சிங்கப்பூரரான சாட் லுனாஸ்கி நள்ளிரவுக்குப்பின் விளக்கை அணைத்துவிட்டு உறங்குவதற்குத் தயாரானார். அப்போது வந்த தொலைபேசி அழைப்பு, அவர் தங்கியிருந்த இடத்துக்கு அருகே இடிபாடுகள் விழலாம் என்பதால் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தியது.
“அப்போதுதான் எனக்கு முழு அளவில் போர் நடப்பதாகத் தோன்றியது,” என்று 53 வயது ஆலோசகரான அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
அங்கு அவர் தமது தொழிலை நிறுவிய பிறகு மார்ச் 3ஆம் தேதி துபாயிலிருந்து புறப்படுவதாக இருந்தார்.
தொலைபேசி அழைப்பு வந்த பிறகு அவசரமாக ஒரு பையைத் தூக்கிக்கொண்டு நிலத்தடி கார்ப்பேட்டைக்கு ஓடி மறைவான இடத்தை அவர் தேடினார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பிவந்த அவர், அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்காகக் காத்திருந்தார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது கூட்டாகத் தாக்கிய பிறகு அதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பஹ்ரேன், கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் தாக்கியது. அவ்வட்டாரத்தின் வான்வெளி மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அந்நாடுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
சந்தைப்படுத்தல் நிபுணரான சிங்கப்பூரர் ஷெரில் ஹோ, முதல் வெடிச்சத்தம் கேட்டதும் துபாயில் தம் வீட்டிலிருந்தபடி செய்திகளைக் கேட்டு நிலைமையைப் புரிந்துகொண்டார்.
அதன்பிறகு தேவையான பொருள்களை ஒரு பையில் எடுத்துக்கொண்டு தம்மைப் பாதுகாத்துக்கொள்ள திரைச்சீலைகளை மூடினார்.
திரு ஏஎம் என்று கூறப்படும் சிங்கப்பூரர் ஒருவர், பிப்ரவரி 28ஆம் தேதி, அதே நகரத்தின் மற்றொரு பகுதியில் இருந்த ஒரு கடைத் தொகுதியில் மகளின் திருமணத்திற்காக மனைவியுடன் பொருள்களை வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது கடைகள் வரிசையாக மூடப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
அதுபோல கடைத்தொகுதியை இதற்குமுன் இப்படி காலியாகப் பார்த்ததில்லை என்று ஓராண்டாகத் துபாயில் தங்கியிருக்கும் அவர் கூறினார்.
“காற்றில் ரப்பர் எரிந்த வாடை வீசியது. புகைமூட்டமாக இருந்தது,” என்றார் அவர்.
அந்தக் கட்டடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று கூறி பலர் கீழே இறங்கி ஓடினர். பலர் அடித்தளத்திலும் தாழ்வாரத்திலும் கார்களிலும் படுத்துக்கொண்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இரவு முழுவதும் ஏவுகணைகள் தாக்கும் சத்தத்தால் தம்பதியர் விழித்துக்கொண்டே இருந்தனர் என்றும் பெரும்பாலோர் வீட்டிலேயே தங்க விரும்பினர் என்றும் திரு ஏஎம் சொன்னார்.
தங்கள் மகளின் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையில் அவ்விணையர் விரைவில் அங்கிருந்து வெளியேற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
கத்தார் தலைநகர் டோஹாவில் வசிக்கும் சிங்கப்பூர் இல்லத்தரசியான செலினா அகமது அல்காஃப் போன்ற சிலர் பதற்றமான சூழ்நிலையில் வீட்டில் தங்கியிருக்க முடிவுசெய்தனர்.
மூன்று குழந்தைகளின் தாயான அவருக்கு பிப்ரவரி 28ஆம் தேதி நண்பகல் வெடிச்சத்தங்கள் கேட்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வீட்டிலேயே இருக்குமாறு அல்லது பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு ஒரு செய்தி வந்தது.
“எங்கள் கட்டடங்களுக்கு மேலே வெடிச்சத்தங்கள் கேட்டன. சில மணி நேரங்களில் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. அமெரிக்க ராணுவத் தளத்தை நோக்கி வந்த ஏவுகணைகளை கத்தாரின் ஒரு சில வானூர்திகள் இடைமறித்ததைக் காண முடிந்தது,” என்றார்.
தாக்குதல் நண்பகலில் தொடங்கி மாலைவரை நீடித்தது.
“இந்தப் புனித ரமலான் மாதத்தில் நோன்பு துறப்பதற்குக்கூட தாக்குதல்கள் நிறுத்தப்படாததால் அதிர்ச்சியாக இருந்தது,” என்று திருவாட்டி செலினா மேலும் கூறினார்.
.png)








English (US) ·