தக்களி தான் பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. அதைச் சுற்றி நின்றவர்கள், அதன் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியபடியே நீண்ட நேரம் பார்வையிட்டனர்
Published:1 min agoUpdated:1 min ago

வெள்ளலூர் அகழாய்வு
பழமையான பொருட்கள் மக்களின் பார்வைக்கு...
கோவையின் வெள்ளலூரில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள், சங்ககால வணிகத் தொடர்புகள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக, "தக்களி" எனப்படும் நூல் நூற்கும் கருவி, ரோமானிய வணிகத் தொடர்புகளுக்கான முக்கிய தடயமாக ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நொய்யல் நதிக்கரையின் தென்கரையில் அமைந்துள்ள வெள்ளலூர், தொல்லியல் அகழாய்வின் மூலம் கோவையின் வரலாற்றை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பாக தமிழ்நாடு முழுக்க எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அவற்றில், கோவையில் அமைந்துள்ள வெள்ளலூரும் ஒரு முக்கிய அகழாய்வுத் தளமாகத் தேர்வு செய்யப்பட்டது.
முதல் கட்ட அகழ்வாராய்ச்சி நிறைவடைந்து, அதில் கிடைத்த பழமையான பொருட்கள் மக்களின் பார்வைக்கு 19/07/2026 அன்று காட்சிப்படுத்தப்பட்டது

வெள்ளலூர் அகழாய்வு
அங்கு மாணவர்கள், ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் என பலரும் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
அங்கு வந்தவர்களின் சந்தேகங்களுக்கு, அகழாய்வின் பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார் வெள்ளலூர் அகழாய்வு இயக்குநர் சுரேஸ்.
பத்தாம் நூற்றாண்டில் 'தென்னூர்' என அறியப்பட்ட இப்பகுதி, பதினோராம் நூற்றாண்டில் 'வெள்ளலூர்' என்ற பெயரைப் பெற்றது. வேளீர்கள் என்ற குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் 'வேளிலூர்' என்றும் அழைக்கப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
'வெள்ளநீர் தேங்கும் இடம்' என்பதன் அடிப்படையிலேயே 'வெள்ளலூர்' என்ற பெயர் உருவானதாகவும் விளக்கப்படுகிறது.
அகழ்வாராய்ச்சி தொடங்குவதற்கான மூலகாரணம்:
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தற்செயலாக நடைபெற்ற இரண்டு தனித்தனி ஆய்வுகளில் மொத்தம் ஆயிரம் ரோமன் நாணயங்கள் கிடைத்ததாக வரலாற்று ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதுவே தற்போதைய அகழாய்வுக்கான முக்கிய அடிப்படையாக அமைந்ததாக இயக்குநர் சுரேஸ் விளக்கினார்.

வெள்ளலூர் அகழாய்வு
இதற்கு முன்பே வெள்ளலூரில் ரோமன் நாணயங்கள், கணையாழிகள், சங்க மணிகள் உள்ளிட்ட பல தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. அந்தத் தொடர்ச்சியில்தான் இப்பகுதி தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பாக வெள்ளலூரில் ஏப்ரல் முதல் வாரத்தில் அகழாய்வு தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வணிகம்:
பாலக்காட்டையும் கரூரையும் இணைத்த 'ராஜகேசரி பெருவழி' பண்டைய வணிகப் பாதையாக இருந்தது. அந்தப் பாதையில் அமைந்திருந்த வெள்ளலூர், முக்கிய வணிக மையமாக விளங்கி உள்ளது
ரோமானிய வணிகத் தொடர்புகளை உறுதிப்படுத்தும் நாணயங்கள் உள்ளிட்ட பல தொல்லியல் சான்றுகள் வெள்ளலூரில் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
கிடைத்த தடயங்களும் பொருள்களும்:
அகழாய்வு நடைபெற்ற சிறிய பகுதியைச் சுற்றி கி.மு.முதலாம் நூற்றாண்டிலேயே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பண்டைய குடியிருப்பு இருந்திருக்கலாம் என்பதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது

வெள்ளலூர் அகழாய்வு
அதில் ஒரு சிறிய பகுதியை தேர்ந்தெடுத்து அகழ்வாராய்ச்சியை செய்திருக்கிறது தமிழ்நாடு தொல்லியல் துறை.
வெள்ளலூரில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் மூன்று கட்டங்களாக கிடைத்திருக்கிறது. கி.மு முதலாம் நூற்றாண்டில் இருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை முதல் கட்டமாகவும், கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை இரண்டாம் கட்டமாகவும், கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி 19வது நூற்றாண்டு வரை மூன்றாவது கட்டமாகவும் மக்கள் வாழ்ந்ததை பிரித்துப் பார்க்க முடிகிறது.
அகழாய்வில் கிடைத்த பொருட்களில் சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், கணையாழிகள், இரும்புப் பொருட்கள், அகல் விளக்குகள், அம்மி உள்ளிட்ட பல வாழ்வியல் சான்றுகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் விட ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது சுடுமண்ணால் செய்யப்பட்ட சிறிய 'தக்களி'.
தக்களி தான் வெள்ளலூரையும் ரோமனையும் இணைத்த பொருளாக தனித்து நிற்கிறது.
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த 'தக்களி'
தக்களி என்பது சுடுமண்ணால் கோள வடிவில் உருவாக்கப்பட்டு, அதன் நடுப்பகுதியில் துளையுடன் சுழலக்கூடிய வகையில் அமைந்துள்ள ஒரு கருவியாகும். இது அளவில் சிறியதாகவும் குறைந்த எடையுடனும் காணப்படுகிறது. பருத்தி நாரை முறுக்கி வலுவான நூலாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் முக்கியமான கருவியே தக்களி.
தக்களி நூல் நூற்கப் பயன்படும் கருவி என்பதால், வெள்ளலூரில் ஜவுளி உற்பத்தி அல்லது நூல் நூற்புத் தொழில் நடைபெற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தக்களி கிடைத்திருப்பது, இப்பகுதியில் நூல் நூற்புத் தொழில் இருந்திருக்கலாம் என்பதற்கான முக்கியத் தடயம்," என்றார் இயக்குநர் சுரேஸ்.
ரோமானிய வணிகத் தொடர்புகளுடன் இதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் மேலும் விளக்கமளிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

வெள்ளலூர் அகழாய்வு
தக்களி தான் பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. அதைச் சுற்றி நின்றவர்கள், அதன் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியபடியே நீண்ட நேரம் பார்வையிட்டனர்
இவ்வளவு சிறிய கருவி இத்தனை பெரிய வரலாற்றைச் சொல்லுமா? என்று காட்சியைப் பார்வையிட்ட ஒரு கல்லூரி மாணவர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினார்.
நாணயங்கள்:
அகழாய்வில் தற்போது நான்கு நாணயங்கள் கிடைத்துள்ளன.
வெள்ளலூரில் இதற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட ரோமன் நாணயங்களில் அகஸ்டஸ் (Augustus), டைபீரியஸ் (Tiberius), கிளாடியஸ் (Claudius), நீரோ (Nero) ஆகிய ரோமப் பேரரசர்களின் காலத்தைச் சேர்ந்த நாணயங்களும் இடம்பெற்றுள்ளதாக தொல்லியல் துறை குறிப்பிட்டுள்ளது.
தற்போது கிடைத்த நாணயங்கள் ரோமானிய நாணயங்களா என்பதை உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல், கிடைத்த அனைத்து தொல்பொருட்களும் கால நிர்ணய (Dating) சோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

வெள்ளலூர் அகழாய்வு
கிடைத்திருக்கும் பொருட்கள் வெறும் தொல்பொருட்கள் அல்ல, தமிழ் சமூகத்தின் வாழ்வியல், வணிகம், தொழில்நுட்பம் மற்றும் பண்பாட்டின் சாட்சிகள். அந்த வகையில், வெள்ளலூர் அகழ்வாராய்ச்சி கோவையின் வரலாற்றை மேலும் செழுமைப்படுத்துவதோடு, தமிழகத்தின் சங்ககால வணிகத் தொடர்புகளையும் புதிய கோணத்தில் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
தற்போது கிடைத்துள்ள பொருட்களின் கால நிர்ணய ஆய்வும், நாணயங்கள் குறித்த ஆய்வும் நிறைவடைந்த பிறகு வெள்ளலூரின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து மேலும் தெளிவான தகவல்கள் கிடைக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
.png)







English (US) ·