எகிப்தில் நடந்த காசா அமைதி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் எனப் புகழ்ந்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பால் முன்னிலையில் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மத்தியஸ்தத்தால் முடிவுக்கு வந்ததையடுத்து, எகிப்தில் நடந்த அமைதி மாநாட்டில், அதிபர் டிரம்ப் இந்தியாவையும், பிரதமர் மோடியையும் வெகுவாகப் பாராட்டினார்.
எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக் நகரில் நேற்று நடைபெற்ற காசா அமைதி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்-சிசி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மோடி சிறந்த தலைவர்: டிரம்ப் பாராட்டு
இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவைப் புகழ்ந்து பேசியதுடன், பிரதமர் மோடியை தனது "மிகச்சிறந்த நண்பர்" என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
“இந்தியா சிறப்பான நாடு. அங்கு எனது மிகச்சிறந்த நண்பர் (மோடி) தலைமை பொறுப்பில் இருக்கிறார். அவர் மிகச் சிறப்பான பணிகளைச் செய்து வருகிறார். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக மிகவும் நன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.
அப்போது தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை பார்த்து சிரித்தபடி, “அப்படித்தானே?” என்று டிரம்ப் கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை மோடியும் ஷபாஸ் ஷெரீப்பும் சிறந்த தலைவர்கள்” என்று பாராட்டினார். மேலும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரையும் டிரம்ப் பாராட்டினார்.
டிரம்புக்கு நோபல் பரிசு: ஷபாஸ் ஷெரீப் பரிந்துரை
பின்னர் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், “டிரம்பின் அயராத மற்றும் இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு மத்திய கிழக்கில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக டிரம்பின் பெயரை ஏற்கெனவே நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்தது. தெற்காசியாவில் மட்டுமல்ல, மத்திய கிழக்கிலும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்காக டிரம்பை மீண்டும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க பாகிஸ்தான் விரும்புகிறது,” என்றார்.
முன்னதாக, போரை நிறுத்தியது குறித்துப் பேசிய டிரம்ப், “இஸ்ரேல்-காசா போரை நிறுத்தியதன் மூலம் 8 போர்களை நிறுத்திவிட்டேன். அடுத்ததாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்,” என்று தெரிவித்தார்.
டிரம்பின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் இருந்த பிணைக்கைதிகளை விடுவித்தனர். இதற்கு ஈடாக பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.