ஜனநாயகப் பண்பாட்டுடன் சட்டமன்றம் தொடங்கப் பெற்றது பாராட்டுக்குரியதே!

13 hours ago 15

ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய், பெரியார் நினைவிடத்தில் மரியாதை –
அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது சிறந்த நனிநாகரிகமாகும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான மாண்புமிகு ச.ஜோசப் விஜய், பெரியார் திடல் தொடங்கி, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றது நனி நாகரிகச் செயலாகும். சட்டப்பேரவையின் முதல் நாளில், அவை நடந்த பாங்கும் ஜனநாயகப் பண்பைக் கட்டிக் காப்பதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் நேற்று முன்தினம் (10.5.2026) பதவியேற்று, சில முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்ட பிறகு, தலைமைச் செயலகம் சென்று, பிறகு சென்னை பெரியார் திடலுக்கு தனது அமைச்சர்களோடு வந்து, நம்மைச் சந்தித்து வாழ்த்துகளையும், சில தெளிவுரைகளையும் பெற்று, தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செய்தார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு!

அதற்கு அடுத்த நாளான நேற்று (11.5.2026) தி.மு.க. தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது இல்லத்திற்குச் சென்று, அவரிடம் வாழ்த்துப் பெற்றார். மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரை கட்டித் தழுவி வரவேற்று, வாழ்த்துகளையும், அறிவுரைகளையும் தெரிவித்தார். அப்பொழுது உடனிருந்த  எதிர்க்கட்சித் தலைவர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் முதலமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

பேரறிஞர் அண்ணா தொடங்கி வைத்த நாகரிகம்!

அதன்பின் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மூத்த நாடாளுமன்றவாதியுமான மானமிகு வைகோ அவர்களையும் மற்றும் சில தலைவர்களையும் சந்தித்தது, ஒரு நல்ல பண்பாடு; விரும்பத்தகுந்த அரசியல் நனிநாகரிகம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி வைத்த ஒரு நல்ல அரசியல் நனிநாகரிக முத்திரை இது.

சட்டப் பேரவைத் தலைவர்,
துணைத் தலைவருக்கு வாழ்த்துகள்!

ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்களுக்கும், துணைத் தலைவர் திரு.ரவிசங்கர் அவர்களுக்கும் நமது வாழ்த்துகள்!

சட்டப் பேரவைத் தலைவர் நடுநாயகமாகி, அவையின் அனைத்து உறுப்பினர்களின் உரிமைக் காவலராகத் திகழ்வதே நாடாளுமன்ற – ஜனநாயகத்தின் முக்கிய அடிநாதமாகும்.

ஜனநாயகப் பண்பாடு தொடரட்டும்!

இன்று (12.5.2026) சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி வரிசைத் தலைவர்கள் –  முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனை வரும் கட்டிக் காத்த, ஜனநாயகப் பண்பாட்டுக்காக அனைவருக்கும் நமது மகிழ்ச்சி நிறைந்த பாராட்டுகள்!

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குமான ஆன ஒருவர் என்பது மரபும், மதிப்பீடும் ஆகும்! ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு, இலக்கணமான உரையாக அவரது உரை அமைந்திருந்தது.

இறுதியில் உரையாற்றிய முதலமைச்சர் அவர்க ளும், சட்டமன்றம், ஜனநாயகத்தின் சிறப்பைக் காக்கும் வகையில் அமையவேண்டும் என்பதைக் கூறி, அவை நடவடிக்கையை மிக சுமூகமாக முடித்ததற்குப் பாராட்டுகள்!

இதுபோன்ற ஓர் அறிவுப்பூர்வ நடவடிக்கையே பகுத்தறிவிற்கும், தமிழ்நாட்டிற்கும் உரிய தனித்தன்மையாகும். தொடரட்டும் இந்தப் பண்பு நலன்மிக்க நாகரிகம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

12.5.2026   

Read Entire Article