கலைத் திருவிழா.. திருநங்கை நடத்தும் அகாடமியில் பயின்ற மாணவி மாநில அளவில் முதலிடம் !

11 hours ago 19

Last Updated:Feb 07, 2026 6:16 PM IST

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் நெல்லையைச் சேர்ந்த திருநங்கை நடத்தும் ஸ்ரீ ராம்ஸ் அகாடமி மாணவிகள் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

+

கலைத்

கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவிகள்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் 'பசுமையும் பாரம்பரியமும்' என்ற தலைப்பில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் ஹரிணி என்ற மாணவி மாநில அளவில் பரதநாட்டியம் தனிப்பிரிவில் முதலிடம் பெற்றார். இதனையொட்டி சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவி ஹரிணியை பாராட்டி நினைவு பரிசு, பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

இந்த மாணவி திருநெல்வேலி பாலபாக்யா நகரில் ஸ்ரீ ராம்ஸ் அகாடமி என்ற கலைக் கூடத்தில் பரதநாட்டியம் பயின்று வருகிறார். குறிப்பாக கலைத் திருவிழா போட்டி பரதநாட்டியம் தனிப்பிரிவில் இந்த கலைக்கூடத்தை சேர்ந்த கொக்கிரகுளம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி இந்துமதியும், மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். அதேபோல் பாளையங்கோட்டைசெயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி கவிஷா மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். மீனாட்சிபுரம் மாநகராட்சி நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி சஞ்சணா ஸ்ரீ மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி ஹரிணி கூறுகையில், "ஸ்ரீ ராம்ஸ் அகாடமியில் ஆறு வருடமாக பரதநாட்டியம் பயின்று வருகிறேன். எனது குரு ஸ்ரீ மாரிமுத்து மீனாட்சி சுந்தரம் பயிற்சி கொடுத்து வருகிறார். கல்வித்துறை அமைச்சர் பரிசு வழங்கியது எனக்கு மகிழ்ச்சி. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக தினமும் காலையில் ஒரு மணி நேரம் பயிற்சி செய்தேன். பின்னர் பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் அகாடமி சென்று இரண்டு முதல் மூன்று மணி நேரம் பயிற்சி செய்வேன். குறிப்பாக எனது குரு இந்த போட்டிக்காக 15 நாட்கள் சிறப்பு வகுப்பு எடுத்தார். இது போன்ற காரணங்களால் மட்டுமே என்னால் வெற்றி பெற முடிந்தது. எனது பெற்றோரும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். 2020ல் இந்த அகாடமியில் எனது பெற்றோர் சேர்த்து விட்டனர். எனது குரு எடுக்கக்கூடிய வகுப்பு பார்த்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்த்தும் எனக்கு பரதநாட்டியம் மீது ஆர்வம் ஏற்பட்டது" என தெரிவித்தார்.

இதுகுறித்து குரு ஸ்ரீ மாரிமுத்து மீனாட்சி சுந்தரம் கூறுகையில், " பரதநாட்டியம் என்பது கடினமான கலை. முழு உடலும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். உடற்பயிற்சி ஆரம்பித்து முறையான பயிற்சி அளித்து வருகிறேன். எனது மாணவிகள் 150 க்கும் மேற்பட்ட மேடைகளை பார்த்துள்ளனர். அதனால் அவர்களுக்கு பயம் என்பது கிடையாது. பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பது எனது தொழில் அல்ல எனது வாழ்க்கை. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திருநெல்வேலியில் அரசு இசை பள்ளியை ஆரம்பித்தார். 2004 ஆம் ஆண்டு திருநங்கை ஆகிய நான் அங்கு பயின்றேன். 2026 ஆம் ஆண்டு எனது மாணவிகள் பரதநாட்டியம் போட்டிகளில் முதலிடம் பெறுவது எனக்கு பெருமை அளிக்கிறது" என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Tirunelveli,Tirunelveli,Tamil Nadu

Read Entire Article