வருமானம் அனைவருக்கும் உயர்ந்திருந்தாலும், குறைந்த வருமானக் குடும்பங்கள் மற்ற எல்லாப் பிரிவினரையும் விட விழுக்காடு அடிப்படையில் வலுவான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, எல்லாத் தரப்பினருக்கும் வருமானம் உயர்ந்திருந்தாலும், குறைந்த வருமானக் குடும்பங்கள் மற்ற பிரிவினரையும் விட விழுக்காடு அடிப்படையில் வலுவான வளர்ச்சி கண்டுள்ளன.
அரசாங்கத்தின் குறிப்பிட்ட தொழிலாளர் கொள்கைகளும், விரிவான சமூக ஆதரவுத் திட்டங்களும் இதற்குப் பெரும் பங்கு வகிக்கின்றன
வேலை செய்பவர்களைக் கொண்ட குடும்பங்களைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் நேரடித் தலையீடுகள், அவர்களின் வருமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
குறிப்பாக, ‘படிப்படியாக உயரும் சம்பள உதவித்தொகைத் திட்டம்’ விரிவுபடுத்தப்பட்டதால், குறிப்பிட்ட துறைகளில் ஊழியர்களின் திறன் மேம்பாட்டிற்கேற்ப ஊதிய உயர்வும் உறுதிசெய்யப்பட்டது.
ஊழியர்கள் உடனடியாகப் பலன்பெறுவதை உறுதிசெய்யும் அதேவேளையில், வர்த்தகங்கள் இந்தக் கூடுதல் செலவினத்தைச் சமாளிக்க அரசாங்கம் இத்திட்டத்தின் மூலம் நிதியாதரவு வழங்குகிறது.
அதே வேளையில், வேலைநலன் துணை வருமானத் திட்டம், குறைந்த வருமான ஊழியர்களின் வருமானத்தையும் மத்திய சேம நிதி சேமிப்பையும் நேரடியாக உயர்த்தியது. இது, அவர்களின் வருமானத்தைச் சந்தை சராசரியை விட அதிக அளவில் உயர்த்த வழிவகுத்தது.
புதிய தரவுகளின்படி, வருமான அடிப்படையில் கீழ்மட்டத்தில் உள்ள 10 விழுக்காட்டுக் குடும்பங்கள் தங்களின் வேலை வருமானத்தை விட, வேலை சாரா இதர வருமானத்தையே பெரிதும் சார்ந்துள்ளன.
2025ல் இப்பிரிவில் உள்ள குடும்பங்களில் 49.3 விழுக்காடு, வேலையில் இல்லாத 65 வயதுக்கும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய முதியவர்கள் மட்டுமே வசிக்கும் குடும்பங்களாகும்.
குறைந்த வருமானம் ஈட்டும் முதியோருக்கான மூத்தோர் ஆதரவுத் திட்டம், முன்னோடி, மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் போன்றவற்றின்கீழ் வழங்கப்படும் மானியங்கள் இவர்களது வருமான வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.
சிங்கப்பூரில் வருமானம் ஈட்டுவோரில் மேல்மட்டத்தில் உள்ள 10 விழுக்காட்டினரே, மொத்த வருமான வரி வருவாயில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டைச் செலுத்துகின்றனர். அதேவேளையில், கிட்டத்தட்ட 35 விழுக்காட்டினர், தனிநபர் வருமான வரி ஏதுவும் செலுத்தத் தேவையில்லை.
வசதியுள்ளவர்களிடமிருந்து பெறப்படும் வரித் தொகை, தேவை உள்ளவர்களுக்கு மானியமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதையும் ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
கீழ்நிலையில் உள்ள 20 விழுக்காட்டினர் செலுத்தும் வரியில் ஒவ்வொரு வெள்ளிக்கும் நிகராக ஏறக்குறைய $7 மதிப்பில் அனுகூலங்களைப் பெறுகின்றனர். ஒப்புநோக்க, மேல்நிலையில் உள்ள 20 விழுக்காட்டினர் வரியாகச் செலுத்தும் ஒவ்வொரு வெள்ளிக்கும் ஏறத்தாழ 20 காசு அனுகூலங்களையே பெறுகின்றனர்.
அறிக்கையின் கூடுதல் தகவல்களின்படி, வீடமைப்பு வளர்ச்சிக் கழக ஓரறை, ஈரறை வீடுகளில் வசிக்கும் ஒவ்வோர் உறுப்பினரும் 2025ல் சராசரியாக $16,519 மதிப்பில் அரசாங்க வழங்குதொகையைப் பெற்றனர். இது, அனைத்து வகை வீடுகளிலும் வசிப்போர் பெற்ற தேசிய சராசரி தொகையான $7,300ஐ விட இருமடங்குக்கும் அதிகம்.
இதுபோன்ற ஒருங்கிணைந்த முயற்சிகளின் பலனாக, வருமான ஏற்றத்தாழ்வைக் கணக்கிடும் ‘ஜினி குறியீடு’ குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
2025ல், வருமான அடிப்படையிலான ஜினி குறியீடு 0.452ஆக இருந்தது. வரிகள், அரசாங்க வழங்குதொகையைக் கணக்கில்கொண்ட பிறகு, குறியீடு 0.379ஆக மேலும் குறைந்தது. இது, 2015க்குப் பிறகு பதிவான ஆகக் குறைந்த அளவு.
.png)




English (US) ·