இந்தோனீசிய எல்லைகளில் இபோலா நோய்த்தொற்று கண்காணிப்பு தீவிரம்

20 minutes ago 8

bd6e2707-aa31-419c-bd8f-ad255c4fe0ee

ஜகார்த்தாவில் உள்ள இந்தோனீயாவின் தேசியத் தொற்றுநோய் சிகிச்சை மையம். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இபோலா கிருமித்தொற்றை அனைத்துலக அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தோனீசியா தனது எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இபோலா தொற்றால் 88 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அதன் பின்னர் வெளிநாட்டினர் உள்ளே நுழையும் சோதனைச்சாவடிகளில் இந்தோனீசியாவின் கண்காணிப்பு அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக இந்தோனீசிய சுகாதார அமைச்சைச் சேர்ந்த அதிகாரியான அஜி முஹவர்மன் அண்டாரா செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

“அனைத்துலகப் பயணிகளை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். குறிப்பாக, இபோலா தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தோரை அதிகமாகக் கண்காணிக்கிறோம்.

“நோய்த்தொற்று என சந்தேகிக்கப்படுவோர் அதற்கென நிறுவனப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவர். மேலும் அது குறித்து தேசிய அவசரநிலை சமாளிப்பு முறை வாயிலாக நோய்த்தொற்று சம்பவம் பதிவு செய்யப்படும்,” என்றார் அவர்.

இபோலா தொற்றை முன்கூட்டியே கண்டறியும் திறனை அதிகரிக்கவும் அதிக நோயாளிகளை ஏற்கும் வகையில் மருத்துவமனைகளில் நோயாளி படுக்கைகளைக் கூட்டவும் பொதுச் சுகாதார அமைப்புகளுடனும் மருத்துவமனைகளுடனும் அரசாங்கம் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

வேகமாகப் பரவக்கூடிய, ரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடிய இபோலா தொற்றால் இதுவரை 88 பேர் மாண்டுவிட்டதாகவும் மேலும் 336 பேரை அது தொற்றியுள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் சனிக்கிழமை தெரிவித்தது.

இப்போது பரவிவரும் ‘புந்திபுகியோ’ இபோலா கிருமித்திரிபிற்கு தடுப்பு மருந்தோ, குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை என்று காங்கோ சுகாதார அமைச்சர் சேமுவல் ரோஜர் கம்பா தெரிவித்தார்.

அந்தக் கிருமித் தொற்றுவோர் உயிரிழக்க 50 விழுக்காடுவரை வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். இபோலா தொற்றியோரிடம் காய்ச்சல், ரத்தப்போக்கு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படலாம்.

Read Entire Article