பனியா ஷாப் எனும் 52 வயதுப் பெண், ஏழு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மடக்குக் கத்தியால் கணவரைக் கத்தியால் குத்திக்கொன்ற பெண்ணுக்கு 31 மாதச் சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) விதிக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் அங் மோ கியோவில் 2023ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்தது.
பனியா ஷாப் எனும் அந்த 52 வயதுப் பெண், ஏழு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். கண்மூடித்தனமாக நடந்துகொண்டதால் 62 வயதுக் கணவர் திரு முகம்மது அலி சாபனின் மரணத்திற்கு அவர் காரணமானதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டும் அவற்றில் அடங்கும். கத்திக்குத்தால் திரு அலிக்கு வலத் தொடையில் காயம் ஏற்பட்டது.
2023 டிசம்பர் 11ஆம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்னர், அங் மோ கியோ அவென்யூ 4ல் உள்ள புளோக் 631ன் அடித்தளத்தில் இருவருக்கும் இடையில் கைகலப்பு மூண்டது.
திரு அலி, தமது சகோதரருக்கும் நண்பருக்கும் இடையிலான உறவு குறித்துச் சத்தம் போட்ட பனியாவைத் தடுக்க முயன்றார்.
கைகலப்பின்போது பனியாவிடம் இருந்த சாவிக்கொத்து கீழே விழுந்தது. அப்போது சாவிக்கொத்துடன் இணைக்கப்பட்டிருந்த மடக்குக் கத்தி நீட்டிக்கொண்டது.
கத்தியை முழுமையாக விரித்த பனியா, அதனைக் கொண்டு கணவருடன் தொடர்ந்து சண்டையிட்டார்.
ஒரு கட்டத்தில், அவர் வீசிய கத்தி, கணவரின் தொடையைக் கிழித்தது. ரத்தம் பீறிட்டது.
கத்தியுடன் கூடிய சாவிக்கொத்தை வீட்டுக்கு எடுத்துச்சென்ற பனியா, அவற்றைக் கழுவி ஒளித்துவைத்தார். பின்னர் அடித்தளத்துக்கு அவர் போர்வையுடன் திரும்பினார்.
அங்குக் கூடியிருந்தோரிடம் காவல்துறையினரையோ அவசர மருத்துவ வாகனத்தையோ அழைக்கவேண்டாம் என்று கூச்சலிட்டார் பனியா. திரு அலி நினைவிழந்த நிலையில் அசைவின்றிக் கிடந்தார்.
பின்னர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட திரு அலி, அங்கு மாண்டதாக அறிவிக்கப்பட்டது.
கண்மூடித்தனமான நடவடிக்கையால் மரணம் விளைவித்த குற்றத்துக்காக பனியாவுக்கு ஐந்தாண்டு வரை சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
பனியாவின் தண்டனைக்காலம் அவர் கைதான 2023 டிசம்பர் 12ஆம் தேதியிலிருந்து தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.