உரிமம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டிய 13 வயது சிறுவனின் தாயார் மீது வழக்கு பதிவு!

8 hours ago 6

சென்னை, ஜூலை 21-  13 வயது சிறுவன் இருசக்கர வாகனம் (பைக்) ஓட்ட அனுமதி அளித்த தாய் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் 13 வயது சிறுவன் தனது நண்பர்களான மேலும் 2 சிறுவர்களுடன் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றார்.

மேலும், அந்த சிறுவன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாகவும் ஓட்டினார். இதை அங்கிருந்தவர்கள் காட்சிப் பதிவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த காட்சிப் பதிவு வைரலானதோடு, கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் விசாரித்தனர். இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிய சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகாததால், ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரிய வந்தது.

இதையறிந்தும், வாகனத்தை இயக்க அனுமதித்த வாகன உரிமையாளரான சிறுவனின் தாய் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் கூறுகையில், ‘`வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், மனித உயிர்களின் மதிப்பை உணர்ந்து பொறுப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

மேலும், 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் கள் அனுமதிக்கவோ, ஊக்குவிக்கவோ கூடாது’’ என எச்சரித்துள்ளார்.

Read Entire Article