உருமாறி தோற்றம்தரும் பார்ப்பனியம் – தனது மேலாதிக்கத்தை
உறுதிப்படுத்திக் கொண்டே, பாதிக்கப்பட்டதாகப் பாசாங்கு செய்திடும்
– பாலு சுனில் ராஜ், பிரதிராஜ் போரா
உறுதிப்படுத்திக் கொண்டே, பாதிக்கப்பட்டதாகப் பாசாங்கு செய்திடும்
– பாலு சுனில் ராஜ், பிரதிராஜ் போரா

நேற்றைய (15.5.2026) தொடர்ச்சி…
உயர்ஜாதியினரின் இப்படிப்பட்ட கண்காணிப்புகள், உயர்ஜாதியினரின் பொது அறிவு நிலையின் பரந்துபட்ட நிலை குறித்துக் கூற உதவியாக உள்ளன. யு.ஜி.சி.யின் ஒழுங்கு விதிகளை எதிர்த்து உயர்ஜாதியினர் நடத்திய போராட்டங்கள் அத்தகைய நிலையினைக் காட்டுவதாக உள்ளன. மார்க்சிய அறிஞர் கிராம்சி கூறிய பொதுஅறிவு நிலையையும் இத்தகைய சூழலில் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. கிராம்சி கூறும் பல்வேறு சமூகக் குழுக்கள், உலகைப் புரிந்துக் கொள்ள முனையும் பொது அறிவு நிலையானது (common sense), பெரும்பாலான காலங்களில் துண்டு துண்டாக முன்னுக்குப் பின் முரண்பாடாக கேள்வியற்றும் இருக்கும். ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே அந்த பொதுஅறிவு நிலை மனசாட்சி அளவில் ஒரே சமயத்தில் அடங்கிப் போவதாகவும் கிளர்ச்சியில் ஈடுபடுவதாகவும் இருக்கும். கிராம்சி மேலும் குறிப்பிடுவதாவது:
“முற்போக்கு அரசியல் செயல்பாட்டாளர்களின் திட்டமெல்லாம் துண்டுதுண்டாக இருக்கும். பொதுஅறிவு நிலையினை நல்லறிவு நிலைக்கு (good sense) பக்குவப்படுத்துவதாகும்”. இந்தச் சட்டகத்தை பரவலாக்கி உயர்ஜாதியினரின் உணர்வுகளை ஆய்வு செய்திடுவதற்கு நீட்டிக்க வேண்டும். ஆதிக்க உயர்ஜாதியினரின் பொதுஅறிவு நிலையும், துண்டு துண்டாகவும் இருக்கும். ஆரம்பித்த நிலையில் அப்படியே இருக்கும். பாதிக்கப்பட்டதாகக் கூறுவதும், ஆக்கிரமிப்பு செய்வதாக உள்ளதும் முரண்பட்ட போக்குகளை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. உயர்ஜாதியினர் ஒரு நிலையில் ஆதிக்கப் போக்கினை உறுதி செய்து ஜாதியப் பெருமையுடன் உள்ளனர். மறுநிலையில் இடஒதுக்கீடு திட்டங்களால் பாதிக்கப்பட்டதாகத் தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். ஆய்வாளர் காங்க் சுட்டிக்காட்டுவதாவது:
பகட்டான பேச்சை சார்ந்தவர்கள் தெளிவாகவும் வேறுபட்டும் இருந்தாலும், உயர் ஜாதியினர் அடையாளத்தால் ஒன்றாக இருப்பதால் உயர்ஜாதியினரின் சலுகைகளுக்கு உதவிடும் வகையில் உள்ளது. இத்தகைய போக்குகள் உயர்ஜாதியினருக்கான சலுகைகளை உற்பத்தி செய்கின்றன. நல்லறிவு (good sense) வளர்த்தெடுக்கப்படலாம் – குறிப்பாக உயர்ஜாதி சமூக கூட்டுகளுக்குள் நல்லறிவினை பரப்பிடுவது ஒருவகையில் முடியாததாகும்.
பார்ப்பனியத்தைப் பொறுத்த அளவில் முரண்பட்ட போக்குகளான ஆதிக்க ஜாதிநிலையையும், பாதிக்கப் பட்டதான நிலையையும் காணமுடிகிறது. இதற்கு அறி வாற்றவியலுடன் சமூகப் பிணைப்பைச் சேர்த்துப் பார்த்தால், உயர்ஜாதியினர் ஜாதிகளை விளக்கும் தன்மையையும் அவர்களுக்குள்ள அதிகார நிலை பற்றிய புரிதலுக்கு, பார்ப்பனியம் – இந்த வரலாற்றுச் சூழ்நிலைச் சேர்க்கையை ஏற்றுக்கொண்டு வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
யு.ஜி.சி. எதிர்ப்பில் ஆதிக்க உறுநிலையையும் பாதிக்கப்பட்டதான தோற்றமும்:
உயர்ஜாதி எதிர்ப்பாளர்கள் பெரிய விளக்கங்களை தெரிவிக்கும் பொழுது, தகுதி – திறமை என்பது முற்றுகைக்கு ஆட்படுகிறது. கற்றிடும் பாடங்களால் உயர்ஜாதி மாணவர்கள் உண்மையான பாதிப்பாளராகிறார்கள். இத்தகைய சூழல் ஒரு கவிதையாக உள்ளது. கவிஞர் குமார் விஸ்வாஸ் தன்னை ஒரு துரதிருஷ்டமான உயர்ஜாதியினர் என்பார். உயர்ஜாதியினரின் வாழ்ந்த அனுபவங்களை லென்ஸ் மூலம் துரதிருஷ்டமானது என பெரிதுபடுத்தி விளக்கமளிக்கிறார். உயர்ஜாதியினராக இருப்பது துரதிருஷ்டமாகத்தான் இருக்கமுடியும். அண்மையில், ஒப்பிட்டு கூற்றை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மனிஷ் திவாரி வெளிப்படுத்தியுள்ளார். சமகாலத்து இந்தியாவில் பிராமணர்களின் இருப்பை ஹிட்லர் காலத்து யூதர்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்.
இப்படிப்பட்ட பாதிக்கப்பட்டதான நிலையில் ஒழுங்கு விதிகள் குறித்து பொதுவெளியில் நிலவும் சவர்ணர்களின் (உயர்ஜாதியினரின்) உறுதிநிலை கவனம் பெறுகிறது. உயர்ஜாதியினரின் எதிர்ப்பும், யு.ஜி.சி. ஒழுங்கு விதிகள் குறித்து ஊடகங்களின் ஆதரவு நிலையும் வெளிப்படுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் யு.ஜி.சி. ஒழுங்கு விதிகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி பேரணிகளை நடத்தினர். இந்திய வட்டமேஜை மற்றும் தலித் வாய்ஸ் போன்ற சுதந்திரமான இணையதளங்கள் தொடர்ந்து உயர்ஜாதியினரின் சீற்றத்தினை திறனாய்வு செய்தன – எவ்வாறு அரசியலமைப்புச் சட்ட நியாயவிதிகளுக்குப் புறம்பாக பார்ப்பனிய வரலாறு நெடுங்காலமாக நகர்ந்து வந்துள்ளது என்பதை அந்தத் திறனாய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. யுஜிசியின் ஒழுங்குவிதிகளுக்கு ஆதரவாக ஒரு அதிகாரிகள் அமைப்பு பேரணி நடத்தியபொழுது வலதுசாரியினரால் தாக்குதலுக்கு ஆளாகியது. ஒரு கல்வி ஆய்வு மாணவியும், ஒரு மாணவர்-செயற்பாட்டாளரும் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டு, தகாத வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டனர். இந்த நிகழ்வுகள் அந்த மாணவி மெளரிஷ் நகர் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் கொடுக்கச் சென்றபொழுது நடந்தவைகளாகும். இதே காவல் நிலையத்திற்கு முன்புதான் ‘பிராமணீயம் வாழ்க!’ முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முழக்கங்கள் என்ற நிலையினைத் தாண்டி பலவந்த அச்சுறுத்தலும், வன்முறையும் வெடித்தன. ‘பார்ப்பனியம்’, ஒரு கோட்பாடு நிலையில் மட்டும் நிற்காது, மாற்றுக் கருத்தினை அடக்கவல்ல, ஒடுக்கப்பட்டோரின் அவலக் குரலை கேட்கப்படாமல் செய்திடும் அழிக்கும் சக்தியாகவும் இருக்கும் என்பதைக் காட்டுவதாக தாக்குதல் நிகழ்வுகள் இருந்தன.
தாக்கப்பட்ட அந்த மாணவி பாதுகாப்புக் கோரி காவல் நிலையத்தின் உதவியைக் கேட்க முனைந்தபொழுது காவல் நிலையத்திற்கு வெளியில் ‘பிராமணீயம் வாழ்க!’ முழக்கங்கள் கிளம்பியது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. ஜாதிய ஆதிக்கவாதிகளின் உள்ளக்கிடக்கைகளை ஒரு முனைப்படுத்தி அதன் மூலம் தலித், வெகுஜனமக்கள், பெண்கள் ஆகியோரின் கோரிக்கைகளை செயலற்றதாக்கி, நீரலைக்குள் மூழ்கிடச் செய்திடும் பரந்துபட்ட யுத்த தந்திரத்தினை, பொதுவெளியில் அரங்கேற்றிடும் நிகழ்வாகத்தான் இதனைக் கருதிட வேண்டும். ஒரு பெண் தனக்கான உரிமையினை வேண்டி ஒரு பொது நிலையத்தினை அணுகும் பொழுது அவர் எதிர்கொள்ளும் ஒன்றுக்கு மேற்பட்ட பலவித ஒதுக்கல் கணைகளை ஒரே தாக்குதலாக சந்திக்க வேண்டி உள்ளது. இது பாலினம் சார்ந்த பொதுவெளி அடக்குமுறை ஆணையாகக் கருதப்பட வேண்டும். உயர்ஜாதியினர் பொதுவெளியில் கூடுகிறார்கள் என்பதாக மட்டுமே இதை எடுத்துக் கொள்ளக் கூடாது. உரிமை வேண்டி களம் காணும் ஒடுக்கப்பட்டோரின் குரலை மட்டுப்படுத்தி வைத்திடும் உயர்ஜாதியினரின் உள்ளடித் திட்டமாகப் பார்க்க வேண்டும். இந்த நிலை எதனைக் காட்டுகிறது? அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிராக, உயர்ஜாதியினர், தங்களது பாதிக்கப்பட்டதான நிலையினை வெளிக்காட்டுவதாக நினைத்து தங்களுக்கு உரிமையற்ற விசயங்களை உரிமையுடையதாகக் காட்டிடும் அரசியல் சித்து விளையாட்டினை அம்பலப்படுத்திடும் நிலை புரிய வரும். இப்படிப்பட்ட பொதுவெளியில் நிகழும் ஆதிக்க அலையானது தெருக்களோடு நின்று விடாது; காவல் நிலையத்துடன் கட்டுப்பட்டு விடாது. உள்வெளி ஆதிக்கமாக – பல்கலைக்கழக வளாகங்களில், கல்விப் பாடத்திட்டத்தில், கல்விக் குழுக்களில் – இயல்பான உரிமைப் பண்பாக வெளிப்படும். இதனை விதவோ எனும் ஆய்வாளர் ‘உயர்நிலையினர் முற்றுகை’ (elite capture) எனும் சொல்லாட்சியில் குறிப்பிடுகிறார். இதன் பொருள்: ஏற்கனவே பல சலுகைகளைப் பெற்று அனுபவித்து வருகின்றவர்கள்; அமைப்பு ரீதியிலான சமத்துவமற்ற நிலையினைக் களைந்திட ஏற்படுத்தப்பட்ட (கல்வி) நிலையங்களையும், பிரசங்க நிலைகளையும், வளங்களையும் ஆதிக்கம் செலுத்தி அனுபவிக்கத் துடிக்கும் போக்கினைக் குறிப்பதாகும் ‘உயர்நிலையினர் முற்றுகை’ எனும் சொல்லாடலின் விளக்கம்.
இந்தியக் கல்விச் சூழலில் நன்கு திட்டமிடப்பட்ட முற்றுகையால்; தலித், ஆதிப்பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆசிரியப் பெருமக்கள் பேராசிரியர்கள் மற்றும் கல்வித்துறையில் கொள்கை முடிவு செய்வோர் – இவர்களின் பிரதிநிதித்துவம், போது மானதாக இல்லாமல் பெரும் மாற்றத்திற்கு வித்திடுகிறது. மய்ய அரசின் நிதி உதவி பெற்று, இடஒதுக்கீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த சட்டரீதியாக கடைப்பிடிக்கப் படுவதற்கு தடை நிலவுகிறது. உயர்ஜாதி கல்வியாளர்கள் இந்த ஒடுக்கப்பட்டோருக்கான இடங்களை மட்டுமே ஆக்கிரமிப்பு செய்வதில்லை; கூடுதலாக அறிவுநிலை, கல்வியியல் உளக்கட்டுப்பாடு, கல்வி உதவித் தொகை ஆகிய தளங்களில் பார்ப்பனிய மேலாதிக்க ஆணையானது நடுநிலையில் இருக்கும் கல்வித் தகுதியை கீழிறக்கம் செய்கிறது. இந்த மேலாதிக்கம் கொண்டு வரும் வழிமுறை களைக் கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் அந்த வழிமுறைகளினால் ஏற்படும் உணர்வு நிலைகள் ஜாதிய ஒதுக்கலுக்கு வழிவகுக்கும்.
உயர்ஜாதி ஆசிரியர்கள் உயர்ஜாதியினர் பாதிப்புகளால் – காயப்பட்ட உணர்வுகளோடு ஒடுக்கப்பட்ட மாணவர் களின் உணர்வுகளும், இடஒதுக்கீட்டு முறைகளும், ஜாதிக்கு எதிரான கல்வி கற்பிக்கும் முறையும் மய்யப் படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட சூழல்களாலும், குறுக்கீடுகளாலும் இடைஞ்சல் ஏற்படுவதுடன், அரசியல் தடத்தில் முனைப்படுத்தப்படுதலும் அல்லது கல்வித் துறைப் பற்றிய அக்கறையற்றப் போக்கும் குறிப்பாகத் தெரிகின்றன. உயர்கல்வி நிலையங்களில், நிலவிடும் ஜாதியப் பாகுபாடுகள் பற்றி அங்கு பயிலும் தலித், வெகுஜன ஆராய்ச்சி மாணவர்களும் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களும் பாதிக்கப்படும் கேள்விக்கு உட்படுத்திடும் பொழுது, அதற்காக வழக்கமாக நடைபெற வேண்டிய விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்படுவதில்லை. அதற்கு மாறாக அவர்களை உயர்ஜாதியினரும், உடன் பணிபுரிவோரும், அவமரியாதை செய்தும், மரியாதையற்ற முறையில் நடத்தியும், அவர்களது ஜாதி பற்றி தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டுவதும் வழக்கமாக இருக்கிறது. மேலும் உயர்ஜாதியினரிடம் ‘வெளிச்சம் சார் வெளிப்பாட்டு பார்வை’ காணப்படுகிறது. அதாவது தங்களது பிரச்சனை அல்லாமல் மற்றவர் (ஒடுக்கப்பட்டோர்) பிரச்சினை என வரும்பொழுது அது அவர்களுக்கு அற்பமாகத் தெரிகிறது. உயர்ஜாதியினர் மற்றவர்களுக்கு ஏற்படுத்திடும் காயத்தினைக் கருத்தில் கொள்ளாமல் தாங்கள் பாதிக்கப்பட்டதான நிலையினை மட்டும் தூக்கிப் பிடிக்கும் போக்கு நிலவுகிறது. அமைப்பு ரீதியாக ஒடுக்கப்பட்டோர் மீது ஏற்படுத்தப்படும் காயங்கள் பற்றிய விவரிப்பானது உயர்ஜாதியினரின் ஆதிக்க மனப்போக்கிற்கு எதிரான நிலையாக சித்தரிக்கப்படுகிறது. ஒரு பொருளில் இருந்து மற்றொன்றிற்குத் தாவிச் செல்லுகின்ற தன்மையினால் ‘உயர்ஜாதியினரின் செயல்கள்’ உயர்நிலையினர் முற்றுகையாக (elite capute) உருவெடுக்கிறது. ஒடுக்கப்பட்டோர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை வெளிப்படுத்தும் சொல்லாடல்கள் அனைத்தும் ஏற்கனவே அதிகாரமிக்கவர்களாக இருக்கும் உயர்ஜாதியினரின் நலன்களை பாதுகாக்கவே மாற்றியமைக்கப்படுகின்றன. கல்வி நிலையங்களை ஆக்கிரமிப்பதும், தெருக்களில் இறங்கிப் போராடுவதும், பலதரப்பட்ட பொதுவெளி நிலையில் இறங்கிச் செயல்படுவதும் உயர்ஜாதியினரால் வெவ்வேறு தளங்களாகப் பார்க்கப்படுவதில்லை. அவர்களது நோக்கத்தை நிறைவேற்றிடத் தொடரும் ஒரே நிலைப்பாடாகத்தான் அவர்களால் கருதப்படுகிறது. சவர்ணர்களாகிய உயர்ஜாதியினரின் பொதுவெளியினை ஏகபோகப்படுத்திடும் போக்காக மட்டுமல்லாமல், அறிவுத்தளம், நீதி, நியாயமான குரல்களை வரையறை செய்தும் வழங்கிடும் தளங்களையும் ஆக்கிரமிக்கும் நிலையாகவும் இருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் பாதிக்கப்பட்டதான நிலையினை வெளிப்படுத்தியும், ஆதிக்க நிலையினை உறுதிப்படுத்தியும் உயர்ஜாதியினர் கட்டமைக்கும் முரண்பட்ட பொதுஅறிவு நிலையானது யு.ஜி.சி. ஒழுங்குவிதிகளை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களால் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது. உயர்கல்வி நிலையங்களில் உயர்ஜாதியினரின் மனநிலையினை படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது. உலகளாவிய கருத்தியல் பார்வை என்ற போர்வையில், உண்மையில் தங்களது உயர்ஜாதியினருக்கான காரியத்தனமாக செயல்களை பிரதிப்பலிப்பதாக உள்ளது தெரிய வரும்.
ஒரு புதிய இயல்பாக்கிடும் நிலை?
உயர்ஜாதியினர் தாங்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் ‘பிராமணியம் வாழ்க’ எனும் வழக்கத்திற்கு மாறாக தெளிவுடன் எழுப்பிய முழக்கங்கள், அவர்களது உயர்ஜாதிய அடையாளத்தை பொதுவெளியில் காட்டுவதில் ஒரு குறிப்பிடத்தக்க புதிய மாற்றநிலையாகும். இடஒதுக்கீட்டிற்கு எதிரான முந்தைய கட்ட அரசியலில் – 1990ஆம் ஆண்டு மண்டல் போராட்டம் முதல் உயர்ஜாதியினரின் அணி திரட்டல் வரை – நடைபெற்ற விவாதங்களானவை – அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள பாகுபாடின்மையை மீறுவதை சுட்டிக் காட்டி வந்தன. உயர்ஜாதியினர், மக்கள் அரசின் திட்டங்களால் பாதிக்கப்பட்டதான நிலையில் வைக்கப்பட்டனர். பிறப்பின் அடிப்படையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. பாதிக்கப்பட்டதான நிலையில் உள்ள உயர்ஜாதியினர் பாதிக்கப்பட்டதான தொகையினர் என்பதைவிட ஒழுங்கற்ற திரட்டாக உள்ளனர். 2026 உயர்ஜாதியினர் நடத்திய போராட்டம் அவர்களது நிலையில் மாறுபட்டு பாதிக்கப்பட்டதான நிலையுடன் வெளிப்படையாக ஜாதி பற்றிய உறுதிநிலையினை ‘பிராமணீயம் வாழ்க’ எனும் சொல்லாடலால் காட்டி நிற்கிறது. அந்த நிலையில், ஒரே புள்ளியில் நிற்காமல் பரந்து விரிந்து பேசும் உருமாற்றத்தை உயர்ஜாதியினர் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டதான நபர்களாக மட்டும் தங்களை உயர்ஜாதியினர் கருதும் நிலையிலிருந்து ஜாதிக் கூட்டாக திரண்டு பொதுவெளியில் தங்களது அடையாளத்தை வலுவுடன் நிலைநாட்டுபவராக மாறி வருகின்றனர். இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். தமது ‘அடையாளத்தை உறுதிப்படுத்திடும் உயர்ஜாதியினரின் ஜாதி அரசியல் ஒரு புதிய தூண்டுதல் அல்லாத சைகையைக் காட்டுவதாக உள்ளது. இந்தப் போக்கானது பார்ப்பனியம் தன் உரிமைகளுக்காக வழக்காடி காத்திடுவதாக உள்ளது. உயர்ஜாதியினரின் உறுதிப்பாடும் ஆதிக்கப்போக்கும் யார் எந்த அதிகார நிலையில் உள்ளனர் என்பதை மட்டும் சார்ந்ததாக அல்லாமல், அந்தக் கட்டமைப்பும் கூட்டுச் செயல்பாடும், செயல் திட்டங்களும் தெளிவாகத் தெரிவிக்கின்ற வகையில் உள்ளன. இந்த தொடர்நிலைக்கு முன்னர், உலகு சார்ந்த சமத்துவ நிலை வலியுறுத்தப்பட்டது. இந்தத் தார்மீக சமத்துவ நிலை இப்பொழுது எடுத்தாளப்படுவதில்லை. மாறாக படிநிலை வரிசைச் சமூகம் சொல்லழகாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. சொல் புரட்டாக எடுத்தாளப்படுகிறது. யு.ஜி.சி. ஒழுங்கு விதிகளை எதிர்ப்பதற்கு முன்னதாகவே, பிறப்பின் அடிப்படையிலான உயர்வையும், மரபணு சார்ந்த மேன்மையையும் சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் பலவாறாக பதிவிடப்பட்டுள்ளன. உயர்ஜாதியினர் தங்களது கடந்த கால அமைதி காத்து ஆதிக்கம் செலுத்தும் வழிமுறை பயன் தராது எனக்கருதிய நிலையில் ஒரு புதிய மாற்று நிலையினை கட்டமைக்க முன்வந்துள்ளனர். இதன் அறிகுறிகள்தான் ‘பிராமணியம் வாழ்க’ முழக்கத்தின் மூலம் வெளிப்படையாக தங்களது ஜாதி அடையாளத்தைக் காட்டி வருவதாகும். இந்தப் போக்கை அவர்கள் அரசியல் ரீதியாக நிலைநிறுத்தி வருகின்றனர்.
தலித், வெகு மக்களின் அறிவார்ந்த சமூக அரசியல் இயக்கங்கள் கொடுத்து வரும் நீடித்த அழுத்தத்தினால் சமூகநீதி மறுத்த தகுதி – திறமை முறை பற்றிய கூற்றுகள் கருத்தியல் வலிமை இழந்து நிற்கின்றன. 2026-ஆம் ஆண்டு யு.ஜி.சி. ஒழுங்கு விதிகளை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களால் பார்ப்பனிய மேலாதிக்கப் போக்கு உருமாறி நிற்கும் (ஆதிக்க உண்மை நிலை மாறி அல்ல) நிலை நன்றாகவே தெரிகிறது. ஜாதியை மறுப்பதாகக் கூறும் நிலையிலிருந்து அதனை வெளிப்படையாகக் கொண்டாடும் நிலைக்கு பார்ப்பனியம் சென்றுள்ளது. ஜாதியக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு மற்றைய வழிமுறைகளையும் தெரிவு செய்து அவைகளைப் பயன்படுத்தப் பார்ப்பனியம் தொடங்கிவிட்டது. சமூகநீதி மறுத்த தகுதி – திறமை பற்றி பேசுவது உயர்ஜாதியினர் தங்களது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வழியாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. கல்வி நிலையங்களிலும், அரசுத் துறைகளிலும் ஒடுக்கப்பட்டோர் உரிய பங்கினைப் பெற ஜனநாயக வழியில் பெற்றிட இடஒதுக்கீடு முறை வழிஅமைத்தது. உயர்ஜாதியினர் தகுதி – திறமை என்பதன் பேரால் இடஒதுக்கீட்டிற்கு இடைஞ்சல் செய்து தங்களது ஏகபோக ஆதிக்க நிலையினைத் தக்க வைத்து வந்துள்ளனர். ஜாதி பாகுபாட்டை களைந்திட உள்ள அரசியலமைப்பு ஜனநாயக வழிமுறைகளுக்கு எதிராக உள்ள உயர்ஜாதியினர் எடுத்துள்ள அரசியல் வடிவம்தான் தகுதி – திறமை முறை பற்றிய பேச்சுகள். தங்களது உள்ளார்ந்த மேலாதிக்க நிலையினைத் தக்க வைத்திட இப்படிப்பட்ட பேச்சுகள் மட்டும் போதாது எனக் கருதித்தான் உயர்ஜாதியினர் தங்களது வெளிப்படையான, ஜாதி அடையாளத்துடன், ‘பார்ப்பனியம் வாழ்க’ எனும் முழக்கத்தையும் தற்பொழுது கையில் எடுத்துள்ளனர். இதனால் சிதறுண்டு கிடக்கும் உயர்ஜாதியினரின் பொது அறிவுநிலையானது தொடர்ந்து வரும் நிலையிலும், அவர்களது மேலாதிக்க வெளிப்பாட்டின் உறுதித் தன்மை வலுவாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் கல்வி நிலையங்களில் தங்களை ‘சவர்ணர்கள்’ என குறிப்பிடும் நிலையினை உயர்ஜாதியினர் எதிர்பார்க்கவில்லை. காரணம் ஒடுக்கப்பட்டோர் குறிப்பிடப்படும் நிலைக்கு எதிர் நிலையில் உள்ளவர்களாக அறியப்பட்டனர். அதே கல்வி நிலையங்களில் உயர்ஜாதியினர் ‘சவர்ணர்கள்’ என்று அறியப்படும் தேவை எழுந்துவிட்டது. உயர்ஜாதியினரின் மேலாதிக்க நிலைக்கு ஆபத்து எழுந்துள்ளது; யு.ஜி.சி. ஒழுங்கு விதிகளை எதிர்ப்பதன் மூலம் அவர்களுக்கான ஆபத்து தெரிகிறது. இந்த சுயபுரிதலின் மூலம்தான் உயர்ஜாதியினர் தங்களது ஜாதி அடையாளத்தை இப்பொழுது கட்டமைத்துள்ளனர். உயர்ஜாதியினருக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தின் காரணமாகவே தங்களை ‘சவர்ணர்கள்’ என அடையாளப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனையே ஆய்வாளர் தய்வே தனது ஆய்வுப் பதிவில் குறிப்பிடுகிறார். சலுகைகளைப் பெற்று வரும் உயர்ஜாதியினர் தங்களுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்வது மட்டுமின்றி, தங்களது அணுகுமுறையினையும் மாற்றியமைத்துக் கொண்டு தங்களை வழிநடத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். பார்ப்பனியத்தை தூக்கிப் பிடித்து தங்களது அடையாளத்தைக் காட்டிடும் உயர்ஜாதியினர் தகுதி – திறமை பற்றிய கூற்றினை கைவிட்டு விட்டனர் என்பதல்ல; தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்திட மாற்று வழிகளோடு முயற்சி செய்து வருகின்றனர். ஜாதி ஆதிக்க அடையாளத்தின் மறுவடிவம்தான் ‘பார்ப்பனியம் வாழ்க’ எனச் சொல்லும் முனைப்பு. ஜாதி அடையாளம் என்பது ஆதிக்கநிலையின் வெளிப்பாடே; ஒடுக்கப்பட்டோரின் நிலையினைக் குறிப்பதாகக் கருதமுடியாது. இரண்டுவித ஜாதி அடையாளங்களையும் ஒரே மாதிரியாகப் பார்க்க முடியாது. ஆனால் ‘தலித்’ எனும் அடையாளம் அறியப்படும்பொழுது, பார்ப்பன உறுதிநிலையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் உயர்ஜாதியினரின் நிலைப்பாடு.
தீர்மானம் – முடிவு:
இந்தக் கட்டுரை முழுவதும் யு.ஜி.சி. – 2026 ஒழுங்கு விதிகளை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களைச் சுற்றிய ஒரு கல்வி நிலைய விதிமுறைகளுக்கு எதிரான விவாதங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை; உயர் ஜாதியினரின் மேலாதிக்க உறுதிநிலைப்பாட்டின் தன்மை நிலையில் ஒரு புதிய தருணமாக விவரிக்கப் பட்டுள்ளது. ஒரு காவல்நிலையத்தின் முன்பு வெளிப் படையாக ‘பிராமணியம் வாழ்க’ என முழக்கம் எழுப்பப் பட்டுள்ளது. இதில் ஒரு முக்கியமான வெட்கக் கேடும் உறைந்துள்ளது. இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் நிலைப்பாடும் வெளிப்பட்டுள்ளது. தாம் செய்வது சரி என்னும் சுயமாகக் கோரும் நிலை பொதுவெளியில் வந்துள்ளது. உயர்ஜாதியினரின் பாதிக்கப்பட்டதான பாசாங்குத்தனத்துடன் தீவிரமான ஆதிக்க அடக்குமுறைக்கு உள்ள உறவு நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நிலைகளும் ஒரே நேரத்தில் ஒன்றன் மீது மற்றொன்று அழுத்தம் தரும் நிலை உண்டாகியுள்ளது. அதாவது உயர்ஜாதியினர் ஆதிக்க வெளிப்பாட்டில் ஒரு உருமாற்றம் நிகழ்ந்துள்ளது. உயர்ஜாதியினரின் ஜாதி அடையாள இலக்கணத்தில் இடக்கரடக்கல், சுயமறைப்பு போன்ற அயலிடைச் சான்றுகள் (alibi) இல்லாமல் போய்விட்டன. தற்கால நாட்டுச் சூழலில் பார்ப்பனிய மேலாதிக்க முறையில் புதிய இலக்கணம் வெளிப்பட்டுள்ளது. நாடு விடுதலை பெற்ற பின்னர், உயர்ஜாதியினரிடம் பாதிக்கப்பட்டதான பாசாங்குத்தனத்திற்கும் மேலாதிக்க உறுதிநிலைக்குமிடையில் ஒரு ஊசலாட்டம் இருந்து வந்தது. கருத்தியல் கட்டமைப்பாக நிலவிய இந்த நிலையினை பண்பாடு நிறைந்த பண்பெனும் போர்வையால் இதுநாள்வரை உயர்ஜாதியினர் மறைத்து வந்தனர். அவர்கள் கூறிவந்த ஜாதி அடிப்படையுள்ள தகுதி – திறமை நிலையானது அவர்களது கருத்தியலில் ஒரு தளர்வினை ஏற்படுத்தி விட்டதால், கூட்டாக ஆதிக்க நிலையினை வெளிப்படையாகக் காட்டி தங்களின் உருமாற்றத்தினைத் வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர். ‘பிராமணீயம் வாழ்க!’ என முழக்கம் ஏற்படுத்திடும் தருணம் உயர்ஜாதியினரின் ஜாதி அடையாள அரசியலில் ஒரு புதிய அத்தியாயமல்ல. அவர்களது பழைய அணுகுமுறையான மூடி மறைத்து செயல்படும்தன்மை, சுய செயல்பாடு, நிலையமைப்பு விதிமுறைகள் (institutional norms) – இவைகளெல்லாம் மாறி வெளிப்படையாகத் தெரியும் ஆதிக்கநிலையினை, சுய உறுதிப்பாட்டுடன் காட்டத் தொடங்கி விட்டனர் என்பதையே தெரிவிக்கிறது.
உயர்ஜாதியினரின் இந்த மாறிவரும் அணுகுமுறை பெரும்பான்மைக்கு மதிப்பளிக்கும் தேர்தல் ஜனநாயகத்தால் மட்டுப்படுத்தப்படும் நிலை ஏற்படும். யு.ஜி.சி. ஒழுங்கு விதிகளை எதிர்த்த உயர்ஜாதியினரின் போராட்டங்கள் அவர்களது திட்டமிட்ட சூழ்ச்சி அணுகுமுறையில் ஒரு தற்காலிகமானது என்றாலும், அப்படிப்பட்ட நடவடிக் கைகள் பல வருங்காலத்தில் அவர்களிடமிருந்து வெளிக்கிளம்பத்தான் செய்யும். இப்படிப்பட்ட தருணங்கள் சமூக மாற்றங்களுக்கு எதிரான உயர்ஜாதியினரின் ஒழுங்கற்ற தொடரும் நடவடிக்கைகளை பொதுவெளியில் பலரும் அறிய குறிப்பாக ஒடுக்கப்பட்டோர் அறிந்திட வழி ஏற்படுத்திடும். உயர்ஜாதியினரின் ஆதிக்க நலன்களுக்கான அவர்களது அணி திரட்சியால் பாதிக்கப்படுவோரின் அணி திரட்டலால் மட்டுமே உயர்ஜாதியினரின் ஆதிக்க நிலைப்போக்கினை வலுவிழக்கச் செய்திட முடியும்.
முற்றும்
‘எக்னாமிக் & பொலிட்டிக்கல் வீக்லி’
ஆங்கில ஏட்டில் வெளிவந்த கட்டுரையின் மொழியாக்கச் சுருக்கம்
தமிழில் – வீ. குமரேசன்
.png)
48 minutes ago
10







English (US) ·