நாட்டின் தற்காப்பை நிபுணத்துவம் மிக்கதாகவும் திறம்படவும் மேம்படுத்த புதிய சட்டம் ஒரு வலுவான சட்ட ஆவணமாக விளங்கும் என்று கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட் (நடுவில்) கூறியுள்ளார். - கோப்புப்படம்: கெமர் டைம்ஸ்
நோம் பென்: கம்போடியாவில் தேசிய சேவையைக் கட்டாயமாக்குவது தொடர்பான சட்ட முன்வரைவைச் செவ்வாய்க்கிழமை (மே 12) அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
பிரதமர் ஹுன் மானெட் உள்ளிட்ட 114 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த வரைவுத் திட்டத்தை ஒருமனத்துடன் ஏற்றுக்கொண்டனர்.
நாட்டின் தற்காப்பில் ஆயுதப்படைகளின் வல்லமையை மேம்படுத்துவதே அதன் நோக்கம்.
அச்சட்டத்தின்படி, 18 முதல் 25 வயதிற்குட்பட்ட கம்போடிய ஆண்கள் ஈராண்டுகளுக்குக் கட்டாய ராணுவ சேவையாற்ற வேண்டும். பெண்களுக்கு கட்டாயமில்லை என்றபோதும் அவர்கள் விரும்பினால் சேரலாம்.
கட்டாய தேசிய சேவைக்குப் பிறகு, 45 வயது வரைக்கும் அவர்கள் தயார்நிலைப் படைவீரர்களாக இருப்பர்.
இரட்டைக் குடியுரிமையுடன் கம்போடியாவில் வசிப்பவர்களுக்கும் கட்டாய தேசிய சேவை பொருந்தும். துறவிகள், சமய குருக்கள், உடற்குறையுள்ளோர் ஆகியோர்க்குக் கட்டாய ராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
கட்டாய தேசிய சேவையிலிருந்து நழுவ முயல்வோர்க்கு ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
நாட்டின் தற்காப்பை நிபுணத்துவம் மிக்கதாகவும் திறம்படவும் மேம்படுத்த இச்சட்டம் ஒரு வலுவான சட்ட ஆவணமாக விளங்கும் என்று பிரதமர் ஹுன் மானெட் குறிப்பிட்டார்.
“அமைதியை அடைவதும் அதைப் பேணுவதும் மற்றவர்களிடம் நாம் கெஞ்சிக் கேட்க வேண்டிய ஒன்றன்று, அது நமக்குள் இருந்தே வரவேண்டும். நாம் நாமாகவே வலிமை பெற வேண்டியது அவசியம்,” என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கம்போடியாவில் 2006ஆம் ஆண்டிலேயே கட்டாய தேசிய சேவைக்குச் சட்டம் இருந்தது என்றும் ஆனால், அது அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்காததால் தமது அரசாங்கம் புதிய சட்டத்தை உருவாக்க முடிவுசெய்ததாக அவர் விளக்கினார்.
இந்தச் சட்ட வரைவு மேலவையின் இறுதியாக மறுஆய்வு செய்யப்பட்டு, அதன்பின் ஆணை பிறப்பிப்பதற்காக மன்னர் நோரோடோம் சிகாமோனியிடம் சமர்ப்பிக்கப்படும்.
.png)





English (US) ·