வாட்ஸ் ஆப்பில் ஆடியோ அனுப்பி மிரட்டல்.. நடிகர் ரன்வீர் சிங்கை அச்சுறுத்திய கேங்க்ஸ்டர் யார்?

2 hours ago 15

Last Updated:Feb 22, 2026 7:03 PM IST

ஆயிரத்து 400 கோடி ரூபாய் வசூலை தட்டி தூக்கிய துரந்தர் பட நாயகன், ரன்வீர்சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த இண்டர்நேஷ்னல் குற்றவாளி. பாலிவுட் வட்டாரத்தை ஆட்டம் காண வைத்த கேங்க்ஸ்டரை அடையாளம் கண்ட மும்பை போலீஸ். 

நடிகர் ரன்வீர் சிங்
நடிகர் ரன்வீர் சிங்

நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர் மும்பை போலீசாரால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டார்.

விர்ஜின் தீவுகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் சர்வதேச எண்ணிலிருந்து நடிகர் ரன்வீர் சிங்கின் மேலாளருக்கு, வாட்ஸ் ஆப்பில் வந்த வாய்ஸ் மெசேஜில் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் “ரன்வீர்சிங், உங்களையும், உங்களுடன் இருப்பவர்களையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே வருகிறோம். எங்களுக்குத் தேவை வெறும் 10 கோடி தான். பணத்தைத் தராவிட்டால் உங்களையும் நெருங்குவோம். மீறி போலீசிடம் சென்றால், அடுத்த ஏழு தலைமுறையினருக்கு அதன் விளைவுகள் நினைவிருக்கும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, ரன்வீர்சிங்கின் மேலாளர் விஜய் சுப்பிரமணியன் அளித்த புகாரில், மும்பை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவி தீபிகா படுகோனா வசிக்கும் மும்பை பிரபாதேவியில் உள்ள, பியூ மாண்டே குடியிருப்பு கட்டடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நடிகரின் தனிப்பட்ட பாதுகாவலர்களின் எண்ணிக்கையையும் கூட்டினர்.

பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்? நடிகர் சல்மான் கானை மிரட்டி வரும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவரா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அது தொடர்பாக மும்பை போலீசார் நடத்திய பல கட்ட விசாரணைக்குப் பின், ரன்வீரிடம் 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஹேரி பாக்சர் (Harry boxer) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தலைமறைவாக இருக்கும் ஹேரி பாக்சர், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் முக்கிய புள்ளி ஆவார். மும்பையில் உள்ள முக்கிய பிரமுகர்களை மிரட்டி, பணம் பறித்து வந்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க போலீசாருடன் இணைந்து ஹேரி பாக்சரை கைது செய்யும் முயற்சியில், மும்பை போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர். ஹேரி அமெரிக்காவில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பி ஓடிவிட கூடாது என்பதற்காக, லுக் அவுட் நோட்டீஸ் பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. தீவிர தேடுதலில் ஒரு வேளை ஹேரி பாக்சர் கைது செய்யப்பாட்டால் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு மும்பை போலீசார் கொடுத்த நெற்றியடியாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Location :

Mumbai,Maharashtra

Read Entire Article