ரொக்கப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தங்க நகைகளை ஏற்றுக்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பதாகத் தெரிவிக்கும் சுவரொட்டிகளை மலேசியாவில் உள்ள பல அடகுக்கடைகள் கடைகளுக்கு வெளியே வைத்துள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
கோலாலம்பூர்: தங்க விலை முன்னில்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. மலேசிய அடகுக்கடைகளில் ரொக்கப் பற்றாக்குறையை இது ஏற்படுத்தியுள்ளது.
இதனால், நாடி வரும் வாடிக்கையாளர்களை சில அடகுக்கடைகள் வெறுங்கையுடன் அனுப்பிவிடுகின்றன.
ரொக்கப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தங்க நகைகளை ஏற்றுக்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பதாகத் தெரிவிக்கும் சுவரொட்டிகளை மலேசியாவில் உள்ள பல அடகுக்கடைகள் கடைகளுக்கு வெளியே வைத்துள்ளன.
தங்க நகையை அடகுவைத்துப் பணம் வாங்க வருவோருக்குக் கடன் கொடுக்க முடியாத நிலை அடகுக்கடைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள் ஆகியவை நெருங்கும் வேளையில் இத்தகைய சூழல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கார் பழுதுபார்ப்பு, மருத்துவக் கட்டணம், பள்ளிக் கட்டணம் போன்ற குடும்பச் செலவுகளுக்கு அவசரமாக ரொக்கம் தேவைப்படும்போது மலேசியர்கள் பலர் தங்க நகைகளை அடகு வைப்பது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.
பலர் தங்க நகைகளை அடகுவைத்து கடன் வாங்குவதாலும் அடகுக்கடைகளுக்கு ரொக்கப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மலேசியப் புத்ரா பல்கலைக்கழகத்தின் புத்ரா வர்த்தகப் பள்ளியைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் டாக்டர் அகமது ரஸ்மான் அப்துல் லத்திஃப் தெரிவித்தார்.
குறைவான சம்பளம் , அதிகரிக்காத சம்பளம், உயரும் வாழ்க்கைச் செலவினம், கடன் வாங்கும் நிலை அதிகரித்திருப்பது ஆகியவற்றின் விளைவாக அடகுக்கடைகளில் ரொக்கப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பல குடும்பங்கள் சிரமப்படுவதை இது காட்டுவதாக அவர் கூறினார்.
.png)







English (US) ·