பாத்தாம் தீவில் சமூக ஒருங்கிணைப்பின் வாயிற்கதவாகத் திகழும் தென்னிந்தியத் திருக்கோயில்

2 hours ago 19

2fc2b524-9089-4da8-989c-f31bc8484441

பாத்தாம் தீவிலுள்ள ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரி கோயில். - படம்: பே. கார்த்திகேயன்

இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில் அமைந்திருக்கும் ஆலயம், தமிழ்ச் சொந்தங்களை எல்லைகள் கடந்து ஒன்றிணைக்கும் சமூகப் பிணைப்பின் வாயிலாகத் திகழ்கிறது.

பாத்தாம் தீவில் இருக்கும் இந்த ஒரே தென்னிந்தியத் தமிழ்க் கோயிலில் நடைபெறும் வழிபாட்டில் தமிழ் பக்தி இலக்கியங்கள் மணம் கமழ்கின்றன.

பாலி இந்துச் சமூகம் எழுப்பிய கோயில் அருகே அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் பெயர் ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரி கோயில்.

பாலி இந்துக் கோயிலின் தலைவாசல் வழியாக நுழைந்து இந்த ஆலயத்திற்குள் சென்றால் சமயங்கள் பண்பாட்டை எவ்வாறு காத்து வருகின்றன என்பதைக் காணலாம்.

-

தமிழ்ச் சமூகத்தினர் இந்த ஆலயத்தை நிறுவி ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாகத் தமிழ் முரசிடம் கூறினார் விக்னேஷ்வர குருக்கள்.

நாள் தவறாது பக்தர்களுக்காக ஆலயம் எப்பொழுதும் திறந்தே இருக்கிறது.

கிட்டத்தட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களின் வழிபாட்டுத் தலமாகஇருந்து வரும் இந்த ஆலயத்தின் தனித்துவம் குறித்தும் பேசினார் குருக்கள்.

பல்வேறு காரணங்களுக்காக தாயகம் கடந்து அயல்நாட்டிற்கு வந்த தமிழ் மக்கள், தாங்கள் சொந்த ஊரில் வழிபட்டு வந்த தெய்வத்தைத் தாங்கள் குடியேறிய ஊரிலும் குடிகொள்ளச் செய்து வழிபட்டு வருகின்றனர் என்றார் அவர்.

பூசையில் இடம்பெற பல்லாயிரம் மைல் பயணம் செய்யும் பூக்கள்

‘‘பாத்தாம் தீவிலுள்ள தென்னிந்திய ஆலய வழிபாட்டில் பங்கேற்க  சிங்கப்பூர்,  மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். 

‘‘கோயிலுக்கான மலர்கள் முதலில் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து சேரும். பிறகு அங்கிருந்து பாத்தாம் தீவைச் சென்றடையும்.

“மாதத்திற்கு நூறு கிலோ வரையிலான பூக்கள் தருவிக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் பூசைகள் நடத்தப்படுகின்றன,’’ என்று விவரித்த குருக்கள் அன்னதானம் பற்றியும் சொன்னார்.

‘‘கோவில் கட்டப்பட்டதிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பக்தர்களுக்குத் தவறாது அன்னதானம் வழங்கப்படுகிறது. அதிலும் நாட்டுக் காய்கறிகளில் சமைக்கப்பட்ட தமிழ் பாரம்பரிய உணவுகள் நூற்றுக்கணக்கானோருக்கு பரிமாறப்படுகின்றது,’’ என்று விவரித்தார் விக்னேஷ்வர குருக்கள்.

தமிழில் ஒலிக்கும் திருமந்திரங்கள் 

பாலி இந்துக் கோயில் நிலத்தில் இந்த தென்னிந்தியத் தமிழ் ஆலயமும் அமைந்துள்ளதால், இந்தோனீசியர்கள், சீனர்கள் உள்ளிட்டோரும் இரு ஆலயங்களுக்கும் வந்து செல்கின்றனர். இந்துக் கோயிலுக்கு வருவோர் நெற்றியில் அரிசியை இட்டுக்கொள்கிறார்கள்.

பாலி இந்துக் கோயில் நிலத்தில் இந்த தென்னிந்தியத் தமிழ் ஆலயமும் அமைந்துள்ளதால், இந்தோனீசியர்கள், சீனர்கள் உள்ளிட்டோரும் இரு ஆலயங்களுக்கும் வந்து செல்கின்றனர். இந்துக் கோயிலுக்கு வருவோர் நெற்றியில் அரிசியை இட்டுக்கொள்கிறார்கள். - படம்: பே கார்த்திகேயன்

பாலி இந்துக் கோயில் நிலத்தில் இந்த தென்னிந்தியத் தமிழ் ஆலயமும் அமைந்துள்ளதால், இந்தோனீசியர்கள், சீனர்கள் உள்ளிட்டோரும் இரு ஆலயங்களுக்கும் வந்து செல்கின்றனர் என்று கூறினார் ஆலயத் தலைவர் சுனில்குமார், 50.

திரு சுனில் குமார்.

திரு சுனில் குமார். - படம்: பே கார்த்திகேயன்

குறிப்பாக, இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் சங்க கால வழிபாட்டில் இடம்பெற்ற  அபிராமி அந்தாதி, உலகம்மை அந்தாதி, கொற்றவைக் கலிப்பா, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் மந்திரங்களை வாசித்து இறைவனை வழிபடுவதைக் காண முடியும் என்றும் தமிழ்ச் சுவை மணக்கும் என்றும் ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர். 

இந்தியர்கள் நிர்வகிக்கும் இந்த ஆலயத்தில் திருவிழாக்களும் நடைபெறுகின்றன என்ற திரு சுனில்குமார், பாத்தாம் தமிழ் மக்களின் எதிர்கால விருப்பத்தையும் தெரிவித்தார்.

‘‘இந்தோனீசிய அரசாங்கம் நிலம் உள்பட ஆலயத்திற்குத் தேவையான ஆதரவைத் தருகிறது.

‘‘வரும் ஆண்டுகளில் அதனை கோயிலாக எழுப்பி, குடமுழுக்கு விழா நடத்த வேண்டும். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன்.

“மலேசியாவிற்கு எப்படி பத்துமலை கோயில் உள்ளதோ, அதுபோல் பாத்தாம் தீவின் முக்கிய அடையாளமாக இந்தத் திருக்கோயில் மாற வேண்டும். 

‘‘சுற்றுலாப் பயணிகள் பாத்தாமுக்கு வரும்போது அவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் கொள்ளும் வகையில், இந்த ஆலயத்தை மாற்றுவதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவை செயல்வடிவம் பெறும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Read Entire Article