கரூர் கூட்ட நெரிசல்... செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்?

1 hour ago 12

Last Updated:Mar 09, 2026 9:59 PM IST

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News18
News18

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதில் விசாரணைக்காக டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ கடந்த ஜனவரி 6-ம் தேதி சம்மன் அனுப்பியது. அதன்படி ஆஜரான விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்? பாதுகாப்பு ஏற்பாடுகளில் என்ன குளறுபடிகள் நடந்தது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மீண்டும் நாளை (மார்ச் 10) டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 3-வது முறையாக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், விஜய் நாளை விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அனுப்பிய சம்மன் அவருக்கோ அல்லது அவரது இல்லம் மற்றும் அலுவலக பிரதிநிதிக்கோ கிடைக்கவில்லை. எனினும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட நிலையில் இதுவரை செந்தில் பாலாஜி தரப்பு எந்த பதிலும் வெளியிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருவருக்கும் புதிய சமன்கள் அனுப்பப்படும் சிபிஐ தகவல் வெளியிட்டுள்ளது. விசாரணை டெல்லி அலுவலகத்தில் தான் நடைபெறும். வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் தற்போது இல்லை எனவும் சிபிஐ தெரிவித்துள்ளது. முன்னதாக, நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி கோரியும் விஜய் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Location :

Karur,Karur,Tamil Nadu

Read Entire Article