ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற ‘நான் பேசுறேன் நீ கேளு’ நிகழ்ச்சியில் பார்வையாளர்களுடன் தீபக். - படம்: மந்திரா இவென்ட்ஸ்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் மேடை நகைச்சுவைகளுக்கும் இடமளிக்கும் சிங்கப்பூர் மேடைகளில் அண்மையில் முற்றிலும் மாறுபட்ட ‘உரை நிகழ்ச்சி’ அரங்கேறியது.
பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதற்குப் பதிலாக, அவர்கள் சொல்ல முடியாமல் தவிக்கும் உணர்வுகளுக்குக் குரல் கொடுத்து, அவர்களின் மனக்காயங்களுக்கு மருந்தாக ‘நான் பேசுறேன் நீ கேளு’ நிகழ்ச்சி அமைந்தது.
பதமான ஏற்ற இறக்கங்களுடன், இதமான குரலில், உருக்கமான வார்த்தைகளால் கதை சொல்லும் தீபக், கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அன்பு, காதல், வலி, குடும்பம் எனப் பல்வேறு தலைப்புகளைப் பேசி பார்வையாளர்களைத் தன்வயப்படுத்தினார்.
கெப்பல் சாலையில் உள்ள அகம் தியேட்டர் அரங்கில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குக் கிட்டத்தட்ட 200 பேர் திரண்டிருந்தனர்.
மெல்லிசையுடனும் மெழுகுவத்தி ஒளியுடனும் கலந்த தீபக்கின் குரலுக்கு மயக்கும் தன்மை இருந்ததால், உருண்டோடிக்கொண்டிருந்த அவரது உரையைப் பார்வையாளர்களும் சலிக்காமல் செவிமடுத்ததைக் காண முடிந்தது.
மனித வாழ்க்கையில் வந்து செல்லும் மனிதர்களையும், அவர்கள் விட்டுச்செல்லும் வலிகளையும் நாம் மனமார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தபோது, பார்வையாளர்கள் அழுவது, உற்றுப் பார்ப்பது எனப் பலவிதமாகத் தங்கள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைக் காண முடிந்தது.
பெற்றோரைப் பற்றிப் பேசுகையில், தம் தந்தையார் அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்தாவிட்டாலும், செயல்களின்மூலம் குடும்பத்திற்காக அவர் காட்டிய அக்கறையையும் உழைப்பையும் தீபக் பகிர்ந்துகொண்டார்.
மருத்துவமனையில் நேர்ந்த தம் தந்தையின் எதிர்பாராத மரணமும், அதைத் தொடர்ந்து அவர் சந்தித்த ஆழமான சோகமும் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களை அவர் விவரித்தார்.
வாழ்க்கை மிகவும் குறுகியது என்பதால், நம்மை உயிராக நேசிக்கும் உறவுகளுக்காகவும் நேரத்தை ஒதுக்கி அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் தொடங்கிய பேச்சுக்கலை
சென்னையைச் சேர்ந்த 38 வயதான தீபக், முன்னாள் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் ஆவார். எவ்வித முன்னனுபவமும் இன்றி, தன் சொந்த ஆர்வத்தில் இத்தகைய உரைகளை ஆற்றத் தொடங்கியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டும் காணொளிகளைப் பதிவிடத் தொடங்கிய அவர், புதிய வகைக் கலைப்படைப்பை மேடைகளில் நிகழ்த்த எண்ணியதில்லை என்றார்.
“இத்தகைய கதைகளைத் தொடர்ந்து சொல்கையில் மக்களுக்கு உண்மையில் என்ன தேவைப்படுகிறது என்பதை மேலும் ஆழமாகப் புரிந்துகொண்டேன். பலர் தங்களின் வலிகளை வெளிப்படுத்த ஒரு ‘குரல்’ இன்றித் தவிப்பதை உணர்ந்தேன். அவர்கள் அதிலிருந்து மீண்டு வர உதவவே இத்தகைய படைப்புகளைச் செய்ய முடிவெடுத்தேன்,” என்று அவர் சொன்னார்.
அகமகிழ்ந்த பார்வையாளர்கள்
தீபக்கை இன்ஸ்டகிராமில் பின்தொடரும் தன் நண்பர்கள் மூலமாகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகக் குறிப்பிட்ட 32 வயது கேஷவ் சைதன்யா, “ஒட்டுமொத்தத்தில், இது ஒரு சிறப்பான நிகழ்ச்சி. நான் இதை மிகவும் ரசித்தேன். வீட்டிற்குச் சென்று நிதானமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்காக நான் சில குறிப்புகளையும் எடுத்துக்கொண்டேன்,” என்றார்.
ஜோகூர் பாருவில் வசித்துக்கொண்டு சிங்கப்பூரில் செயலாக்க அதிகாரியாகப் பணிபுரியும் 28 வயதான ராஜேஸ்வரன், தமது மனச்சுமையை இறக்கிவைக்கவே இங்கு வந்ததாகக் கூறினார்.
“வேலை செய்துகொண்டிருக்கும்போதே குடும்பம், காதல் அல்லது பணப் பிரச்சினைகள் வந்தால், அது மனத்திற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இங்கு வந்தது மிகுந்த ஆறுதலாக அமைந்தது,” என்றார் அவர்
சிங்கப்பூரில் கிடைத்த பெருவரவேற்பைத் தொடர்ந்து, இவ்வாண்டு இறுதிக்குள் மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் தங்கள் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
.png)








English (US) ·