நியூட்டன் விதியை மீறுகிறதா பறவைக் கூட்டம்?

59 minutes ago 6

ஒவ்வொரு வினைக்கும், சமமான எதிர்வினை உண்டு என்கிறது நியூட்டனின் மூன்றாம் விதி. ஆனால், பறவைக் கூட்டங்கள், பாக்டீரியா கூட்டமைப்புகள் மற்றும் நகரும் செல்கள் ஆகியவை இவ்விதியைப் புறக்கணிகின்றனவோ என்று அறிவியலாளர்கள் சந்தேகிக்கின்றனர். பறக்கும் பறவைக் கூட்டத்தில், ஒரு பறவை தனக்கு முன்னால் அல்லது பக்கவாட்டில் உள்ள பறவைகளின் அசைவுகளுக்கு மட்டுமே எதிர்வினை ஆற்றுகிறது. மோதலைத் தவிர்க்கிறது. தனக்குப் பின்னால் உள்ள பறவைகளை கவனிப்பதில்லை. இத்தகைய ஒருதலைப்பட்ச தொடர்புகள், அடிப்படை இயற்பியல் விதியை மீறுவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. என்றாலும், ஜெர்மனியின் டிரெஸ்டன் தொழில் நுட்ப பல்கலைக்கழக அறிவியலாளர்கள், இதற்கு ஒரு புதிய கணித விளக்கத்தைக் கண்டறிந்துள்ளனர்.
அறிவியலாளர்களின் இந்த தீர்வு, எதிர்பாராவகையில் மிக நேர்த்தியாகவும் அமைந்துள்ளது. அதாவது, தங்களது கணிதக் கணக்கீடுகளில் ‘கற்பனைத் துணைகளை’ (Imaginary partners) அறிமுகம் செய்தனர். இந்த சமச்சீரற்ற அமைப்புகளில், விடுபட்ட சமநிலையை, இக்கற்பனைக் கூறுகள் இட்டு சமன் செய்கின்றன. இதன் வாயிலாக, நியூட்டனின் விதிகளை மாற்றி எழுதாமல், ஆற்றலை நுகர்ந்து சுயமுடிவெடுக்கும் கூறுகளாலான ‘இயங்கு பருப்பொருள்’ (Active matter) அமைப்புகளைப் புரிந்துகொள்ள இந்த கணித மாதிரி உதவுகிறது.
இந்த கண்டுபிடிப்பின் பயன்கள், பறவைக் கூட்ட ஆய்வோடு நிற்பதில்லை. பாக்டீரியா காலனிகள், மனிதக் கூட்ட நெரிசல், ரோபோடிக்ஸ் மற்றும் மனித திசுக்கள் போன்ற பல துறைகளுக்கும் இந்த புதிய விளக்கம் பொருந்தும். தானியங்கி ரோபோக்கள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்த இக்கூட்டு நடத்தை பற்றிய புரிதல் பெரிதும் உதவும். இயற்கை, பாடப்புத்தகங்களை விட விசித்திர மானது. ஆனால், அதே நேரத்தில் ஒழுங்கானது என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

Read Entire Article