சோதனையின்போது 50% விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு: அமைச்சர் தகவல்

11 hours ago 18

783a4781-28ef-44e1-b572-754f213774df

ஏர் இந்தியா குழுமத்தின் விமானங்களிலேயே அதிக விகிதத்தில் கோளாறுகள் கண்டறியப்பட்டன. - கோப்புப் படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: பாதுகாப்பாக உள்ளனவா என்று சோதிக்கப்பட்ட விமானங்களில் பாதிக்குப் பாதி கோளாறு கண்டறியப்பட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார்.

2025ஜனவரி முதல் இந்தாண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வரை 754 விமானங்கள் சோதிக்கப்பட்டபோது 377 விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததாக, நாடாளுமன்றத்தின் மக்களவையில் அவர் கூறினார்.

கோளாறுகளில் ஏர் இந்தியா குழுமத்தின் விமானங்களே முதலிடம் வகிக்கின்றன. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்னும் இருவகை விமானங்களை அந்தக் குழுமம் உள்ளடக்கி உள்ளது. அவற்றின் 267 விமானங்களில் சோதனை நடத்தப்பட்டபோது 191 விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இது 72 விழுக்காடு.

கோளாறு கண்டறியப்பட்ட 191 விமானங்களில் 54 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்றும் எஞ்சியவை ஏர் இந்தியா விமானங்கள் என்றும் இணை அமைச்சர் கூறினார்.

மீண்டும் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதும் அந்த விமானங்களில் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.

அதற்கு அடுத்து, இண்டிகோவின் 405 விமானங்களில் சோதனை நடத்தப்பட்டதில் 148 விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டன.

அதேபோல, 43 ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் சோதிக்கப்பட்டதில் 16 விமானங்களிலும் 32 ஆகாசா ஏர் விமானங்களில் 14 விமானங்களிலும் அத்தகைய கோளாறுகள் இருந்தது தெரியவந்தது.

விமானங்கள்மீது நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனை தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் முரளிதர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இருப்பினும், கடந்த மூன்றாண்டுகளில் விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு 353 தொழில்நுட்பக் கோளாறுகள் நிகழ்ந்தன. 2024ஆம் ஆண்டு 421, அதற்கு முந்திய 2023ஆம் ஆண்டு 448 என தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவாகியுள்ளதை முரளிதர் விளக்கினார்.

விமானம் மற்றும் விமானநிலையப் பாதுகாப்பில் மீறல்கள் அல்லது விதிமுறைகளுக்கு முரணானவை கண்டறியப்பட்டால், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அதன்மீது நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

நாடு முழுவதும் உள்ள தனியார் விமான நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு விமானங்களையும் அவ்வப்போது ஆய்வு செய்கின்றன. இதில், பல்வேறு வகையான உபகரணங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.

Read Entire Article