Last Updated:Jul 22, 2026 6:58 PM IST
நீட் போராட்டம் தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு, “போராடுபவர்கள் மீதே சந்தேகம் விதைக்கும் முயற்சி, பாஜக அரசின் பொறுப்பை ஏன் கேள்வி கேட்கவில்லை” என மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு, தகுதி தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவருகிறது.
இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக, கடந்த 20ஆம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா மற்றும் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது அவர்கள் மீது காவல்துறை மற்றும் பாதுகாப்புத்துறை நடத்திய தடியடியில் பல மாணவர்களும், போராட்டக்காரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் காவல்துறையினரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பிறகு அரசியல் கட்சிகள் நேரடியாக இந்த விவகாரத்தில் களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில், வி தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து இன்று தனது கருத்தைத் தெரிவித்தார்.
அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. ஆனால், இங்கே எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? போராட்டம் தீவிரமடைந்து ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டும் வரை பேச்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது? எதற்காக இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்?
மாணவர்களுக்கும், அவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. ஒரு போராட்டம் வாரக்கணக்கில் நீடிக்கும்போது, சுயநல நோக்கங்களைக் கொண்டவர்கள் மேடையேறி, போராட்டத்தின் ஆரம்பகாலக் கோரிக்கைகளுக்குத் தொடர்பில்லாத கருத்துகளை முன்வைப்பதோ அல்லது தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் போராட்டத்தைத் திசைதிருப்ப முயல்வதோ இயல்பான ஒன்றுதான். அத்தகைய சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுக்க நீங்கள் மௌனம் காத்தால், உங்கள் முக்கிய நோக்கங்களிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். தயவுசெய்து அப்படி நடக்க அனுமதிக்காதீர்கள்” எனும் கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் கொடுத்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், “இவ்வளவு நாட்கள் மாணவர்கள் தெருக்களில் போராடியபோது மௌனம். மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்த மறுத்தபோதும் மௌனம். இன்று நாடு முழுவதும் கண்டனம் எழுந்த பிறகு அறிக்கை. அதுவும் மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதற்குப் பதிலாக, போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீதே சந்தேகத்தை விதைக்கும் முயற்சி.
போராட்டத்தைப் பற்றி பேசுவதற்கு முன், மாணவர்களை இந்த நிலைக்கு தள்ளிய பாஜக அரசின் பொறுப்பைப் பற்றி ஏன் கேள்வி கேட்கவில்லை? பல வாரங்கள் பேச்சுவார்த்தையே நடத்தாத அரசை ஏன் வன்மையாகக் கண்டிக்கவில்லை? ஒரு பக்கம் மாணவர்களுடன் நிற்பது போலத் தோன்றும் வார்த்தைகள், மறுபக்கம் போராட்டத்தை பலவீனப்படுத்தும் அரசியல் மொழி. இதுதான் அண்ணாமலையின் இரட்டை வேடம். மாணவர்களின் போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தேவையே தவிர, அவர்கள்மீது சந்தேகத்தை சுமத்தும் அறிவுரைகள் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை
முன்னாள் முதலமைச்சர் கொண்டுவந்த முதலமைச்சர் காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என மாற்றி அரசாணை.
செப்டம்பர் 17 முதல் 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுகிறது.
.png)








English (US) ·