சென்னை, ஜூலை 21- எரிவாயு தட்டுப்பாட்டால், ஏப்ரல் மாதம் அம்மா உணவகங்களில் வருவாய் குறைந்தது என்று, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படி, அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67,164 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வந்த நிலையில், தற்போது, தினசரி சராசரியாக 1.04 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
அம்மா உணவகங்களின் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.87.60 லட்சம் வருவாய் வந்த நிலையில், தற்போது ரூ.1.35 கோடியாக உயர்ந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே அம்மா உணவகங்களை தரம் உயர்த்தவும், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்கவும் தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக, 2022ஆம் ஆண்டு முதல் அம்மா உணவங்கங்களின் தரமும், விற்பனையும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. 2025-2026 நிதியாண்டில் ரூ.7.06 கோடி செலவில், அம்மா உணவகங்களின் இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டன.
சீரமைப்பு பணிக்கு
ரூ.20 கோடி ஒதுக்கீடு
அம்மா உணவகங்களின் கட்டடங்கள் சீரமைப்பு பணிகளுக்கு 2024-2025 நிதியாண்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 290 அம்மா உணவக கட்டடங்களின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே, அம்மா உணவகங்களில் பயன்பெறும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததுடன், 2026 ஜனவரி மாத வருவாய் ரூ.1.13 கோடியை எட்டியது. பின்னர் ஒவ்வொரு மாத வருவாயும் ரூ.1 கோடிக்கு மேல் என்ற சராசரி நிலையில் நீடித்தும் வந்தது.
இந்நிலையில், பன்னாட்டுப் போர் பதற்ற சூழலால் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் உணவு தயாரிப்பு அளவும், விற்பனையும் ஏப்ரல் மாதம் மட்டுமே சரிந்தது.
பின்னர், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால், மே, ஜூன் மாதங்களில் மீண்டும் விற்பனை முந்தைய நிலையை (ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை) எட்டியது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
.png)
5 hours ago
6







English (US) ·