(இடமிருந்து) அமைச்சர் கா. சண்முகம், அமைச்சர் டான் சீ லெங், ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ ஊடகத்தின் தலைமை ஆசிரியர் டெரி சூ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகிய இருவருக்கும் ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ (டிஓசி) ஊடகத்தின் தலைமை ஆசிரியர் டெரி சூ 154,000 வெள்ளி செலுத்தவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள் இருவரும் தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கான செலவுகளை டெரி சூ ஏற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
154,000 வெள்ளியில் 78,000 வெள்ளி வழக்கறிஞர்கள் கட்டணம் ஆகும். அமைச்சர் ஒருவரின் வழக்கறிஞர் செலவு 39,000 வெள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை மற்ற செலவினங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் சண்முகத்திற்கான செலவினத் தொகை $44,398.25 என்றும் அமைச்சர் டானின் செலவினத் தொகை $32,064.25 என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு செலவு தொடர்பான நீதிமன்ற அறிவிப்பின்போது திரு டெரி சூவும் அவருடைய வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் இல்லை.
சிங்கப்பூரின் உயர்தரப் பங்களா பரிவர்த்தனைகள் பற்றி 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “சிங்கப்பூர் உயர்தர பங்களா தொடர்பான ஒப்பந்தங்கள் அதிகளவு ரகசியமாகச் செய்யப்படுகின்றன,” என்ற தலைப்பில் புளூம்பர்க் கட்டுரை வெளியிட்டிருந்தது.
அதனைச் சுட்டிக்காட்டி அதே கட்டுரையை ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ வெளியிட்டது. கட்டுரையில் இரண்டு அமைச்சர்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதன் ஆசிரியர் டெரி சூ மீது இரண்டு அமைச்சர்களும் அவதூறு வழக்கைத் தொடுத்தனர்.
வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதில் டெரி சூ இரண்டு அமைச்சர்களுக்கும் தலா $210,000 இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
.png)








English (US) ·