திருவெறும்பூர், ஜூலை 21- “பெரியார் கொள்கையில் கற்றதும், பெற்றதும்” என்கிற தலைப்பில், வாழ்க்கையில் தாம் கடந்து வந்த அனுபவங்களைத் திருச்சி மாவட்டத் திராவிட மகளிர் பாசறைத் துணைத் தலைவர் கரு.புனிதவதி எடுத்துக் கூறினார்.
பெரியார் பேசுகிறார் 19 ஆவது நிகழ்ச்சி, 19.07.2026, ஞாயிற்றுக்கிழமை மாலை, திருவெறும்பூர் பெரியார் படிப் பகத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய கரு.புனிதவதி, “திருச்சி மாவட்ட கழக நிகழ்ச்சிகளில் ஒன்றிரண்டு தவிர, மற்ற அனைத்திலும் எங்கள் இரண்டு பிள்ளைகளுடன் நாங்கள் கலந்து கொண்டு வருகிறோம். குடும்பத்துடன் பங்கு பெறுவதை 100 விழுக்காடு உறுதி செய்கிறோம்.
சிவகங்கை மாவட்டத்தின் குக்கிராமத் தில் பிறந்த எனக்குப் பெரியார் குறித்தோ, இயக்கம் குறித்தோ அறிமுகம் கிடையாது. நான் கடவுள் பக்தியுடனே வளர்ந்தேன். தோழர் அசோக்குமாருடன் திருமணம் நடந்த போது கூட, அவர் “பெரியாரிஸ்ட்” என்பது எனக்குத் தெரியாது. எனினும் எங்கள் கிராம வழக்கத்தின் படி வேத மந்திரங்கள் ஓதாமலும், அக்னி வளர்க் காமலும் எங்கள் திருமணம் நடைபெற்றது.
இணையர் பெல் (BHEL) நிறுவனத் தில் பணிபுரிந்ததால் திருச்சி, திருவெறும் பூருக்கு வந்தேன். இங்கு வந்த பிறகும் பக்தி நடவடிக்கைகள், கடவுள் வழிபாடு, வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை எனத் தொடர்ந்தது. தோழர் அசோக்குமார் இதுகுறித்து என்னிடம் மாற்றுக் கருத்துக் கொண்டதில்லை.
அதேநேரம் அவர் அடிக்கடி நிகழ்ச்சி கள் இருக்கிறது என்று வெளியே சென்று வருவார். அப்படி எங்குதான் போகிறீர்கள் என ஒருநாள் கேட்ட பிறகுதான், தான் ஒரு பெரியாரிஸ்ட் என்றும், திராவிடர் கழக உறுப்பினர் என்றும், கடவுள் மறுப்பாளர் என்றும் கூறினார். இவ்வளவு நாள் ஏன் கூறவில்லை என்கிற கோபம் எனக்கு வரவில்லை. மாறாக எனக்கு அவர் எந்தச் சிரமமும், என்னிடம் எந்த மாற்றுக் கருத்தும் கொண்டதில்லை.
இன்னும் சொல்வதானால், நான் நானாக இருந்தேன். அவர் எனக்கு எந்த இடையூறையும் செய்ததில்லை. அவரிடம் இருந்த அந்த அணுகுமுறையும், அதனால் ஏற்பட்ட எனது அனுபவமும் தான், இந்தக் கொள்கையின்பால் என்னை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்தே இருவரும் இணைந்து கூட்டங்களுக்குச் சென்றோம்.
எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களையும் அழைத் துச் செல்லத் தொடங்கினோம். நிகழ்ச்சி களுக்குச் செல்வது, தோழர்களைச் சந்திப்பது போன்றவை எனக்குப் பெரும் உற்சாகத்தையும், தெளிவையும், தைரியத்தையும் கொடுத்தது. புத்தகங்கள் வாசிப்பது குறைவு என்றாலும், இயக்கத் தின் எந்தவொரு கூட்டத்தையும் நாங்கள் தவறவிடுவதில்லை.
நானாவது திருமணத்திற்குப் பிறகு இந்தக் கொள்கைக்கு வந்தேன், ஆனால் எங்கள் இரு குழந்தைகளும் சிறு வயது முதலே பகுத்தறிவுச் சிந்தனையோடு வந்ததில் மகிழ்ச்சி. சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளை எல்லாம் வீட்டில் கேட்பார்கள்.
“குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு நீ எப்படி மாறினாய்? ஏன் பெரியார் கொள்கைக்குச் சென்றாய்?”, எனப் பலரும் கேட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் நமது நடவடிக்கைகள், உறுதியான நிலைப்பாடு தெரிந்ததும் அவர்கள் அமைதியானார்கள். எனினும் பெல் நிறுவனக் குடியிருப்பில் (Bhel Township) நாம் என்ன ஜாதி என்பதை அறிய பல கேள்விகளைக் கேட்பார்கள். இங்கே உங்கள் சொந்தக்காரர்கள் யாரும் இருக்கிறார்களா என்றெல்லாம் சுற்றி வளைப்பார்கள்.
ஒரு கட்டத்தில் நமது கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு, மத மறுப்புத் தெரிந்ததும் இவர்கள் வித்தியாசமானவர்கள், நமது எல்லைக்குள் வரமாட்டார்கள் என அவர்கள் தெளிவு பெறுவார்கள். ஆண்டுகள் பல கடந்த பிறகு இன்றைக்கு எல்லாமே இயல்பாகிவிட்டது. எங்கள் வீட்டில் நான்கு பேரும் அடிக்கடி கருப்புடை அணிந்து வெளியே செல்வதை அவர்கள் ஆச்சரியமாகப் பார்ப்பதில்லை.
நான் கல்லூரிப் படிப்பு முடித்திருந் தாலும், எங்கள் இரண்டு பிள்ளைகளின் பள்ளிப் பாடங்கள் அதையும் கடந்து இருக்கின்றன. எனினும் முதலில் அதை நான் படித்து, அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிகிறது. இதற்கான ஆர்வத்தை, தைரியத்தை இந்தப் பகுத்தறிவுச் சிந்தனையின் மூலமே நான் பெற்றேன்.
திருச்சி மாவட்ட மகளிரணி மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. இன்னும் தனித்தன்மையுடன் மேலும் பல பணிகளை அவர்கள் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி செய்கிற போது அதிகமான இயக்க மகளிர் களத்திற்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன்”, என மகளிர் பாசறைத் துணைத் தலைவர் கரு.புனிதவதி பேசினார்.
இந்நிகழ்வில் ஞா.ஆரோக்கியராஜ், மு.சேகர், ம.ஆறுமுகம், இரா.தமிழ்ச்சுடர், ச.பாலகங்காதரன், அ.சிவானந்தம், ச.பாரததேவி, ச.கணேசன், வெ.ரூபியா, பு.வி.கியூபா, ஆ.அசோக்குமார், க.புனிதா, அ.அன்புலதா, அ.தமிழ்கவி, போ.ஜெகதீஸ்வரன், வி.சி.வில்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.png)
8 hours ago
5







English (US) ·