‘எஸ்ஜி’ தற்காப்புத் தொண்டூழியக் கட்டமைப்பு அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: கீர்த்திகா ரவீந்திரன்
சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கான சமூகத்தின் ஒருமித்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம், ‘எஸ்ஜி’ தற்காப்புத் தொண்டூழியக் கட்டமைப்பு, செவ்வாய்க்கிழமை (மே 12) அறிமுகம் கண்டது.
சிங்கப்பூர் ஆயுதப்படைத் தொண்டூழியப் படைப்பிரிவினர் (SAF Volunteer Corps), சிங்கப்பூர் ஆயுதப்படைப் பொழுதுபோக்குச் சங்கத் (SAFRA) தொண்டூழியர்கள், சிங்கப்பூர்க் கூட்டுப் பாதுகாப்பு அருங்காட்சியகத் (Defence Collective Singapore) தொண்டூழியர்கள் ஆகியோர் இந்தக் கட்டமைப்பின்கீழ் இணைவர்.
மத்திய ஆள்பலத் தளத்தில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொண்டூழியர்களுடன் கலந்துரையாடினார் .
மத்திய கிழக்கு மோதல், தவறான தகவல் பரப்பும் சம்பவங்கள், விநியோகச் சங்கிலி இடையூறுகள் என எதுவாக இருந்தாலும் அவை ராணுவத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் பாதிக்கின்றன என்று திரு ஸாக்கி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்..
“எனவே, நமது பதில் ஒரு ஒன்றுபட்ட சமூகத்தின் பதிலாக இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தப் புதிய கட்டமைப்பு நிறுவப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்திருந்தார்.
நிரந்தரவாசிகள், வெளிநாட்டினர்க்கு வாய்ப்பு
பாதுகாப்புத் தொண்டூழியர்கள் தவிர புதிய பொதுத் தொண்டூழியர்கள் 400 பேருக்கு இடமளிக்கும் வகையில் 10 புதிய பணிகள் இந்தக் கட்டமைப்பின்வழி உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள், புதிய குடியேறிகள், நிரந்தரவாசிகள் ஆகிய தரப்பினருடன் வெளிநாட்டினரும் இதில் அடங்குவர்.
தற்போது ராணுவ மற்றும் பொதுத் தொண்டூழியர்கள் ஏறத்தாழ 1,500 பேர் சிங்கப்பூரின் பாதுகாப்புக்குச் சேவையாற்றி வருகின்றனர். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது கட்டமைப்பின் நோக்கமாகும்.
‘எஸ்ஏஎஃப்’ தொண்டூழியர் படைப்பிரிவில் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் சேவையாற்றி வரும் சாரதா கெர்ரி, 51, சிங்கப்பூருக்கான இந்தப் பங்களிப்பு தமது நன்றியுணர்வுக்கான சான்று என்று கருதுகிறார்.
இந்தியாவில் பிறந்து, 1997ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த திருவாட்டி சாரதா ஏறத்தாழ 29 ஆண்டுகள் சிங்கப்பூரைத் தமது இல்லமாகக் கருதி வாழ்ந்துவருகிறார்.
2015ஆம் ஆண்டு ‘எஸ்ஏஎஃப்’ தொண்டூழியர் படைப்பிரிவின்கீழ் தொண்டூழியராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
“எதிர்காலத்தில் தேசியச் சேவையாற்றவிருக்கும் என் மகனுக்காக நான் தொண்டூழியர் ஆக விரும்பினேன். சிங்கப்பூரின் பாதுகாப்பு என்பது என்ன என்பதைப் பற்றிப் படிப்பதோடு நின்றுவிடாமல், அதையும் தாண்டி மேலும் அறிந்துகொள்ள விரும்பினேன்,” என்று தமிழ் முரசிடம் அவர் தெரிவித்தார்.
தற்போது திருவாட்டி சாரதா, துணைப் பாதுகாப்புப் படைவீரராகத் தொண்டாற்றுகிறார்.
பகலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரியும் திருவாட்டி சாரதா, ஓராண்டுக்கு 14 நாள்கள் வரை ‘எஸ்ஏஎஃப்’ தொண்டூழியராகப் பணியாற்றுகிறார்.
“எனது தொண்டூழியப் பொறுப்புகள் பற்றி என் பணியிடம் அறிந்துள்ளது. அவர்கள் அதற்கு மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்,” என்றார் அவர்.
தம் மகனுடன் ஒரே சீருடையில் பொதுவான தருணங்களைப் பகிர்ந்துகொள்வதே ஒரு ‘எஸ்ஏஎஃப்’ தொண்டூழியராக இருப்பதில் உள்ள சிறந்த தருணங்களில் ஒன்று என்று சாரதா மகிழ்ச்சியுடன் கூறினார்.
“நானும் இந்தச் சமூகத்தில் ஒருவர் என்ற உணர்வையும் என் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதற்கான வாய்ப்பையும் இந்த அனுபவம் அளித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
‘எஸ்ஜி’ தற்காப்புத் தொண்டூழியக் கட்டமைப்பில் சேர விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mindef.gov.sg/join-us/singapore-defence-volunteer-network/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.
.png)





English (US) ·