மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பைசன்’.
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு காணும் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது.
சென்னையில் நடந்த படநிகழ்வில் பங்கேற்றுப் பேசிய நடிகர் துருவ் விக்ரம், ‘பைசன்’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்கள், நடிகைகள், கபடி விளையாட்டு வீரர்கள், ஒப்பனை கலைஞர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
இப்படத்தில் தனக்குத் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி பற்றி குறிப்பிட்ட அவர், எனது தந்தையின் முதல் படத்தில் வில்லனாகவும் அடுத்த படத்தில் அண்ணனாகவும் இப்பொழுது எனக்குத் தந்தையாகவும் பசுபதி நடித்ததை நான் கடவுளின் செயலாகப் பார்க்கிறேன் என்றார்.
“என் அம்மாவுக்கு எப்போதும் என்மீது நம்பிக்கையில்லை. நான் நன்றாகப் படிப்பதில்லை என எனது பள்ளி ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு, நான் எங்கே வாழ்க்கையில் திறம்படச் செயல்படாமல் இருந்துவிடுவேனோ என அவர் அஞ்சினார். ‘பைசன்’ படம் அவரின் அந்தப் பயத்தைப் போக்கும் என நான் நினைக்கிறேன். அவரைப் பெருமைப்படுத்தும் படமாக இது இருக்கும் என நம்புகிறேன்,” என துருவ் விக்ரம் கூறினார்.
தனது தந்தை விக்ரமை நினைவுகூர்ந்த அவர், “படத்தில் கடினமான காட்சிகளில் நடித்த போதெல்லாம் அவரை நினைப்பேன். எந்த அளவுக்கு அவர் நடித்த கதாபாத்திரத்தைக் காட்சிப்படுத்த அவர் சிரமப்பட்டிருப்பார். நம்மால் சிறிய அளவில் கூட முயற்சி பண்ண முடியாதா என யோசிப்பேன். என்னால் விக்ரம் போல இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், அந்தத் தகுதியை அடைய அனைத்தையும் செய்ய நான் தயாராக உள்ளேன்,” எனத் தனது தந்தையின் நடிப்புத் திறன் பற்றி கூறி பெருமிதம் கொண்டார்.
இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடிப்பதற்காக 20 ஆண்டுகள்கூட காத்திருப்பேன் எனத் துருவ் விக்ரம் சொன்னார்.
மேலும், ‘பைசன்’ படத்தில் நான் நடித்ததைவிட மாரி செல்வராஜ் நடித்திருந்தால் படம் இன்னும் மிகப்பெரிய இடத்தை அடைத்திருக்கும். எனக்காக இல்லாமல் அவரின் உழைப்புக்காக, திரைத்துறை மீதான அக்கறைக்காக இப்படம் வெற்றி பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றும் அவர் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ரஜிஷா விஜயன், இந்தப் படத்தில் விளையாட்டு, குடும்பம், காதல் என எல்லாமே இருக்கின்றது. மாரி இயக்கிய படங்களிலே இதுவரைக்கும் இல்லாதது இந்தப் படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்றார்.
கேரளத்தைச் சேர்ந்த எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து, தென் தமிழகத்தில் ஒருவராக மாற்றிய திருநெல்வேலி மக்களின் அன்புக்கு நன்றி,” என அவர் நெகிழ்ந்தார்.