* பிரதமரும், ஒன்றிய கல்வி அமைச்சரும் வாய் திறக்காதது ஏன்? அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோதப் போக்கை முறியடிக்க முன்வரவேண்டும்!

8 hours ago 5

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மீது ஒன்றிய பி.ஜே.பி. அரசு வன்முறைத் தாக்குதலையும், பிரதமரோ, கல்வி அமைச்சரோ இதுகுறித்து வாய் திறக்காததைக் கண்டித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் இந்தியத் தலைநகர் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தத் தொடங்கினர். அதில் காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் என்பவரும் இணைந்து ஜூன் 28 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, நடைபெற்றுவந்த போராட்டத்தின் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால், வலுக்கட்டாயமாக அவருக்கு உணவு புகட்டுவதற்காக அவரை டில்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றது காவல்துறை.

நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்!

போராட்டம் நடைபெறும் ஜந்தர்மந்தரில் தொடர்ந்து இளைஞர்கள் கூடியவண்ணம் இருக்க, ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. அதன் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கேயும் இதனையொட்டி பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கவிருப்பதாகவும் அறிவித்திருந்தார். நேற்று (20.7.2026) ஒருபுறம் நாடாளுமன்றம் கூடிய நிலையில், அங்கும் இந்த பிரச்சினைகள் எதிரொலித்தன. நீட் தொடர்பாக விவாதிப்பதற்கு அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட அதே நேரத்தில், “சலோ சன்சத்” (நாடாளுமன்றத்தை நோக்கி) என்ற பெயரில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் நாடு முழுவதும் இருந்து கலந்துகொண்டனர்.

டில்லி நாடாளுமன்றச் சாலைகளே
போர்க்களம் போல மாறியது
!

ஆனால், போராட்டத்துக்கு அனுமதி மறுத்து டில்லி காவல்துறையினரும், துணை இராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். பதற்றமான சூழலில், பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள், மாண வர்கள் மீது தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு, கல்வீச்சு என காவல்துறையினர் வன்முறையினைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். டில்லி நாடாளுமன்றச் சாலைகளே போர்க்களம் போல மாறிய காட்சிகளை நாடே பார்த்துக் கொண்டிருந்தது.

நீட் தேர்வு வேண்டவே வேண்டாம் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. காரணம் அதில் பணக்கா ரர்களுக்கும், வசதிபடைத்த நகர வாசிகளுக்கும் தான் மருத்துவக் கல்வி வாய்ப்பு உண்டு. அதனால், சமூகநீதி பாதிக்கப்படும்; கல்விக் கட்டணக் கொள்ளை சட்டபூர்வமாக்கப்படும்; கல்வியை, நுழைவு – தகுதித் தேர்வு  ஆகியவை நிர்ணயிக்கும் என்றாக்குவது கார்ப்பரேட்டுகளுக்குக் கல்வியைத் தாரைவார்க்கும் ஏற்பாடு என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து கடந்த 13 ஆண்டுகளாக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். மக்களை அதில் பக்குவப்படுத்தி,  தமிழ்நாட்டின் அரசுகள், அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த நிலைப்பாட்டுடன்தான் இருக்கின்றனர்.

போராட்டத்தின் நோக்கம்!

இதனை மிகத் தாமதமாகப் புரிந்துகொண்டவர்கள் தான் வடநாட்டினர். இப்போதேனும் இந்த அளவிற்கு வந்தார்களே என்று தான் நாமும் அவர்களை வர வேற்கிறோம். போராட்டத்தின் நோக்கம் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் என்னும் குறுகிய நோக்கோடு இருக்கக் கூடாது, அதனால் எந்தப் பெரிய பலனும் இல்லை. நாளை இன்னொருவர் வந்தால், அவரும் அதே பாரபட்ச நீட் தேர்வை நடத்துவதை இன்னும் தீவிரமாகச் செய்வார் என்பதைத் தாண்டி அதில் பெரிய பலன் எதுவும் இல்லை என்பது நம் நிலைப்பாடு.

என்றாலும், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கும், சி.பி.எஸ்.இ. தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கும் குறைந்த பட்சமாகப் பொறுப்பேற்கும் நாணயம் கூட, அத்துறையின் அமைச்சருக்கு இல்லை என்பது கண்ட னத்திற்குரியதல்லவா?

‘மனதின் குரல்’ என்று காலட்சேபம் செய்வதால் யாருக்கு என்ன பயன்?

அங்கேதான் இந்தியாவின் பிரதமர் என்றொருவர் இருக்கிறார். நாடே கொந்தளிக்கும், நாட்டு இளைஞர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கின்றனவே, அதற்குப் பதிலளித்தோ, விளக்கம் சொல்லியோ, நடவடிக்கை எடுக்கவோ அவர் மேற்கொண்ட முயற்சி கள் என்ன? மக்கள் பிரச்சினைகளில் எல்லாம் வாயை மூடி இருந்துவிட்டு, நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுத்துவிட்டு, யாருமே இல்லாத ரேடியோ நிலையத்தில் இருந்து, தான் மட்டும் பேசி ‘மனதின் குரல்’ என்று காலட்சேபம் செய்வதால் யாருக்கு என்ன பயன்?

நாட்டில் நடக்கும் காட்டாட்சிக்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடியும், கண்ணீர்புகைக் குண்டு வீச்சும், காவல்துறையினரே கற்களைக் கொண்டு வந்து குவித்து நடத்தும் கல்வீச்சும், தலைநகரில், ஊடகங்களின் முன்னிலையில் நடக்கிறது என்றால், நாட்டில் நடக்கும் காட்டாட்சிக்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி? இவை அனைத்துக்கும் பொறுப்பான உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், வாய் திறக்காத ‘மவுன குரு’வாக இருக்கும் பிரதமரும், முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்காமல் பதவி நாற்காலியில் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்திருக்கும் தர்மேந்திர பிரதானும் அந்தந்தப் பதவியில் இருப்பதற்குத் தகுதியானவர்களா?

முறையாகத் தேர்வு நடத்துங்கள், முறையான கல்வியைக் கொடுங்கள் என்று கேட்டுப் போராடும் மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு நாடு நிச்சயம் எதிர்வினையாற்றும்.

தமிழ்நாடு நீட் தேர்வுக்கு எதிரான முன்னோடிக் களம்; ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வை ஏற்காத பெரியார் மண். சமூகநீதி மண். அது எப்போதும் மக்கள் போராட்டங்க ளுக்குத் துணை நிற்கும். வட மாநிலங்களில், குறிப்பாக டில்லியில் தற்போது நடத்தப்படும் போராட்டமும், கோரிக்கைகளும் நீண்டகாலப் பயன் தரும் முழுமையானவை அல்ல என்றாலும், இந்த அளவிற்காவது மாணவர்களும், இளைஞர்களும் போராட முன்வந்திருக்கிறார்களே என்ற அளவில் நாம் அதனை வரவேற்கிறோம்.

அனைத்துக் கட்சியினரும் ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்க முன்வர வேண்டும்!

போராட்டத்தை மடைமாற்றாமலும், வேறு எவருக்கும் துணைபோகாமலும் இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். நாட்டின் கல்வியாளர்கள், ஜனநாயகவாதிகள், மக்களாட்சியில் நம்பிக்கை கொண்டோர், அனைத்துக் கட்சியினரும் ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்க முன்வர வேண்டும்.

தலைவர்,

21.7.2026        திராவிடர் கழகம்

Read Entire Article