நியூயார்க்கில் சென்ற மாதம் (ஜனவரி) 25ஆம் தேதி கொட்டிய கடும்பனியில் நடந்துசென்ற மக்கள். - படம்: நியூயார்க் டைம்ஸ்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவைகள் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (பிப்ரவரி 22) செவ்வாய்க்கிழமைவரை ரத்துச் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரத்திலும் அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியிலும் ஏறக்குறைய 30 மில்லியன் பேருக்குப் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக 1,000க்கும் மேற்பட்ட (1,097) விமானச் சேவைகள் ஏற்கெனவே ரத்துச் செய்யப்பட்டுவிட்டன.
விமானச் சேவைகளைக் கண்காணிக்கும் ‘ஃபிளைட்அவேர்’ நிறுவனம் அதனைத் தெரிவித்தது. நியூயார்க்கின் பல விமானநிலையங்களுடன் போஸ்ட்டன், நுவார்க், அட்லான்ட்டா முதலியவையும் பாதிக்கப்பட்டன.
எந்த விதமான பயணமும் சாத்தியப்படாது என்று கருதப்படுகிறது. பல இடங்களில் மின்சார விநியோகம் தடைபடக்கூடும் என்று கூறப்படுகிறது.
பனிப்புயல், சென்ற மாதம் (ஜனவரி) வீசிய புயல்காற்றைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று நியூயார்க்வாசிகளை நகர மேயர் ஸோரான் மம்தானி எச்சரித்துள்ளார். தேசிய வானிலைச் சேவை நிலையம், கிழக்குக் கடலோரப் பகுதியில் ஏறக்குறைய 51 சென்டிமீட்டர் உயரத்திற்குப் பனிப்பொழிவு இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது.
“நியூயார்க்வாசிகளை வீட்டுக்குள் இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்புக் கருதி, சாலைகளில் செல்வதை நீங்கள் தவிர்த்துவிடுங்கள்,” என்று திரு மம்தானி சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டது குறித்து, பாதிக்கப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும் தெரிவிக்கப்படும் என்று கூறியது.
அதன் இணையத்தளத்தில் விமானச் சேவை பற்றிய அண்மைத் தகவல்களைப் பார்த்துக்கொள்ளுமாறு அது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டது.
பாதிக்கப்பட்ட அனைத்துப் பயணிகளிடமும் தற்போது ஏற்பட்ட சிரமத்திற்காகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
.png)






English (US) ·