மார்க்கண்டேயன் பேசிய கருத்துகள் தமிழக மக்களிடம் வருத்தம், கோபம் மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய சபாநாயகர், அந்தப் பேச்சு தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டால், சட்டப்பேரவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Published:8 mins agoUpdated:8 mins ago

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவை விதிகளை மேற்கோள் காட்டி இந்த விளக்கத்தை அளித்தார். மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கான தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமக்கு தெரிவித்ததாக கூறிய சபாநாயகர், பேரவைத் தலைவர் அனுமதி பெற்று மட்டுமே எம்.எல்.ஏ-வை கைது செய்ய வேண்டும் என்ற பொதுவிதி எதுவும் இல்லை என்றார்.

மார்க்கண்டேயன்
அவர் மேலும் கூறுகையில், "பேரவை விதி 291-ன் படி, பேரவை அமைப்பு எல்லைக்குள் உள்ள உறுப்பினரை சபாநாயகரின் அனுமதியின்றி கைது செய்யக் கூடாது. அதேபோல், பேரவை விதி 292-ன் படி, உரிமையியல் அல்லது குற்றவியல் நீதிமன்ற உத்தரவுகளையும் பேரவை அமைப்பு எல்லைக்குள் சபாநாயகரின் முன் அனுமதியின்றி அமல்படுத்தக் கூடாது" என்றார்.
பேரவை அமைப்பு எல்லை என்பது சட்டப்பேரவை மண்டபம், அதன் புறக்கூடங்கள், அமைச்சர்களின் அறைகள், சட்டமன்றக் குழுக்கள் கூடும் அறைகள், எம்எல்ஏக்கள் கூடும் அறைகள் மற்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ள பிற பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த எல்லைக்கு வெளியே தனிப்பட்ட இடங்களில் எம்.எல்.ஏ-வை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
மார்க்கண்டேயன் பேசிய கருத்துகள் தமிழக மக்களிடம் வருத்தம், கோபம் மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய சபாநாயகர், அந்தப் பேச்சு தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டால், சட்டப்பேரவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம்
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஆகஸ்ட் 5-ம் தேதி கூடும் என்றும், அன்றைய தினம் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்வார் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6-ம் தேதி வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவரங்கள், பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

சபாநாயகர் JCD பிரபாகர்
பேரவை மரபில் மாற்றமில்லை
மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள வந்தே மாதரம், தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டப்பேரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, இதுவரை பின்பற்றப்பட்ட மரபே தொடரும் என்று சபாநாயகர் பதிலளித்தார்.
முழு நேரலையில் பேரவை நிகழ்வுகள்
சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படுவதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவரின் கருத்தை மற்றொருவர் கேட்டு விவாதிக்கும் ஜனநாயக மரபு தொடர வேண்டும் என்றும், இந்த கூட்டத்தொடர் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது தொடர்பாக அவர்கள் அளித்த விளக்கங்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது பதிலை எதிர்பார்த்து இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் மற்றும் கொறடா தொடர்பான அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது வெளியிடப்படும் என்றும் கூறினார்.

முதல்வர் விஜய்
முதலமைச்சர் விஜய் பேச்சு குறித்து…
கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், “சட்டப்பேரவையின் கதவுகளை மூடிவிட்டுத்தான் பேச வேண்டும் போலிருக்கிறது” என்று கூறியதைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், அந்தக் கருத்தை நேரடி அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார்.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு அரசு தரப்பின் பதிலையும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் அந்தக் கருத்தை தெரிவித்திருப்பார் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கமளித்தார்.
.png)






English (US) ·