு ஒப்புக்கொண்டு இசைவு தந்த  மணமகளது பெற்றோரையும் மிகப்பெரிய அளவிற்குப் பாராட்ட வேண்டும்.

பொதுவாக மணமக்களுக்கு அதிக அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு பேரும் படித்தவர்கள்.  நாங்கள் எந்தத் திருமணத்திற்குப் போனாலும், மணமக்களுக்குப் பெரிய அறிவுரை, நீண்ட அறிவுரைகளை எல்லாம் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக சில வேண்டுகோள்கள், சில நினைவுறுத்தல்கள் அவ்வளவுதான்.

மூடநம்பிக்கை அற்ற
பகுத்தறிவு வாழ்க்கை வாழுங்கள்!

என்ன அந்த வேண்டுகோள் என்று சொன்னால், ‘‘அன்பார்ந்த மணமக்களே! நீங்கள் உங்கள் உழைப்பால் உயர்வீர்கள்! உழைப்பை நம்புங்கள் ஒன்று. அதை விட தன்னம்பிக்கையோடு வாழுங்கள். எங்கே மூடநம்பிக்கை இருக்கிறதோ, அங்கு தன்னம்பிக்கை இருக்காது. எங்கே தன்னம்பிக்கை இருக்கிறதோ, அங்கு மூடநம்பிக்கைக்கு இடமில்லை. ஆகவே, மூடநம்பிக்கை அற்ற பகுத்தறிவு வாழ்க்கை வாழுங்கள். பகுத்தறிவு என்று சொன்னால், ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? என்று கேள்வி கேட்பதுதான்.’’ அடுத்தபடியாக உங்களுக்குச் சொல்ல வேண்டிய மிக முக்கியமான ஒரு செய்தி, நினைவூட்ட வேண்டிய செய்தி என்ன என்று சொன்னால், இரண்டு பேருடைய வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு எது தடையாக இருக்கும்? தன்முனைப்பு. ‘ஈகோ’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.  ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் வர வேண்டும். அப்படி  விட்டுக் கொடுத்தால் தான்  இருவரும் சமம். இருவரும் நண்பர்கள். ஒருவர் எஜமானர் அல்ல; இன்னொருவர் அடிமை அல்ல என்று சொல்கிற அந்த உணர்வு, சம உணர்வு ஏற்பட்டுவிட்டால், எதுவும் குற்றமாகவே தெரியாது, எதுவும் குறையாகவே தெரியாது. நட்புறவில் வரும்போது, பொறுத்துக்கொள்வோம். அதுமாதிரி, நண்பர்களாக நீங்கள் வாழுங்கள்.

‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை!’’

அதனால்தான், தந்தை பெரியார் சொன்னார், மண மக்களைப் பார்த்து, ஒருவர் எஜமானன் –  இன்னொருவர் அடிமை அல்ல; மணமக்கள் உற்ற தோழர்களாக வாழுங்கள்; உற்ற நண்பர்களாக வாழ வேண்டும். அதை அண்ணா அவர்கள் அழகாகச் சொன்னார் இரண்டு வாக்கியத்தில். ‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை’’ இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு முனைப்பு இருந்தது என்றால், உங்கள் வாழ்க்கை என்றென்றைக்கும் சிறப்பாக இருக்கும். நிறைவாக உங்களுக்கு ஒன்றைச் சொல்லவேண்டும்.

தேர்தலுக்கும் – வாழ்க்கைக்கும் வேறுபாடு உண்டு!

வாழ்க்கைக்கும் – சில விளையாட்டு, தேர்தல் இது மாதிரி சம்பவங்களுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. என்ன அந்த  வேறுபாடு என்று சொன்னால், விளையாட்டு உங்களுக்குத் தெரியும். யார் அதிகமான தூரம் ஓடுகிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்; அவர்தான் வெற்றிக் கோப்பையை வாங்குகிறவர். இப்பொழுது உலகக் கால் பந்துப் போட்டி நடக்கிறது. உலகக் கால்பந்துப் போட்டியில் யார் அதிகமாகக் கோல் போட்டார்களோ, அப்படிப்பட்டவருக்கு எண்ணிக்கைக் கூடுதலாகப் பெற்று, வெற்றி அடைந்தவர் என்று கோப்பையை வாங்குவார். அவருக்குப் பெருமை – ஒவ்வொரு நாடும் பெருமையாக  அதனை நினைக்கிறார்கள். அது விளையாட்டு; அதே மாதிரி தேர்தல். அதில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பது வேறு. அந்தத் தேர்தலில் யார் அதிக ஓட்டு வாங்குகிறாரோ, அவர் வெற்றி பெறுவார். ஒரே ஒரு ஒரே  வாக்கு வித்தியாசத்தில் கூட வெற்றி பெறலாம்.  அந்த ஒரு ஓட்டு இருந்தால் கூட, இவர் வெற்றி பெற்று விட்டார், அவர் தோற்றுவிட்டார். என்று தீர்ப்பளிக்கிறதுதான் தேர்தல் முறை. வாழ்க்கை அதற்கு நேர் மாறானது. அப்படித்தான் நீங்கள் சிந்திக்க வேண்டும். என்னவென்றால், வாழ்க்கை வளமுள்ள வாழ்க்கையாக, இணையமான ஒரு வாழ்க்கையாக, இதமான ஒரு வாழ்க்கையாக அமைய வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும்? முழுக்க முழுக்க அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மணமக்கள் அதியமான் – கிருத்திகா ஒருவருக்கொரு வர் வாழ்க்கையில், யார் யாருக்காகத் தோற்கிறார்களோ, அவருக்குதான் பரிசு. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு கிடையாது.  அதியமான் நினைக்க வேண்டும், ‘‘அம்மா,  நீங்கள் வெற்றி பெற்றீங்க; உங்களுக்காக நான் விட்டுக் கொடுத்தேன்’’ என்று சொல்லவேண்டும்.

முந்திக்கொண்டு தோற்க முயல வேண்டும், தோற்பதற்கு முந்திக் கொள்ள வேண்டும்!

ஆகவே, முந்திக்கொண்டு தோற்க முயல வேண்டும், தோற்பதற்கு முந்திக் கொள்ள வேண்டும் அப்போதுதான் உங்கள் வாழ்க்கை யாராலும் மிக குறை சொல்ல முடியாத, உற்ற வாழ்க்கையாக இருக்கும். எனவேதான் உங்கள் வெற்றி எதில் இருக்கிறது என்றால், தோல்வியில் தான் உங்கள் வெற்றி இருக்கிறது.

எனவே, இந்த இரண்டையும் சிறப்பாக நினைத்து வாழுங்கள்; சிக்கனமாக வாழுங்கள்.  திருமண மண்டபத்தினை மிக அழகாகக் கட்டியிருக்கிறார்கள். அழகாகக் கட்டியதை விட, எனக்குத் தெரிந்து, பெரியார் – அண்ணா பெயரில் இருக்கக்கூடிய மண்டபம், தமிழ்நாட்டிலேயே இது ஒன்றுதான் என்று நான் நினைக்கிறேன்.  இந்த மண்டபத்தைப் பார்த்தேன். பல மண்டபங்களில் குறுக்கே தூண் இருக்கும்; ஆனால், இந்த மண்பத்தில்,  தூணே இல்லாமல் அமைத்தி ருக்கிறார்கள்.

ஆகவே தான், இந்தக் கொள்கைக்கு எந்தக் குறுக்கீடும் வராது. பெரியார் – அண்ணாவின் குறுக்கே தூணே கிடையாது. இந்த இயக்கம் இருக்கக்கூடிய வாய்ப்புகள், அதற்கு பாராட்டு. அந்த வகையில், உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைச் சொல்லுகின்ற நேரத்தில், வருங்காலத்தில், இவ்வளவு ஆடம்பரமான திருமணங்களைக் கூட குறைக்க வேண்டும். இவ்வளவு செலவு செய்யக் கூடாது. சிக்கனமாக நடத்தவேண்டும். அந்தப் பணம் முழுவதும் மணமக்களுக்குப் பயன்படக்கூடிய அளவுக்கு ஆக்க வேண்டும். ‘‘நாங்கள் இருவரும் வாழ்க்கைத் துணை ஆகிவிட்டோம் என்பதை, உங்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். அவரவர்கள் வீட்டிலே இருந்தே நீங்கள் எங்களை வாழ்த்தலாம்’’ என்று சொன்னால், மண்டபத்துக்காரர் கோபித்துக் கொள்வார். திருமண மண்டபத்தைக் கட்டியிருக்கின்றோமே, வாடகைக்கே யாரும் வரவில்லையே என்று நினைப்பார். அது முக்கியம் அல்ல. நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். எதிர்காலத்தில் அப்படிதான் இருக்கும். இனிமே நேரம் முக்கியமானது. இனிமேல் போகிற வேகம் இருக்கிறது பாருங்கள், அந்த வேகத்தில் எல்லோரும் விழித்துக் கொள்வார்கள்.

மிகப்பெரிய அளவுக்கு மாறுதல் என்பது தவிர்க்க முடியாது இப்பொழுது.  புரோகிதர், லண்டனுக்குப் போக முடியவில்லை என்றவுடன், வருமானத்தை விடக்கூடாது என்பதற்காக, அவர் என்ன செய்கிறார் தெரியுமா? இங்கே இருந்தே மந்திரத்தைச் சொல்கிறேன் இணைய தளம் மூலமாக என்கிறார்.

பெரியாருடைய கொள்கையைப் பின்பற்றியதினால், நாங்கள் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்து விடவில்லை!

அப்பேர்ப்பட்ட கால மாறுதல். ஆனால், இதை ஏன் முருகன் செய்தார்? ஏன் இதை செய்திருக்கிறார் என்றால், அதற்கு ஒரே ஒரு காரணம்தான். என்ன காரணம் என்றால், மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதைவிட, பெரியாருடைய கொள்கையைப் பின்பற்றியதினால், நாங்கள் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்து விடவில்லை, வசதி குறைந்து விடவில்லை; இதோ, நாங்கள் வளர்ந்திருக்கிறோம் என்று காட்டுவதற்காகத்தான், ஒருவேளை இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம். அது பரவாயில்லை; ஆனால், ஒவ்வொரு முறையும் இதுபோன்று காட்டவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆகவேதான், வருங்காலத்தில் இவர்களின் பிள்ளைகளுடைய காலத்தில் எல்லாம், செலவு இல்லாமல், சிறப்பாக  இதுபோன்ற நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும்.

சிக்கனம் என்பது வேறு;
கருமித்தனம் என்பது வேறு!

சிக்கனம் என்பது வேறு; கருமித்தனம் என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளவேண்டும். சிக்கனமாக இருங்கள் என்றால், கருமித்தனமாக இருங்கள் என்று அர்த்தமில்லை.

கருமித்தனம் என்பது தேவைக்கே செலவழிக்காதது. தேவைக்கு ஏற்ப செலவழிப்பது சிக்கனம்.  தேவைக்கு மேலே செலவழிப்பது ஆடம்பரம். இந்த மூன்று நிலைகளையும், மிகத் தெளிவாக நீங்கள் உணர வேண்டும் என்று கூறி, மணமக்கள் இருவரும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறி, இணையேற்பு நிகழ்வினை இங்கு சிறப்பாக நடத்திக் கொள்கிறார்கள் அனைவர் முன்னிலையிலும். இப்போது மணமக்கள் இருவரும் வாழ்க்கை இணையேற்பு விழா ஒப்பந்த உறுதிமொழியினை கூற இருக்கிறார்கள்.

(கழகத் தலைவர் மணவிழா ஒப்பந்த உறுதி மொழியினைக் கூற, மணமகன், மணமகள் தனித்தனியே உறுதிமொழி கூறி, இணையேற்பு விழாவினை நடத்திக் கொண்டனர்.)

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை
யாற்றினார்.

Read Entire Article