ரூ.20 கோடி மோசடி – த.வெ.க. நிர்வாகி கைது!

13 hours ago 14

புதுக்கோட்டை, மே.12- முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.20 கோடி மோசடி செய்த த.வெ.க. நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரூ.20 கோடி மோசடி

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோரிடம் நெருங்கிய  தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில், சரவணன் தான் தொழில் செய்ய பணம் தேவைப்படுகிறது எனவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி புதுக்கோட்டையை சேர்ந்த தொழில் அதிபர்கள், முன்னணி வியாபாரிகள், மருத்துவர்கள் என மொத்தம் 49 பேர் சரவணனுக்கு பெருந்தொகையை – வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ரூ.20 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

த.வெ.க. நிர்வாகி கைது

இதையடுத்து, சரவணனால் பாதிக்கப் பட்ட 20-க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று (11.5.2026) மாலை சென்று புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சரவணனை கைது செய்தனர். மேலும், இந்த மோசடியில் வேறுயாருக்காவது தொடர்பு உள்ளதா?  என்பது குறித்தும், அவர் அந்தப் பணத்தை எங்கு முதலீடு செய்துள்ளார்? என்பது குறித்தும் அவரிடம் காவல்துறை யினர்  துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.20 கோடி மோசடி செய்ததாக த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article