ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் மணிக்கு 141 கிலோமீட்டர் வேகத்தில் வாகனமோட்டியவருக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்
அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் இரு மடங்கு அதிக வேகமாக, ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் மணிக்கு 141 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தை செலுத்திய ஆடவருக்கு $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தண்டனைப் பெற்ற அந்த ஆடவர் பெயர் ஆண்ட்ரூ ஃபிலிப் லீ.
2024ம் ஆண்டு செப்டம்பரில் நிகழ்ந்த அந்த சம்பவம் தொடர்பில் லீக்கு அபராதத்துடன் வாகனம் ஓட்டவும் 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நடைபெற்ற விசாரணையின்போது லீ, குறிப்பிட்ட அந்த வாகனத்தை வேறு யாராவது ஓட்டியிருக்கலாம் என்று கூறியிருந்தார்.
மேலும், குற்றச்சம்பவம் நிகழ்ந்தபோது கார் தம்மிடம் இல்லை என்றும் அது பராமரிப்பிற்காகப் பட்டறையில் இருந்தது; ஒருவேளை வேறு யாராவது அதை இயக்கியிருக்கலாம் என்றும் லீ சொன்னார்.
தமது ‘மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்350’ காரை தமது முன்னாள் காதலியும் அவ்வப்போது ஓட்டுவது உண்டும் என்றும் மேலும் தெரிவித்திருந்தார் லீ.
ஆனாலும், லீயின் முன்னாள் காதலி அளித்த சாட்சியத்தில், லீ தமது வீட்டிற்கு வந்தபோது, அவர் தம்மிடம் சொன்ன முதல் வாக்கியம், ‘‘காவல் துறை அதிகாரிகள் என்னை தொடர்ந்து வருகின்றனர்,’’ என்பதுதான் என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே, வேகமாக வாகனம் ஓட்டிய குற்றம் நிகழ்ந்த அன்று மதியம், லீ தம்மை அழைத்துச் செல்வதற்காக தாம், தம் வீட்டில் காத்திருந்ததாகவும் முன்னாள் காதலி கூறியிருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் நடந்தபோது லீயின் கார் பட்டறையில் இல்லை என்பதை அரசாங்கத் தரப்பு நிரூபித்தது.
மேலும் லீயின் முன்னாள் காதலி அளித்த சாட்சியம் நம்பும்படியாகவும், 141கிமீ வேகத்தில் லீ சாலையில் விரைந்ததை உறுதிப்படுத்துவதாக இருந்ததாகவும் நீதிபதி கூறினார்.
குற்றச் சம்பவம் தொடர்பில் தமக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்திய லீ, வாகனம் ஒட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
.png)






English (US) ·