Last Updated:May 11, 2026 8:35 PM IST
பேரவைக்குள் கட்சியின் பலத்தை நிரூபிக்கவும், உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வருவதை உறுதி செய்யவும் இவர் தேவைப்படுகிறார்

தமிழ்நாடு முதலமைச்சரான விஜய் நாளை சட்டமன்றப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார். முன்னதாக, 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. ஆட்சியிலும் பங்கேற்கிறது. திமுகவுடனான தனது கூட்டணியையும் முறித்துக் கொண்டது.
இந்நிலையில், தலா இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல், விடுதலை சிறுத்தைகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. தவெக-வுக்கு ஆதரவு அளித்தன. இதையடுத்து, தவெகவின் பெரும்பான்மை பலம் 120 ஆக அதிகரித்தது. எனவே, நாளை விஜய் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் சிக்கல் இல்லாத சூழல் உள்ளது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் கொறடா பதவி முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், வேறொரு கட்சிக்கு மாறுவதைத் தடுப்பதே இச்சட்டம். 1985-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின்படி, கட்சியின் முடிவுக்கு எதிராகச் செயல்படும் உறுப்பினரின் பதவியைப் பறிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யும் போதும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் தனது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை கொறடா உறுதிசெய்கிறார். பேரவைக்குள் கட்சியின் பலத்தை நிரூபிக்கவும், உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வருவதை உறுதி செய்யவும் இவர் தேவைப்படுகிறார். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான சட்டமன்ற கொறடாவை நியமிக்கும். கொறடா என்றால் எழுத்துப்பூர்வமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஆகும்.
கொறடாவாக இருக்கும் நபர் மூன்று விதமான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். ஒரு வரி உத்தரவு: இதன் கீழ், வாக்கெடுப்பு பற்றிய தகவல்களை மட்டும் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்துவார். அவைக்கு வருவது உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். இரு வரி உத்தரவு: சம்பந்தப்பட்ட நாளன்று உறுப்பினர்கள் கட்டாயம் அவைக்கு வரவேண்டும் என்று மட்டும் உத்தரவாக கொடுக்கப்படும். எப்படி வாக்கு செலுத்துவது என்பதை பற்றி எந்தக் குறிப்பும் இருக்காது. மூன்று வரி உத்தரவு: இந்த உத்தரவு தான் உறுப்பினர்களிடையே கட்சியின் ஒழுக்கத்தை கோரும். இதில் தான், பேரவைக்கு வருவதையும், வாக்களிப்பதையும், யாருக்கு எப்படி வாக்களிக்க வேண்டுமென்பதையும் குறிப்பிடப்படும்.
மூன்றாவது வகை உத்தரவு தான் மிகக் கடுமையானது. இந்த உத்தரவைப் பின்பற்றாத ஒரு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கலாம். உறுப்பினர் பதவியைப் பறிக்கச் சபாநாயகருக்குக் கொறடா பரிந்துரை செய்யலாம். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவரை நீக்க இது வழிவகுக்கும்.
ஒருவேளை, நாளை சட்டமன்றப் பேரவையில் தவெக-வுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் கொறடா உத்தரவுகளை அக்கட்சியின் உறுப்பினர்கள் மீறி வாக்களித்தால் ஆட்சி கவிழும் சூழல் கூட உருவாகலாம். கொறடாவை மீறிய உறுப்பினர்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். தவெகவின் தலைமை கொறடா பிறப்பிக்கும் உத்தரவுகளை 108 சட்டமன்ற உறுப்பினர்களும் எப்போதும் பிணைபற்றிட வேண்டும்.
முன்னதாக, திமுக தனது கட்சியின் கொறடாவாக எ.வ. வேலுவை நியமித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றத் தேர்தல் தலைவராக அறிவிக்கப்பட்ட மனுவில் கிருஷ்ணமூர்த்தி அதிமுகவின் கொறடாவாக அறிவிக்கப்பட்டார். அதிமுக எஸ்பி வேலுமணி தலைமை அளித்த கடிதத்தில் தனது கொறடாவாக சி.விஜய பாஸ்கர் அறிவிக்கப்பட்டார். தற்போது, பல பத்தாண்டுகளுக்கு பிறகு, இந்த முறை தொங்கு சட்டசபை உருவாகியிருக்கும் சூழலில் கொறடா பணி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
.png)







English (US) ·