திருச்சியில் துரை வைகோ தலைமையில் DISHA கூட்டம் – வளர்ச்சி திட்டங்கள் முன்னேற்றம், புதிய கோரிக்கைகள் பதிவு

5 hours ago 12

ஒன்றிய அரசின் திட்டங்களை சரியான முறையில், கடைகோடி மக்களும் பயன் பெரும் வகையில் செயல்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்வதற்கும், செயல்படுத்தும் திட்டங்களில் ஏற்படும் இடையூறுகளை நீக்கி மேம்படுத்துவதற்காகவும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் நடைபெறுகின்றன.

மாநில அரசின் நிதி பங்களிப்போடு பல ஒன்றிய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நான் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பிறகு எனது தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும் மூன்றாவது கூட்டம், இன்று (13.10.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி செ.ஜோதிமணி, மாநிலங்களவை உறுப்பினர் சகோதரி ராஜாத்தி, அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், விவாதிக்கப்பட்ட திட்டங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள், எழுப்பப்பட்ட கோரிக்கைகளை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திருச்சி மாநகராட்சியில், பாதாள வடிகால் பணிகள் (UGD) phase 2: 99.02%, phase 3: 92.25%, phase 4: 15.30% நிறைவடைந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முழு பணி எப்போது முடியும் என்றும், phase 5 எப்போது தொடங்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

பணியின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், காட்டூர், திருவெறும்பூர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளின் போது தவறுதலாக துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் மாநகராட்சியை வலியுறுத்தினேன்.

அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றும் பணிகளை விரைவாக முடிக்கவும், அந்த இடத்தில் IT SEZ திட்டம் குறித்து தெளிவுபடுத்தவும் மாநகராட்சியை கேட்டுக்கொண்டேன்.

திருவெறும்பூர் ரயில் நிலைய சாலை, காவேரி நகர் 2வது தெரு ஆகியவற்றை அகலப்படுத்தவும், புத்தூர் மால் எந்த நிலையில் உள்ளது என்றும், வைர்லெஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி EB transformer ஐ சாலை விரிவாக்கத்திற்கு தகுந்தார்போல் மாற்றி அமைக்கவும் மாநகராட்சியை கேட்டுக்கொண்டேன்.
பொன்மலை பொன்னேரிபுரம் மாவடி குளத்திற்கு வரும் வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகள் தடையாக உள்ளன. இவற்றை அகற்ற உடனடி நடவடிக்கை தேவை என்று மாநகராட்சியை கோரினேன்.

திருவெறும்பூர் பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் உள்ள அரசு அலுவலகங்களை வேறு இடங்களுக்கு மாற்றும் நிலை குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டேன். மற்றும் துவாக்குடியில் முன்மொழியப்பட்ட பஸ் நிலையத்திற்கு இடம் அடையாளம் காணப்பட்டதா என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டதுடன், அது ரிங் ரோடு அருகே அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எனது கருத்தை தெரிவித்தேன்.

நீர் வளங்கள் புதுப்பிப்பு (RRR) திட்டத்தில், திருவெறும்பூர் பெரியகுளத்தை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டேன். பறவைகள் வாழிடமாகவும், பார்வை மையமாகவும் மாற்றுவதற்கு இது பயன்படும் என்று சுட்டிக்காட்டினேன்.

கண்ணுடையான்பட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க 19.06.2025 அன்று மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினேன். எனது கோரிக்கையின் நிலையை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) Ring road மற்றும் பஞ்சப்பூர் உயர்மட்டபாலம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து, அதன் தற்போதைய நிலையை தெளிவுபடுத்த வேண்டுமாறு கேட்டுள்ளேன்.

ஒலிம்பிக் அகாடமி பணிகளின் நிலை மற்றும் நிறைவு தேதியை தெரிவிக்குமாறு மாநில விளையாட்டு ஆணையத்திடம் கோரினேன்.

ஆலம்பட்டி புதூரில் வங்கி கிளை தொடங்க 02.02.2025 அன்று கடிதம் அனுப்பப்பட்டு, 20.06.2025 அன்று ஆய்வு நடந்தது. இதன் முன்னேற்றத்தை தெரிவிக்க Lead bank அதிகாரியிடம் வேண்டினேன்.

முத்தரசநல்லூர், பழூர் ஆகிய கிராமக்களிலும் மற்றும் திருச்சி இரயில் நிலையத்தில் சில இடங்களில் BSNL சிக்னல் பிரச்சனை உள்ளது. இதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கேட்டுள்ளேன்.

நான் கடந்த 02.10.2025 அன்று மாரிஸ் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டேன். அப்போது பார்த்தபோது, இரயில்வே பிரிவின் பணிகள் நிர்வாக காரணங்களால் சுமார் இரண்டு மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன். மக்கள் மற்றும் வியாபாரிகள் இந்த பாதையை பயன்படுத்த முடியாமல் சுற்றி வருவதை எடுத்து கூறி துரிதமாக பணிகளை முடிக்குமாறு கேட்டு கொண்டேன்.தற்போது இரயில்வே அதிகாரிகள் தங்களின் பணிகளை 2026 பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிக்க உறுதியளித்துள்ளனர். இந்த இரயில்வே துறையின் உறுதியை கடைப்பிடிக்க வேண்டும். இரயில்வே பணி முடியும் பட்சத்தில் மாநகராட்சி பாலத்தை இணைக்கும் பணிகளை மேற்கொண்டு மே மாதம் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தனர்.

கடந்த 02.10.2025 திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள அரிஸ்டோ பாலம் பணிகளை நேரில் பார்வையிட்டேன். அப்போது ரயில்வே துறை தங்களுடைய பணிகளை ஜனவரி மாதத்திற்குள் முடிக்க உறுதியளித்தது. இதன் பின் மாநில நெடுஞ்சாலைத்துறை பணிகளும் நடைபெற்று முடிந்தால் ஜூன் மாதம் பாலம் பயன்பாட்டுக்கு வரும்.
நான் இதுகுறித்து ஒரு கடிதத்தின் மூலம் பணிகள் நிறைவு பெறும் கால அட்டவணையை இரயில்வே மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வழங்குமாறு கேட்டுள்ளேன்.

திருவெறும்பூர் ரயில் நிலைய சாலையை காவேரி நகருடன் இணைக்கவும். திருச்சி ரயில் நிலைய லிஃப்ட், எஸ்கலேட்டர் சரிசெய்யப்பட வேண்டும். பொன்மலை ரயில்வே பகுதி சாலைகளை மறுசீரமைக்கவும் வேண்டுமென இரயில்வே அதிகாரிகளை கேட்டுக்கொண்டேன்.

திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய விமான நிலைய டெர்மினல் நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்குமாறு காவல் துறையிடம் கோரிக்கை விடுத்து, கடிதம் அனுப்பியுள்ளேன்.

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் வரை Median விளக்குகள் அமைக்க வேண்டும் என்று முந்தைய கூட்டத்தில் கோரியிருந்தேன். இது 2026-ல் செய்யப்படும் என NHAI உறுதியளித்துள்ளது. ஆனால், பஞ்சப்பூர் பஸ் டெர்மினஸ் இயங்கி வருவதால், இந்தப் பணியை இந்த ஆண்டுக்குள் அல்லது 2026 ஆரம்பத்தில் முடிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன்.

மேலும், பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரையிலான ரிங் ரோடு பணிகளை விரைவுபடுத்தவும், நாகமங்கலம் சர்வீஸ் சாலை மற்றும் திருச்சி – திண்டுக்கல் சாலையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வடிகால் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் NHAI ஐ கேட்டுள்ளேன்.

திருச்சியை தலைமையகமாகக் கொண்டு புதிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி கோட்டம் TNSTC -Trichy அமைக்க வேண்டும் என்றும், Ultra Low Floor பேருந்துகளுக்கு சேலத்தில் LSS கட்டணமும், திருச்சியில் டிலக்ஸ் கட்டணமும் வசூலிக்கப்படுவதற்கு தெளிவான விளக்கம் TNSTC யிடம் கோரினேன்.

குறிப்பாக நான் நன்றி தெரிவித்துக்கொண்ட சில சந்தர்ப்பங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சுபதம் நகர் குடியிருப்போர் சங்கத்தினர், தங்கள் பகுதியில் புதிய மதுபானக் கடை திறப்பதைத் தடுக்க கோரி 23.07.2025 அன்று மனு அளித்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு நான் கடிதம் அளித்தேன். ஆட்சியர் அவர்கள் கடை திறக்கப்படாது என உறுதியளித்து, இதுவரை அதை நிறைவேற்றியுள்ளார். அதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்தேன்.

மாநில நெடுஞ்சாலைத் துறை, ELCOT IT Park 100 அடி சாலையில் இடைவெளிகளை நிரப்புவதற்கும், சோழமாதேவி பழைய பாலத்தை மாற்றுவதற்கும் விரிவான திட்ட அறிக்கை (DPR) அனுப்பி நிதி கோரியதற்கும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன்.

திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிப்பு பணிக்கு டெண்டர் வழங்கப்பட்டு, ஒப்பந்தக்காரர் உடனடியாக பணியைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. துவாக்குடி – பால்பண்ணை பகுதியில் கூடுதல் மின்விளக்குகள் பொருத்தியதற்கும், குடியிருப்போர் நலச் சங்கத்தினருடன் ஆய்வு நடத்தி பணிகளை முடிக்க உறுதியளித்ததற்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன்.

திருச்சி – தாம்பரம் இடையே இயக்கப்பட்டுவரும் சிறப்பு இரயில், திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்றுசெல்ல வேண்டும் என்ற எனது கோரிக்கையை, திருச்சி கோட்ட மேலாளர் அவர்கள் தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு பரிந்துரை செய்துள்ளார். பொது மேலாளர் அவர்களிடமிருந்து அதற்கான ஒப்புதல் விரைவில் கிடைத்து, திருச்சி – தாம்பரம் இடையே இயக்கப்பட்டுவரும் சிறப்பு இரயில், திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என்ற நற்செய்தியை தங்களுடன் பகிந்துகொள்கிறேன். இதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.

சென்ற ஆய்வுக் கூட்டத்தில் சோழமாநகர் முதல் போலீஸ் காலனி வரை உள்ள சாலையை புதிதாக அமைத்து தர வேண்டி கோரிக்கை வைத்திருந்தேன் அதையும் நிறைவேற்றிக் கொடுத்த ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தேன்.

இந்தக் கூட்டத்தில் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள பல முக்கிய முடிவுகள் மற்றும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.

மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, மாவட்டத் திட்ட அலுவலர் திருமதி. கங்காதரணி, காவல்துறை போக்குவரத்து மற்றும் அனைத்துத் துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் DISHA கமிட்டி உறுப்பினர்களான
மருத்துவர் ரொஹையா, பொன்மலை ஜெயசீலன், ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி.சேரன் ஆகியோர் உடனிருந்தனர் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

Read Entire Article