இணையக் குற்றம்: இலங்கையில் இந்தியர்கள் 173 பேர் கைது

11 hours ago 8

e6711564-8819-45ef-9031-e0ed313e7598

கைதானவர்களில் பெரும்பாலோர் 25 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள். - மாதிரிப்படம்: பிக்சாபே

கொழும்பு: இலங்கையில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் இந்தியர்கள் 173 பேரும் நேப்பாளிகள் 25 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காலி, இக்கடுவை, மிதிகம ஆகிய இடங்களில் திங்கட்கிழமை (மே 11) மாலை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளின்போது அவர்கள் பிடிபட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

அவர்களில் பெரும்பாலோர் 25 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள். சுற்றுலா விசாக்களில் இலங்கை சென்று அவர்கள் இணையக் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

விசா விதிமீறல்கள், கூடுதல் காலம் தங்கியிருந்தது, சட்டவிரோத வேலை, கள்ள சிகரெட்டுகளை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள்மீது சுமத்தப்படும் எனக் காவல்துறை தெரிவித்தது.

சில நாள்களுக்கு முன் இணையக் குற்றம் தொடர்பில் சீன நாட்டவர் 250 பேரை இலங்கைக் காவல்துறை கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

இணையக் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கையில் இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து வெளிநாட்டவர் 626 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா, சீனா, வியட்னாம், மியன்மார், பிலிப்பீன்ஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்களில் அடங்குவர்.

சந்தேகப் பேர்வழிகளில் பலருக்குப் பெரிய அளவிலான, அனைத்துலக இணையக் குற்றல் கும்பல்களுடன் தொடர்பிருக்கலாம் என இலங்கைச் சட்ட அமலாக்க அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

வெளிநாடுகளில் உள்ளோரைக் குறிவைத்து அவர்கள் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

இலங்கையின் இணைப்புத்திறன், சுற்றுலாக் கட்டமைப்பு, எளிதாக விசா பெறும் வசதி போன்றவற்றால் வெளிநாடுகளைச் சேர்ந்த இணையக் குற்றக் கும்பல்கள் இலங்கையைத் தளமாகக் கொண்டு செயல்படலாம் என்று அதிகாரிகள் பலமுறை எச்சரித்து வந்துள்ளனர்.

ஒருசிலர் குறுகியகால சுற்றுலா விசாவில் இலங்கைக்குள் நுழைந்து, பின்னர் திட்டமிட்ட இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

Read Entire Article