திருப்பூர்: ஏழை எளியோருக்கு உதவும் கரங்களாக மாறிய அரசுப்பள்ளி ஆண்டு விழா! - ஒரு நெகிழ்ச்சி தருணம்

2 hours ago 15

கடந்த ஆண்டும் இதேபோல ஆசிரியர்களின் முயற்சியால் இரு நலிந்த குடும்பங்களுக்கு முறையே 'டிபன் கடை' மற்றும் 'பழக்கடை' அமைத்துக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published:Just NowUpdated:Just Now

 அரசுப்பள்ளி ஆண்டு விழா

திருப்பூர்: அரசுப்பள்ளி ஆண்டு விழா

மனிதம் மலரும் கல்விக்கூடம்

கல்வி என்பது வெறும் புத்தகத்தில் படிப்பது அல்ல. அது ஒரு சமூகத்தை முன்னேற்றும் கருவி என்பதைத் திருப்பூர் பூலுவபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மாணவர்களின் கலைத்திறனைப் போற்றும் ஆண்டுவிழா மேடையை, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அறப்பணியாக மாற்றிய அந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பற்றிப் பார்ப்போம்.

திருப்பூர் வடக்கு, பூலுவபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 690 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் வருடாந்திர ஆண்டுவிழா அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களைத் தலைமை ஆசிரியை ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா வரவேற்றுப் பேசினார்.

 ஏழை எளியோருக்கு உதவும் கரங்களாக மாறிய அரசுப்பள்ளி ஆண்டு விழா! - ஒரு நெகிழ்ச்சி தருணம்

சிறப்பு விருந்தினர்களாக நான்காம் வார்டு உறுப்பினர் முத்துச்சாமி, முன்னாள் கல்விக்குழு தலைவர் பட்டுலிங்கம் மற்றும் லயன் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு, 'எஸ்.டி எக்ஸ்போர்ட்ஸ்' (S.T. Exports) நிர்வாக இயக்குநர் லீலாவதி திருக்குமரன் விருதுகளை வழங்கினார். அதேபோல், 'ஸ்டார் ஆஃப் த இயர்' (Star of the Year) விருது பெற்ற 18 மாணவ, மாணவியருக்கு 'சுப்ரீம் பேரடைஸ்' நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் சிறப்புப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

துயர் துடைத்த கரங்கள்:

இந்த விழாவின் மிக முக்கியமான மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது மாணவி தாராவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உதவி. இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி தாராவின் தந்தை ஜெயபால், எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தவர் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு கையை இழந்தார். வருமானமின்றித் தவித்த அவரது குடும்பத்திற்கு உதவும் நோக்கில், பள்ளி ஆசிரியர்கள் முன்னெடுத்த முயற்சி பெரும் பலன் தந்தது.

 ஏழை எளியோருக்கு உதவும் கரங்களாக மாறிய அரசுப்பள்ளி ஆண்டு விழா! - ஒரு நெகிழ்ச்சி தருணம்

சென்னை 'கழுகு அறக்கட்டளை' (Kazhugu Foundation) உதவியுடன், சுமார் 60,000 ரூபாய் மதிப்பிலான நான்கு தையல் இயந்திரங்கள் (2 ஓவர்லாக், 1 பேட்லாக் மற்றும் 1 சிங்கர் மெஷின்) விழா மேடையிலேயே அக்குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டன. மூன்று பெண் குழந்தைகளைக் கொண்ட தங்களுக்கு, வாழ்வாதாரத்தை மீட்டுத்தந்த இந்த உதவி மிகப்பெரிய வரப்பிரசாதம் என ஜெயபால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 ஏழை எளியோருக்கு உதவும் கரங்களாக மாறிய அரசுப்பள்ளி ஆண்டு விழா! - ஒரு நெகிழ்ச்சி தருணம்

தொடரும் அறப்பணி..

இந்தத் தொண்டு இப்பள்ளியில் இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் இதேபோல ஆசிரியர்களின் முயற்சியால் இரு நலிந்த குடும்பங்களுக்கு முறையே 'டிபன் கடை' மற்றும் 'பழக்கடை' அமைத்துக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்குப் பாடத்தோடு சேர்த்துப் பண்பையும், சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையையும் இப்பள்ளி கற்றுக்கொடுத்த வருகிறது. வெறும் மதிப்பெண்களை மட்டும் குறிவைக்காமல், ஒரு மாணவியின் குடும்பச் சூழலை உணர்ந்து தோள் கொடுத்த பூலுவபட்டி பள்ளி ஆசிரியர்களின் செயல், மற்ற கல்வி நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது..!

Read Entire Article