டீபக் நிறுவனம் ஒரு வாரத்திற்கு10 மில்லியனுக்கும் அதிகமான ‘வொல்பாக்கியா’ கொசுக்களை உற்பத்தி செய்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமாமான கூகல்,கொசுக்களால் பரவும் டெங்கி உள்ளிட்ட நோய்களைகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
அதற்காக ‘டீபக்’ (Debug) என்னும் கொசு ஒழிப்பு நிறுவனத்தை கூகல் தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாகச் சிங்கப்பூரின் காக்கி புக்கிட் வட்டாரத்தில் உள்ள ‘டீபக்’ கொசு ஒழிப்பு நிலையத்தின் பரப்பளவை 20,000 சதுர அடியிலிருந்து 28,000 சதுர அடியாக கூகல் விரிவுபடுத்துகிறது. அத்துடன் தனது ஆராய்ச்சி, மேம்பாட்டுத் திறன்களையும் மேம்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை (மே 12) டீபக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
மென்பொருள் பொறியாளர்கள், கொசு தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டவர்களை வேலைக்கு எடுக்கவும் டீபக் திட்டமிட்டுள்ளது.
எத்தனை பேர் வேலைக்கு எடுக்கப்படுவார்கள் என்ற எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை. தற்போது அந்த நிறுவனத்தில் 20 பேர் வேலை செய்கின்றனர்.
கொசு ஒழிப்பு நிலையத்தின் பரப்பளவை அதிகரிப்பதன்மூலம் சிங்கப்பூரின் ‘வோல்பாக்கியா’ திட்டத்தை மேலும் மெருகேற்ற முடியும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுக்களைத் தானியங்கி முறையில் வெளியேற்றுவது, கொசுக்களின் பாலினத்தை அடையாளம் காண்பது, கொசு உற்பத்தி ஆகியவற்றை ஆராயவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் விதமாகவும் டெங்கிப் பரவலை முறியடிக்கும் நோக்கத்திலும் 2016ஆம் ஆண்டு ‘வோல்பாக்கியா’ திட்டம் தொடங்கப்பட்டது.
ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்பட்ட ஆண் கொசுக்கள் ‘வோல்பாக்கியா’ கிருமியை ஏந்திச் செல்லும். அவை குடியிருப்புப் பகுதிகளில் விடப்படும்போது பெண் கொசுக்களுடன் இனப்பெருக்க நடவடிக்கையில் ஈடுபடும். அதன்பின்னர், பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பொரிக்காது. இதனால் காலப்போக்கில் கொசுக்களின் எண்ணிக்கை குறைகிறது.
சிங்கப்பூரில் ‘வோல்பாக்கியா’ கிருமியை ஏந்திச் செல்லும் கொசுக்களை உற்பத்தி செய்ய இரண்டு நிலையங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் காக்கி புக்கிட் நிலையம். மற்றொரு நிலையம் தேசியச் சுற்றுப்புற அமைப்பின் கீழ் செயல்படுகிறது.
டீபக் நிறுவனம் ஒரு வாரத்திற்கு10 மில்லியனுக்கும் அதிகமான ‘வோல்பாக்கியா’ கொசுக்களை உற்பத்தி செய்கிறது. 2024ஆம் ஆண்டு அது வாரத்துக்கு 6 மில்லியன் ‘வோல்பாக்கியா’ கொசுக்களை உற்பத்தி செய்தது.
தேசியச் சுற்றுப்புற அமைப்பின்கீழ் செயல்படும் நிலையத்தில் வாரம் கிட்டத்தட்ட 5 மில்லியன் ‘வோல்பாக்கியா’ கொசுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
.png)





English (US) ·