தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்வதாக அரசு அறிவித்த நிலையில், அந்நிறுவனம் அதை மறுத்துள்ளது. இது திமுக அரசின் நாடகம் என பாமக குற்றம் சாட்டியுள்ளது,
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உறுதியளித்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்த நிலையில், அப்படி எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்புத் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதில் கொடுத்தார் அதில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைவது உறுதி என தெரிவித்து அன்புமணியை விமர்சித்தார். இந்த நிலையில் பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. வானத்திற்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்திருக்கிறார். ஆனால், கடைசி வரை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவில்லை.
தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனம் உறுதியளித்ததா, இல்லையா? என்பது தான் இங்கு பிரச்சினை. ஒரு மாநிலத்தில் ஒரு நிறுவனம் முதலீடு செய்கிறதா, இல்லையா? என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனம் தான் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியது உண்மை; ஆனால், புதிய முதலீடுகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பதை அறிக்கை மூலம் ஃபாக்ஸ்கான் நிறுவனமே தெளிவுபடுத்தி விட்டது. அதுமட்டுமின்றி இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசுக்கும், ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்திற்கும் இடையே எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் திங்கள்கிழமை கையெழுத்தாகவில்லை. இதன் மூலம் திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது.
தமிழ்நாட்டில் புதிய முதலீட்டை உறுதி செய்யவில்லை என்று ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனமே தெளிவுபடுத்தி விட்ட பிறகு,‘‘ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, சரியான, எந்தவித தவறும் இல்லாத 100/100 உண்மையான செய்தி” என்று கூறுவதற்கு டி.ஆர்.பி. இராஜா யார்? ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரா அவர்? ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் புதிய பிரதிநிதியாக ராபர்ட் வூ அண்மையில் பொறுப்பேற்றார். அதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ராபர்ட் வூ மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கிறார் அல்லது சந்திக்க வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், திமுக அரசு தான் இந்த எளிய நிகழ்வை வைத்துக் கொண்டு திரைக்கதை வசனங்களையெல்லாம் எழுதி ரூ.15,000 கோடி முதலீட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. அந்த நாடகம் அரை நாளில் அம்பலமானதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்.
டி.ஆர்.பி. இராஜா மற்றும் அவரது குழுவினர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்களை இத்தகைய நாடகங்களின் மூலம் ஏமாற்ற முடியாது. திமுக அரசு நடத்தும் நாடகங்களின் கிளைமாக்ஸ் காட்சி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு திமுகவே எதிர்பாராத முடிவை அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டு மக்கள் எழுதுவார்கள். இது உறுதி. நிறைவாக ஒன்று.... அரசியல் களத்தில் ஓர் தலைவர் அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அரசியல்ரீதியில் பதில் அளிக்க வேண்டும். அரசியல்ரீதியாக பதிலளிக்க முடியாதவர்கள் தான் குற்றச்சாட்டு முன்வைத்தவர்களின் குடும்ப சிக்கலை இழுப்பார்கள். அப்படித் தான் கோழை டி.ஆர்.பி. இராஜாவும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் குடும்பப் பிரச்சினையை இழுத்திருக்கிறார். திமுகவின் கலாச்சாரமே இது தான். திமுகவிடமிருந்து ஒருபோதும் நாகரீக அரசியலை எதிர்பார்க்க முடியாது.
அமைச்சர் டி.ஆர்.பி. இராஜாவின் குடும்பப் பிரச்சினைகள் குறித்தும், திமுகவில் உள்ள பலரின் குடும்பப் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டும் என்று நினைத்தால் ஆயிரமாயிரம் விஷயங்கள் உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் நாங்கள் பேச மாட்டோம். அது நாகரீகமும் இல்லை; அரசியல் அறமும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். அவற்றையெல்லாம் பேசும் அளவுக்கு எங்கள் தலைமை எங்களை மோசமாக வளர்க்கவில்லை என வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.