மேற்கு ஆசியப் போர்ச் சூழலைக் காரணம் காட்டி, நாட்டு மக்கள் பெட்ரோல் மற்றும் தங்கம் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களிலேயே, பெங்களூருவில் மாபெரும் ‘ரோடுஷோ’ நடத்தி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரதமர்.
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் 10.5.2026 அன்று நடைபெற்ற ரூ.9,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு மக்கள் பின்வருவனவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பெட்ரோலியப் பொருட்கள்: பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு (காஸ்) பயன்பாட்டைத் தேவையறிந்து மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க, மீண்டும் ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ (Work from Home) முறையை ஊக்குவிக்க வேண்டும்.
அந்நியச் செலாவணியைச் சேமிக்க, ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதையும் வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்வதையும் தள்ளிவைக்க வேண்டும்.
“தேசமே எல்லாவற்றுக்கும் மேலானது. தற்போதைய போர்க்கால சூழலில் இந்தத் தியாகங்களைச் செய்வது காலத்தின் கட்டாயம்” என்று அவர் உருக்கமாகப் (?) பேசியுள்ளார்.
மாலையில் மேடையில் இவ்வாறு பேசிய பிரதமர், அய்தராபாத்திலும், அடுத்த சில மணி நேரங்களிலேயே குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும் ‘ரோடுஷோ’ நிகழ்த்தி யுள்ளார். அதே போல் இரவு 8:00 மணியளவில் பெங்களூரு நகரில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் மிகப் பெரிய ரோடுஷோ நடத்தியுள்ளார். இப்படி, தனது நிலைப்பாட்டிற்கு முரணாகச் செயல்பட்டது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அவரது பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் என மொத்தம் 18 வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. வெளிநாட்டுத் தயாரிப்பு வாகனத்தில் நின்றபடி அவர் மக்களைச் சந்தித்தார்.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பெங்களூருவில் நடந்த ‘ரோடுஷோ’வின் போது, பிரதமரின் வாகன அணிவகுப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் தெரிவித்திருந்தது. அப்போது பா.ஜ.க. தரப்பில் 17 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு பெட்ரோல் செலவானதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது (2024) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98 ஆக இருந்தது. ஆனால் தற்போது குஜராத்தில் பெட்ரோல் விலை ரூ.111.82 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தைக் கணக்கில் கொண்டால், 10.5.2025 அன்று ஒரே இரவில் பிரதமரின் வாகன அணிவகுப்பிற்காக மட்டும் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிற்கு எரிபொருள் செலவு செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்க்கட்சிகள் கணக்கிடுகின்றன.
மக்களிடம் சிக்கனத்தை வலியுறுத்தி விட்டு, அரசு நிர்வாக இயந்திரத்தையும் எரிபொருளையும் இவ்வளவு பெரிய அளவில் வீணடிப்பது “ஊருக்குத்தான் உபதேசம், தனக்கு அல்ல” என்ற பழமொழியை நினைவுபடுத்துவதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஒருபுறம் ‘வீட்டிலிருந்தே வேலை’ என்று அறிவுரை கூறிவிட்டு, மறுபுறம் பல கோடி ரூபாய் செலவில் அரசியல் ‘ரோடுஷோ’ நடத்துவது பிரதமரின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“நாட்டு மக்கள் அடுத்த ஓராண்டுக்கு வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக்கொண்டு, உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், அவர் வரும் 15-ஆம் தேதி முதல் 7 நாட்கள் அரசுமுறைப் பயணமாக அய்ந்து நாடுகளுக்குச் செல்லவிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது!
பிரதமர் மோடி மேற்கொள்ளவிருக்கும் இந்த 7 நாள் பயணத்தில் பின்வரும் நாடுகளுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது: அய்க்கிய அரபு அமீரகம் (UAE), சுவீடன், நெதர்லாந்து, நார்வே, இத்தாலி நாடுகளுக்குப் பயணிக்கிறார். ஆனால் மக்களிடம் அடுத்த ஓராண்டுக்கு வெளிநாட்டுப் பயணத்தைக் குறைக்கச் சொல்லியுள்ளார்.
பிரதமர், அடுத்த சில நாட்களிலேயே நீண்டதொரு வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்குவது சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பியுள்ளது. ‘இந்த இரட்டை நிலைக்கு மறுபெயர்தான் பிரதமர் மோடி’.
நாடாளுமன்றம் நடக்கும் போதே – டில்லியில் இருந்தால்கூட அதில் பங்கேற்க மாட்டார்; அல்லது அந்தக் கால கட்டத்தில் வெளிநாடு சுற்றுப் பயணத்தை மேற்கொள்வார். தான் அணியும் உடையின் மதிப்பு ரூபாய் பத்து லட்சம் என்று பெருமையாகப் பேசுவார்; தேவைப்படும்போது ‘‘நான் தேநீர் விற்றவன் – இந்த அளவுக்கு (பிரதமராக) வந்திருக்கிறேன்’’ என்று முரண் பாடாகப் பேசுவார்.
செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்; நாடாளுமன்றத் தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மாட்டார். பொது மேடைகளில் மட்டும் ‘சண்டபிரசண்டம்’ செய்வார்!
140 கோடி மக்களின் பிரதமராம் இவர் – இதனை நாம் நம்ப வேண்டும். இதுவும் ஜனநாயகத்தில் ஒரு வேதனையான விசித்திரம்தான்!
ஒருவர் எந்தப் பதவியில் இருக்கிறார் என்பது முக்கியமல்ல; எந்த சிந்தனையில் இருக்கிறார், எத்தகைய செயல்பாட்டில் இயங்குகிறார் என்பதே முக்கியம்!
.png)
13 hours ago
13





English (US) ·