Last Updated:Jul 24, 2026 12:51 PM IST
கீழடியில் கடந்த மார்ச் மாதம் முதல் 11-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், மீன் உருவக் குறியீடு பொறிக்கப்பட்ட முழுமையான சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் முக்கியமான சான்றாக தொல்லியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
கீழடியில் கடந்த மார்ச் மாதம் முதல் 11-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 9 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், உறைகிணறுகள், சுடுமண் பானைகள், சுருள் வடிவ மற்றும் பீப்பாய் வடிவ வடிகால் அமைப்புகள், மூடிய மற்றும் திறந்த வடிகால்கள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட ஏராளமான தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முதலில் தோண்டப்பட்ட குழியில் சுமார் 160 செ.மீ. ஆழத்தில், ஒரு அடி விட்டமும் ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானை முழுமையான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பானையின் மேற்பகுதியில் மீன் உருவம் கோட்டு ஓவிய வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் கீழடியில் மீன் உருவம் பதிக்கப்பட்ட உறைகிணறு மற்றும் பானை ஓடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இந்தக் கண்டுபிடிப்புகள், சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடி மக்கள் மேம்பட்ட நகரமைப்பு, கைவினைத் திறன், குறியீட்டு முறை மற்றும் கல்வி அறிவில் சிறந்து விளங்கிய சமூகமாக இருந்திருக்கலாம் என்பதற்கான முக்கியமான சான்றுகளாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :
Viluppuram,Tamil Nadu
First Published :
Jul 24, 2026 12:51 PM IST
.png)







English (US) ·