சிங்கப்பூர்ப் பொருளியலில் உற்பத்தித் துறையின் பங்கு ஏறக்குறைய 20 விழுக்காடு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சிங்கப்பூரில் உற்பத்தித் துறையினரின் செலவுகள் கடந்த ஆண்டு (2025) சற்றுக் கூடியதாக வர்த்தக, தொழில் அமைச்சு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) தெரிவித்திருக்கிறது.
ஊழியர்களுக்கான செலவு குறைந்தபோதிலும் அந்தத் துறையில் உள்ள நிறுவனங்கள், வேலைகளை வெளித்தரப்பினரிடம் கொடுத்ததால் கூடுதலாய்ச் செலவிட்டதாக அமைச்சு சொன்னது.
சிங்கப்பூர்ப் பொருளியலில் உற்பத்தித் துறையின் பங்கு ஏறக்குறைய 20 விழுக்காடு. வெளித்தரப்பினரிடம் வேலைகளைக் கொடுத்ததால் செலவு, 2025ல் அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.6 விழுக்காடு கூடியது.
உற்பத்தியாளர்கள், கூடுதல் காப்புரிமைக் கட்டணங்களைச் செலுத்தினர். மதிநுட்பச் சொத்து போன்ற மற்றத் தரப்பினருக்குச் சொந்தமானவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்கள் அவற்றுள் அடங்கும்.
விளம்பரம், முகவர் சேவைக் கட்டணம் போன்ற செலவுகளும் அதிகரித்தன.
இருப்பினும் ஒட்டுமொத்தப் பொருளியலில், ஊழியர் செலவு இவ்வாண்டு உயரக்கூடும் என்று கருதப்படுகிறது.
உற்பத்தித்திறன் வளர்ச்சி மிதமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பது அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இவ்வாண்டும் ஊழியருக்கான சம்பளம் கடந்த ஆண்டைப் போலவே உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு சொன்னது.
இந்த ஆண்டில் எண்ணெய் விலை குறையக்கூடும் என்று கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் தண்ணீர், மின்சாரம், எரிவாயு, எரிபொருள், போக்குவரத்துச் செலவுகள் முதலியவை இவ்வாண்டு மேலும் மிதமான நிலையை அடையக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், சிங்கப்பூர்ப் பொருளியல் சென்ற ஆண்டு 5 விழுக்காடு கூடியதாக அமைச்சு அறிவித்தது. ஏற்கெனவே முன்னுரைக்கப்பட்ட 4.8 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம்.
இவ்வாண்டுக்கான வளர்ச்சி முன்னுரைப்பையும் அது 2 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காட்டுக்குள் இருக்கும் என்று மேல் நோக்கித் திருத்தியிருக்கிறது.
ஏற்கெனவே அது 1 விழுக்காட்டிற்கும் 3 விழுக்காட்டிற்கும் இடையில் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.
போன ஆண்டின் பொருளியல் வளர்ச்சிக்கு ஊழியர்கள், நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மேம்பட்டதும் ஒரு காரணம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணை நிர்வாக இயக்குநரும் தலைமைப் பொருளியலாளருமான திரு எட்வர்ட் ராபின்சன் கூறினார்.
.png)







English (US) ·