துபாய்: குப்பையில் தவறுதலாகப் போடப்பட்ட தங்கம் 3 நாள்களில் மீட்பு

2 hours ago 16

ad3fac18-dd51-442c-b100-5d757612c934

மீட்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 12 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. - சித்திரிப்பு: செயற்கை நுண்ணறிவு

துபாய்: இந்தியாவிலிருந்து துபாய் சென்றிருந்த ஒரு பெண், தங்கம் வைத்திருந்த ஒரு சிறு பை, தவறுதலாகக் குப்பையில் வீசப்பட்டுவிட்டது. அதிலிருந்த தங்கத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 12.32 லட்சம் ரூபாய் (S$17,340).

ஆனால், மூன்று நாள்களுக்குப்பின் அந்தச் சிறு பை அவர் மகனிடம் சேர்ப்பிக்கப்பட்டது. கழிவுகளை அகற்றும் நிலைய ஊழியரின் நற்செயலும் துபாய்க் காவல்துறையின் முனைப்பும் இதனைச் சாத்தியமாக்கியதாகக் கலீஜ் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

காமினி கண்ணன் எனும் அப்பெண், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் 23 ஆண்டுகள் வசித்தபின் கடந்த 2021ல் தாயகம் திரும்பினார்.

அண்மையில் குடும்பத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொள்வதற்காக அவர் துபாய் சென்றிருந்தார். வழக்கமாகத் தங்கம் போன்ற விலைமதிப்புமிக்க பொருள்களைச் சேமிக்கும் தனது சிறு பை மிகவும் பழையதாகிவிட்டதைக் கண்ட காமினி, ஜனவரி 31ஆம் தேதி, வேறொரு சிறு பைக்கு அதை மாற்றியபின் உணவு மேசையில் அப்பையை வைத்தார்.

அந்தப் பையில் எட்டு கிராம் எடையுள்ள நான்கு தங்கக் காசுகளும் 50 கிராம் எடையுள்ள தங்கக் கட்டி ஒன்றும் இருந்தன.

அன்று பின்னேரம் அறையைச் சுத்தப்படுத்தும்போது அந்தச் சிறு பை தவறுதலாகக் குப்பையில் வீசப்பட்டது. பிப்ரவரி 1ஆம் தேதி காலையில்தான் குடும்பத்தினருக்கு இது தெரியவந்தது.

மறுநாள் காமினி இந்தியா திரும்ப வேண்டும். பதற்றம் தொற்றிக்கொள்ள, மொத்தக் குடும்பமும் பரபரப்புடன் தேடிப் பார்த்தும் சிறு பை கிடைக்கவில்லை. அப்போதுதான் காமினியின் மகன் அபிமன்யு, அந்தப் பையைத் தவறுதலாகத் தான் குப்பையில் வீசிவிட்டதை உணர்ந்தார்.

துபாய்க் காவல்துறையின் முனைப்பும் கழிவு ஊழியரின் நேர்மையும்

கைவிட்டுப் போன தங்கம் இனி கிடைக்காது என்று நினைத்திருந்த வேளையில் பிப்ரவரி 4ஆம் தேதி, காவல்துறையினர் அபிமன்யுவைத் தங்கள் நிலையத்திற்கு வருமாறு தொலைபேசியில் அழைத்தனர்.

பின்னர் தங்கம் வாங்கிய ரசீதுகள் உட்பட அதன் உரிமையாளர் என்பதற்கான ஆதாரங்களைச் சரிபார்த்த காவல்துறை அபிமன்யுவிடம் காமினியின் சிறு பையை ஒப்படைத்தனர். அதிகாரிகள் மிகவும் கனிவாக நடந்துகொண்டதாகக் கூறினார் அபிமன்யு.

குப்பையைப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர், காமினியின் சிறு பையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டது. துபாயின் புகழ்பெற்ற தங்கச் சந்தையான ‘கோல்ட் சௌக்’கிற்கு அதை எடுத்துச் சென்ற அந்த ஊழியர், தாம் குப்பையில் அப்பையைக் கண்டெடுத்ததாகச் சொன்னார். அந்தத் தகவலின் அடிப்படையில் காமினியின் மகனைக் காவல்துறை அணுகியது.

“இதுபோன்ற அதிசயம் வேறெங்கும் நடக்குமா என்பது சந்தேகமே,” என்கிறார் காமினி.

Read Entire Article