நீடித்த நிலைத்தன்மை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ள குமரன் தமிழ்ச்செல்வம், 35. - படம்: தேசியச் சுற்றுப்புற வாரியம்
மேற்படிப்பு பயில்வதற்காக நீடித்த நிலைத்தன்மை உபகாரச் சம்பளத்தை பெற்றுள்ளார் குமரன் தமிழ்ச்செல்வம், 35.
தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் அணுசக்திப் பாதுகாப்புப் பிரிவில் மூத்த அறிவியல் அதிகாரியாகப் பணியாற்றி வரும் இவர், ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் நீடித்த நிலைத்தன்மை உபகாரச் சம்பளம் வழங்கும் விழாவில் உபகாரச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டார்.
தென்கொரியாவின் கேஐஎன்எஸ், (KINS) கேஏஐஎஸ்டி (KAIST) கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் அனைத்துலக அணுசக்தி, கதிர்வீச்சுப் பாதுகாப்பு முதுநிலைப் பட்டப்படிப்பை குமரன் மேற்கொள்ளவிருக்கிறார்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு, தேசியச் சுற்றுப்புற வாரியம், பொதுப் பயனீட்டுக் கழகம், சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகிய நான்கு அமைப்புகள் இணைந்து சிங்கப்பூர் நீடித்த நிலைத்தன்மை உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகின்றன.
இவ்வாண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 16 பேருக்கு இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. நிபுணத்துவம் பெற விரும்பும் 14 அதிகாரிகளுக்குப் பணியிடைக்கால உயர்கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டிலிருந்து 309க்கும் மேற்பட்ட உபகாரச் சம்பளங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுப்புற நிலைத்தன்மை, நீர்வளக் கடப்பாடு, உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளில் எழும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் உபகாரச் சம்பளம் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும்.
படிப்பை முடித்த பிறகு அவர்கள் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு அல்லது அதன் சட்டபூர்வ அமைப்புகளில் தங்களது பணியைத் தொடங்குவர்.
“பருவநிலைத் தகவமைப்புக்கு அமைதியும் புத்தாக்கச் சிந்தனையும் தேவைப்படும். எளிய தீர்வுகள் இல்லாத பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிச்சல் அவசியமாகும்,” என்றார் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.
“இன்று இந்த அரங்கில் இருக்கும் மாணவர்களின் திறமை மீதும் அர்ப்பணிப்பு மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கேற்றவாறு அவசரகாலத் தயார்நிலை, நடவடிக்கை, திட்டமிடல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஆசியான் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதும் குமரனின் பணியில் அடங்கும்.
தேசியச் சுற்றுப்புற வாரியத்தில் ஒன்றரை ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அவர், ஆசியான் நாடுகளிலும் உலகளவிலும் அணுசக்தி மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால் இதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
“அணுசக்தி சார்ந்த ஆய்வு மேம்பாட்டிலும் அணுமின் நிலையச் செயல்பாடுகளிலும் தென்கொரியாவின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ள நான் மேற்கொள்ளும் முதுநிலைப் பட்டக்கல்வி உதவும்,” என்றார் குமரன்.
வாரியத்தின் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ள அவர் விழைகிறார்.
படிப்பை முடித்தவுடன், அணுசக்தி, கதிர்வீச்சுப் பாதுகாப்பில் வலுவான கொள்கைகளையும் பாதுகாப்பு முறையையும் வகுக்க திட்டம் கொண்டுள்ள அவர் அணுசக்தியைப் பயன்படுத்தும் சாத்தியத்துக்கு சிங்கப்பூரைத் தயார்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
சிங்கப்பூரின் நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பு, நிலைத்தன்மை இலக்குகளுக்கு ஆதரவளிக்கவும் குமரன் விரும்புகிறார்.
.png)






English (US) ·