Last Updated:October 13, 2025 3:29 PM IST
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள “பைசன்” படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது. படத்தை பார்த்த பிரபலம் பகிர்ந்த விமர்சனம் என்ன?.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள “பைசன்” படத்தின் 'தீக்கொளுத்தி', 'றெக்க றெக்க' பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மாரி செல்வராஜ் முந்தைய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து பைசனும் ஒரு காத்திரமான கதையைச் சொல்லப் போகிறது என்பதில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது.
அனுபமா பரமேஸ்வரன், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கபடி வீரர் மனத்தி கணேசன் அவரின் வாழ்க்கையைத் தழுவி “பைசன்” படம் தயாராகி இருக்கிறது.
மாரி செல்வராஜுக்கும், கபடிக்கும் இடையேயான நெருக்கம் அதிகம். பல்வேறு நேர்காணல்களின் வாயிலாக இதனை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆட்டத்தின் சாயல்களையும் நடைமுறைகளையும் அறிந்தவர். அந்தவகையில் தான் பார்த்து வளர்ந்த விதத்தை வைத்து “பைசன்” படத்தை எடுத்திருக்கிறார்.
இதற்கேற்ப படத்தின் முன்னோட்ட விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "பைசன் திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தது மனத்தி கணேசன் தான். என்னுடைய ஹீரோவாக இருந்த இவரைத்தான் சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்தேன். கபடி விளையாட்டுக்காக, இவருக்காக சிறுவயதில் நான் போஸ்டர் ஒட்டியிருக்கிறேன்.
அவரின் கதையை வைத்து படம் எடுக்கப்போகிறேன் என அனுமதி கேட்டதும், என்னை நம்பி எனக்கு ஒத்துழைப்பை கொடுத்தார் கணேசன். நேர்மையான உழைப்புடன் பல போராட்டங்களைத் தாண்டி முன்னேறி வந்த இளைஞர்களின் கதையை எனது அரசியல் பார்வையில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். இப்போது நான் திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும் என்றால் எனது மனதில் ஒரு பாரம் வரும். நண்பர்களுடன் பேசும்போது அங்கிருந்து வரும் செய்திகள் பதற்றத்தைத் தருகிறது.
இதனை மாற்ற வேண்டும் என்றும், கருத்துரையாடலை முன்னெடுக்க வேண்டும் என்றும் விரும்பி திருநெல்வேலியில் நிகழும் சூழலை இப்பொழுது உள்ள இளைஞர்களிடம் கடத்த இந்தக் கதையை எழுதியிருக்கிறேன். தென் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மற்றும் வெற்றி பெற முடியாத இளைஞர்களின் கதை." என்று பேசியிருந்தார்.
இதற்கிடையே, 'பைசன்' படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது.
படத்தைப் பார்த்த இயக்குநர் ராம், ''மாரி செல்வராஜ் எடுத்தப் படங்களிலேயே இதுதான் பெஸ்ட்'' என்று தனது விமர்சனத்தைச் சொல்லி பாராட்டினாராம். இதனை நேற்று நடந்த முன்னோட்ட விழாவில் மாரி செல்வராஜ் பகிர்ந்துகொண்டார்.
இதேபோல், பா. ரஞ்சித் போன்ற மாரி செல்வராஜின் நண்பர்களும் 'பைசன்' பார்த்துவிட்டு அவரை வெகுவாகப் பாராட்டியதாகவும், அதேபோல், படத்தைப் பார்த்த மனத்தி கணேசன் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் அதே மேடையில் இயக்குநர் மாரி செல்வராஜ் வெளிப்படுத்தினார்.