
2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் நடித்தவர் ஸ்ருதிகா. அடுத்தடுத்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார். ஸ்வப்னம் கொண்டு துலாபாரம் என்ற மலையாள படத்திலும் நடித்தார் ஸ்ருதிகா.
நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா, நடிகர் யோகியின் கஸின் ஆவார். நடிப்பு வராததால் சினிமாவுக்கு முழுக்குப் போட்ட ஸ்ருதிகா, அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இவர்களுக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறார்.
விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சினிமாவை விட அதிக கவனம் பெற்றார். அவரின் வெகுளித்தன பேச்சு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
அதோடு சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு ஹேப்பி ஹெர்ப்ஸ் என்னும் ஸ்கின் கேர் பிராண்டை தொடங்கினார் ஸ்ருதிகா. தொடர்ந்து பிக் பாஸ் இந்தி 18வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். 94 நாட்கள் பிக்பாஸில் இருந்தவர், அதன்பின் எலிமினேட் ஆனார். தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவந்தார்.
இதற்கிடையே, நடிகை ஸ்ருதிகா அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக வீடியோ வெளியிட்டு இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு என்ன ஆனது?.
ஸ்ருதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். அதில், ஒரு வீடியோவில் மருத்துவமனையில் அவர் இருப்பதும், இன்னொரு வீடியோவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு திரும்பும் காட்சிகளும் உள்ளன. இரண்டு வீடியோவிலும் வயிற்றில் கைவைத்தவாறு வேகம் குறைந்து நடக்கிறார்.
முதல் வீடியோ உடன் வெளியிட்ட பதிவில், "சரியாக ஒரு வருடம் முன்பு, இதே நாளில், நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன். என் வாழ்க்கையின் மறக்க முடியாத அத்தியாயங்களில் ஒன்றை வாழ்ந்தேன். நான் நினைத்துப் பார்க்காத விதத்தில் என் வலிமை, பொறுமை மற்றும் உணர்ச்சிகளை சோதித்த ஒரு பயணம் அது. இன்று, ஒரு வருடம் கழித்து, நான் முற்றிலும் மாறுபட்ட உலகில் என்னைக் கண்டேன். ஆனால், கேமராக்களோ லைட்களோ என்னை சூழவில்லை.
மாறாக, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் வலிமை என்னை சூழ்ந்திருந்தது. அதனுடன் ஒரு பெரிய அறுவை சிகிச்சை தொடங்கியது. அது வாழ்க்கையை மாற்றும் மற்றொரு அனுபவமாக மாறியது. கருணையுடன் நம்பிக்கையின் சக்தியை அது எனக்கு நினைவூட்டியது." என்று கூறி மருத்துவமனையில் தனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
ஒரு பக்கம் வலியுடன் மருத்துவமனையிலும் சரி, வீட்டிலும் சரி கஷ்டப்பட்டு நடந்தாலும் தனது வழக்கமான புன்சிரிப்பை முகத்தில் ஸ்ருதிகா வெளிப்படுத்தும் காட்சிகளும் அந்த வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. ஆனால், தனக்கு என்ன சிகிச்சை நடந்தது என்பது பற்றி எந்த தகவலையும் நடிகை ஸ்ருதிகா வெளியிடவில்லை. இதனால் அவருக்கு என்ன ஆனது ரசிகர்கள் அவரது இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி எழுப்பி அக்கறை காட்டி வருகின்றனர்.