ஒருதலை காதல் டார்ச்சர்... இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து... திருமணத்திற்கு மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்...

2 hours ago 16

Last Updated:Mar 09, 2026 6:49 PM IST

ஒருதலைக் காதல் வெறியில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை, பள்ளியின் வாசலில் வைத்து இளைஞர் கத்தியால் குத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ்
சுரேஷ்

தென்காசி அருகே பட்டப்பகலில் பள்ளி முன்பு இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. ஒருதலைக் காதல் விவகாரத்தில் பழக்கடை வியாபாரி விபரீத செயலில் ஈடுபட்டது ஏன்? நடந்தது என்ன?

தென்காசி மாவட்டம் இலத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள தனியார் பள்ளியில் இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி வாசலில் அந்தப் பெண்ணை வழிமறித்த இளைஞர் ஒருவர் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்து மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். அதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்றுள்ளனர்.

உயிருக்குப் போராடிய இளம்பெண்ணை மீட்டு தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இளம்பெண்ணை கத்தியால் குத்தியவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. இவர் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். பள்ளிக்கு வரும்போது பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்த பழக்கடைக்கு பழங்கள் வாங்கச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அவரும் திருமணமாகி கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதை அறிந்துகொண்ட சுரேஷ், அந்த பெண்ணுடன் சகஜமாக பேசிப் பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் பணிபுரியும் பள்ளிக்குச் சென்றவர், தனது காதலை ஏற்குமாறு கூறி மிரட்டியுள்ளார். அதற்கு இளம்பெண் ‘நோ’ சொன்னதால் ஆத்திரத்தில் பழம் வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியால் அவரை சரமாரியாகக் குத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இளைஞரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

ஒருதலை காதல் டார்ச்சர்... இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து... திருமணத்திற்கு மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்...

Read Entire Article