மலேசியாவில் நான்கு வீடுகளையும் குறைந்தது இரண்டு கார்களையும் சேதப்படுத்திய தீ விபத்திற்குப் பின்னால் சிங்கப்பூர் கடன் முதலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. - படம்: லியூ சின் டோங் ஃபேஸ்புக்
புக்கிட் இண்டா: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள புக்கிட் இண்டாவில் நான்கு வீடுகளை எரித்து நாசமாக்கிய தீவிபத்தின் பின்னணியில் சிங்கப்பூரைச் சேர்ந்த கடன் முதலைகள் இருக்கிறார்கள் என்று கூறப்படுவதாக, இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லியூ சின் டோங் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 10) தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் நிதித்துறை துணை அமைச்சராகவும் இருக்கும் திரு லியூ, இஸ்கந்தர் புத்ரியின் புக்கிட் இண்டாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டைக் கடன் முதலைகள் இரண்டு முறை தாக்கியதாகக் கூறப்படுகிறது என்று பகிர்ந்துள்ளார். முதல் தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமையும் இரண்டாவது தாக்குதல் அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமையும் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்தைப் பார்வையிட்ட திரு லியூ, கடன் முதலைகள் பெட்ரோல் குண்டைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளார்.
“இந்தக் குற்றத்தின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டது சிங்கப்பூர் கடன் முதலைக் கும்பல் இருப்பதாக நம்பப்படுகிறது,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
பெட்ரோல் குண்டு ஒரு வீட்டைக் குறிவைத்து வீசப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால், தீ மூன்று அண்டை வீடுகளுக்கும் பரவியது.
அவரது பதிவில் பதிவேற்றப்பட்ட வீடுகளின் புகைப்படங்களில், வீடு ஒன்றின் மேற்கூரையில் தீ குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது. அதன் கூரை முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களும் ஒரு மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக எரிந்துவிட்டன. குறிப்பாக, கார்களில் அவற்றின் வெளிப்புறப் பகுதி மட்டுமே எஞ்சியிருந்தது. கார் ஒன்றில் அதன் முன் பகுதி முழுவதுமாக இல்லை.
இடதுபுறத்தில் உள்ள வீட்டிலும் இதேபோன்ற சேதம் காணப்பட்டது. அதன் முன்பகுதி கூரையும் இதேபோல் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி, சாரக்கட்டு மட்டுமே எஞ்சியிருந்தது.
தகவல் கிடைத்தவுடன் புக்கிட் இண்டா காவல்துறை விரைவாக விசாரணையை மேற்கொண்டதாகவும் அப்பகுதியில் சுற்றுக்காவல் பணிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததாகவும் திரு லியூ கூறினார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட உள்ளூர் மக்களுக்கு அவர் மேலும் தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
.png)





English (US) ·