டுகோனோ மலையில் மீட்புப் பணி: இந்தோனீசியாவுக்கு நன்றி தெரிவித்த சிங்கப்பூர்

12 hours ago 8

c13cc70c-bfa2-4e82-8d6a-e9a8d16a3c81

ஜகார்த்தாவில் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோவை நேரில் சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: டுகோனோ மலையில் உயிரிழந்த இரு சிங்கப்பூரர்களின் உடல்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்காக இந்தோனீசியாவுக்கு சிங்கப்பூர் நன்றி தெரிவித்துள்ளது.

அந்தச் சம்பவத்தில், 150க்கும் மேற்பட்ட இந்தோனீசிய மீட்புப் பணியாளர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து அந்த இரு உடல்களையும் மீட்டதற்காக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோவிடம் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த நடவடிக்கை இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான ஆழமான பிணைப்பைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜகார்த்தாவில் செவ்வாய்க்கிழமை (மே 12) நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் பேசிய டாக்டர் விவியன், “இதுபோன்ற செயல்களைப் பணம் கொடுத்து வாங்கவோ கேட்டுப் பெறவோ முடியாது. நம்பிக்கையோடு காத்திருக்க மட்டுமே முடியும். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் வலிமையைச் சார்ந்திருக்க வேண்டும்,” என்றார்.

இந்தோனீசியாவின் வடக்கு மாலுக்கு மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 8) எரிமலை வெடித்ததில் மலையேற்ற வீரர்கள் மூவர் உயிரிழந்தனர். அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள். மூன்றாமவர் இந்தோனீசிய மாது.

அந்தச் சம்பவத்தில் தேடி, மீட்கும் நடவடிக்கையைச் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து அணுக்கமாகக் கவனித்து வந்ததாகவும் இந்தோனீசியப் படையினரின் பாதுகாப்புக்காகப் பிரார்த்தனை செய்ததாகவும் டாக்டர் விவியன் தெரிவித்துள்ளார்.

தொடர் எரிமலை வெடிப்புகள், அடர்த்தியான எரிமலை சாம்பல், மோசமான வானிலை ஆகியவற்றுக்கு மத்தியில் அபாயகரமான சூழலில் இந்தோனீசிய மீட்புப் படையினர் பணியாற்றியதைச் சிங்கப்பூரர்கள் உற்றுநோக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நெருக்கடியான சூழலில் ஒருவருக்கு ஒருவர் இயல்பாகவே துணையாக நின்று, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ளும் இத்தகைய மனப்பாங்கு இந்தோனீசியர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையிலான உளப்பூர்வ நெருக்கத்தைக் காட்டுகிறது,” என்றும் டாக்டர் விவியன் செய்தியாளர்களிடம் கூறினார்.

“நாம் தற்போது சாதாரண காலகட்டத்தில் இல்லை. உலகளாவிய நிச்சயமற்ற தன்மையை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்ளும் நிலையிலும் 2027ஆம் ஆண்டு ஆசியானுக்குத் தலைமை தாங்கச் சிங்கப்பூர் தயாராகி வரும் வேளையிலும் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கக்கூடிய முக்கியமான தருணத்தில் உள்ளோம்,” என்றார் அவர்.

மே 11 முதல் 13 வரை இந்தோனீசிய வருகை மேற்கொண்டுள்ள டாக்டர் விவியனுடன் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் சிலரும் சென்றுள்ளனர்.

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் தங்களுக்கு இடையிலான 60ஆம் ஆண்டு அரசதந்திர உறவை அடுத்த ஆண்டு கொண்டாட உள்ளன.

Read Entire Article