புதுடில்லி, ஜூலை 23– இந்திய அஞ்சல் துறை பெயரில் புதிய வகை சைபர் மோசடி அரங்கேறி வருவதாக பொதுமக்களுக்கு சிபிஅய் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய அஞ்சல் துறையின் பெயரில் பரவி வரும் ஒரு புதிய மோசடி குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஅய்) பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சிபிஅய்-யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் கைப்பேசி எண்களுக்கு எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) அல்லது வாட்ஸ் அப் மூலம் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பு கிறார்கள். அதில், “உங்களுடைய பார்சல் முகவரி சரியாக இல்லாததால் டெலிவரி செய்ய முடியவில்லை. அதை மீண்டும் டெலிவரி செய்ய சிறிய தொகையை ஆன்லைனில் செலுத்தவும்” என்று ஒரு இணைப்பு (லிங்க்) உடன் செய்தி வரும்.
அதை அழுத்தும்போது, அது அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் போன்றே அச்சு அசலாக வடிவமைக்கப்பட்ட ஒரு போலி இணைய தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கே நீங்கள் உங்கள் வங்கி விவரங்கள் அல்லது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை உள்ளிடும்போது, அந்தத் தகவல்களைத் திருடும் மோசடி கும்பல், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் சில நிமிடங்களில் சுருட்டிவிடும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த மோசடியில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் பார்சல் குறித்த தகவல்களை அறிய www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் பின், ஓடிபி அல்லது கடவுச்சொற்களை யாருடனும் பகிரக்கூடாது. ஏதேனும் சந்தேகத்துக்குரிய குறுஞ்செய்தி வந்தால், தாமதிக்காமல் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு உதவி எண் 1930 அல்லது இணையதள முகவரி www.cybercrime.gov.in-இல் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
.png)
1 hour ago
6







English (US) ·