விஜய்க்கு அல்ல… நாளை அதிமுகவுக்கு தான் ‘டெஸ்ட்’.. என்ன செய்ய போகிறார் சபாநாயகர்?

8 hours ago 9

இதனால், சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகரனும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இருவரும் கைகளை பிடித்தவாறு அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

அப்போது பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், எம்.ஜி.ஆர். இல்லையே என்ற ஏக்கத்தை விஜய் போக்கியதாக புகழாரம் சூட்டினார். கட்சி சார்பின்றி தான் செயல்படுவேன் என்றும் சபாநாயகர் உறுதியளித்தார்.

சபாநாயகரின் பொறுப்புகள் என்ன? சட்டமன்றப் பேரவையை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு. இந்திய அரசியலமைப்பின் கீழ் சபாநாயகர் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளார். கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஒரு உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உண்டு. இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் (Tenth Schedule - கட்சித் தாவல் தடைச் சட்டம்) கீழ், ஒரு உறுப்பினரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான முழு அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் நீதிமன்றங்கள் கூட உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய முடியாது. சபாநாயகரின் உத்தரவினை மட்டுமே நீதிமன்றங்கள் மறுஆய்வுக்கு உட்படுத்தும்.

எப்போது தகுதி நீக்கம் செய்யலாம்? ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சித் தாவலில் ஈடுபடும்போது, அவர் மீது தகுதி நீக்க மனு (Disqualification Petition) தாக்கல் செய்யப்பட்டால், சபாநாயகர் அதனை விசாரித்துத் தகுதி நீக்கம் செய்வார். இருப்பினும், ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் சட்டப்பூர்வமாக இணைந்தால் (merger), அவர்களைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்ய முடியாது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அரசு, நாளை சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது. இந்தச் சூழலில், அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகரின் முடிவும் அதிகாரமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் சுமார் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் முதலமைச்சர் விஜய்யின் அரசுக்கு தங்களது ஆதரவை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இன்று, விஜய்யும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணியை நேரில் சந்தித்து பேசினார். மறுபுறம், இபிஎஸ் தரப்பில் சுமார் 22 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்கக் கோரி அதிமுக அதிகாரப்பூர்வ கொறடா எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இரு தரப்பினரும் தாங்களே உண்மையான அதிமுக என உரிமை கோரி தற்காலிக சபாநாயகரிடம் தனித்தனியாக கடிதங்களை அளித்து, தங்கள் தரப்பு தலைவர்களை சட்டமன்றக் கட்சித் தலைவராக அங்கீகரிக்கக் கோரியுள்ளனர்.

நாளை வாக்கெடுப்பில் என்னென்ன நடக்கலாம்? அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், தற்போதைய சட்ட விதிகளின்படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படியும், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நாளை விஜய்க்கு ஆதரவாக எந்தவித உடனடி தகுதிநீக்க அச்சமுமின்றி தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும். இபிஎஸ் தரப்பால் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்த முடியாது.

இந்த விவகாரத்தில் சபாநாயகரின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகள், மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சுபாஷ் தேசாய் (SUBHASH DESAI v. PRINCIPAL SECRETARY) வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அமையலாம் என அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இரண்டு தரப்பும் போட்டி கொறடா உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போது, சபாநாயகர் வெறும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை (legislative majority) மட்டும் வைத்து முடிவெடுக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க முடிவை எடுப்பதற்கு முன், "உண்மையான அரசியல் கட்சி" (Authentic or Original Political Party) எது என்பதை அடிப்படை முகாந்திரத்தின் அடிப்படையில் சபாநாயகர் முதலில் தீர்மானிக்க வேண்டும். (2(1)(a)23 and 2(1)(b)24 10வது அட்டவணை).

இந்த தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு எந்தவித குறிப்பிட்ட காலக்கெடுவும் பத்தாவது அட்டவணையில் இல்லை. அவர் ஒரு நியாயமான காலக்கெடுவுக்குள் முடிவெடுத்தால் போதுமானது. மிக முக்கியமாக, சபாநாயகர் எடுக்கும் தகுதி நீக்க முடிவு, அவர் முடிவெடுக்கும் நாளிலிருந்து மட்டுமே அமலுக்கு வரும் (prospective effect). முன்தேதியிட்டு எந்தவொரு உறுப்பினரையும் தகுதி நீக்கம் செய்ய முடியாது. சபாநாயகர் அதிகாரப்பூர்வமாகத் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கும் அந்த நிமிடம் வரை, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சபையின் நடவடிக்கைகளில் பங்கேற்கவும், வாக்களிக்கவும் முழு உரிமை உள்ளது.

எனவே, நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில், சி.வி. சண்முகம் தலைமையிலான அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். இதன் மூலம் த.வெ.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கெடுப்பு முடிந்த பின்னரே, கொறடா உத்தரவை மீறியதற்காக இபிஎஸ் தரப்பு அளிக்கும் தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகரின் பரிசீலனைக்குச் செல்லும். இரு தரப்பிலும் எந்த அணி உண்மையான அதிமுக என்பதையும், எந்தக் கொறடாவின் உத்தரவு செல்லும் என்பதையும் சபாநாயகர் விசாரித்துத் தீர்ப்பளிக்கும் வரை அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பதவிகளுக்கோ, நாளைய வாக்கெடுப்பின் முடிவுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்றே அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Read Entire Article