கலைக்கண் இனம், மொழி பாராது

1 hour ago 5

d2c7962c-603a-42ee-b0bf-6843e53afeda

அபிநயம், பாவம், மொழி அனைத்தையும் மொழிபெயர்த்து ஆடும் நடனக் கலைஞர் சூ மே ஃபெய்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தம் தோழிகளைப் போலல்லாமல், பரதநாட்டியம் ஆடுவதற்கு சீனரான 29 வயது சூ மே ஃபெய் இன்னும் அதிக உழைக்க வேண்டியிருந்தது.

“என் நடன வகுப்பில் என்னைப் போல் வேறு மொழி பேசுபவர் வேறெவரும் இருக்கவில்லை,” என்று கற்றல் அனுபவத்தை நினைவுகூர்ந்தார் மே ஃபெய்.

அபிநயம், பாவம், மொழி அனைத்தையும் அவர் மொழிபெயர்த்து ஆட வேண்டும். அவரைப் பொறுத்தவரை, பரதநாட்டியம் என்ற கலை வடிவம் மொழிபெயர்ப்புக்கும் அப்பாற்பட்டது.

“நடன அசைவுகளுக்கும் அதன் ஆழமான அர்த்தங்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, உணர்வுகளை வெளிப்படுத்தும் பாலமாகத் திகழ்வதுதான் நடனத்தின் உண்மையான அழகு,” என்றார் மே ஃபெய்.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பரதநாட்டியம் கற்றுவரும் மே ஃபெய்யின் பயணம், தேசிய தொடக்கக் கல்லூரியில் தொடங்கியது.

பள்ளியின் இந்திய நடன இணைப்பாட வகுப்பில் மே ஃபெய் முதன்முதலில் பரதநாட்டியத்தைக் கண்டறிந்து அதன்மீது காதல் கொண்டார்.

பள்ளி ஆசிரியரின் உதவியுடன், ‘அப்சராஸ் ஆர்ட்ஸ்’ நடனப் பள்ளியில் தனது பரதநாட்டியப் பயணத்தைத் தொடர்ந்தார்.

மே ஃபெய் 24 வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தார்.

பெரும்பாலான நடனப் பாடல்கள், தமிழ், தெலுங்கு அல்லது சமசுகிருதத்தில் உள்ளன.

“இந்திய மொழிகளில் இருக்கும் எந்தவொரு பரதநாட்டியப் பாடலின் பொருளையும் புரிந்துகொள்ள முதலில் அதை மொழிபெயர்க்க வேண்டும். எனினும், நடனப் பாடல் உணர்த்தும் உட்பொருளிலிருந்து மொழிபெயர்ப்பு வேறுபட்டிருக்கும்,” என்றார் மே ஃபெய்.

மிக முக்கியமாக, அதை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பது முக்கியமானது என்றார் அவர்.

“ஒரே நடனத்தை எப்படி வெவ்வேறு விதங்களில் புரிந்துகொள்ள முடியும் என்பதை அறிவதற்காக அதன் மாறுபட்ட அமைப்புகளைப் பார்த்துக் கற்றுக்கொள்வேன்,” என்று தம் புரிதலை அவர் விளக்கினார்.

தமிழ்மொழி தெரியாததால் அவர் சொற்களை மனனம் செய்ய வேண்டியிருந்தது. அதுவே அவரது நடனக் கற்றல் செயல்முறையின் ஒரு பகுதியாகிவிட்டது.

நாளடைவில், தமிழ்ப் பாடல்களை மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் தானாகவே வார்த்தைகளை அடையாளம் காணத் தொடங்கினார் மே ஃபெய்.

“ஆனாலும், சில படைப்புகள் தெலுங்கு மொழியில் இருப்பதால் அதைப் புரிந்துகொள்ள சற்று சவாலாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

தற்போது, லண்டனைச் சேர்ந்த ‘அக்ரம் கான்’ நடன நிறுவனத்துடன் நடன நிகழ்ச்சிகளுக்காக அவ்வப்போது பயணம் மேற்கொள்கிறார் மே ஃபெய்.

பயணம் செல்லாத நாள்களில் பள்ளிகளில் இணைப்பாட நடவடிக்கையாக பரதநாட்டியம் கற்றுத் தருகிறார்.

பரதநாட்டியக்கலையின் மிகச் சிறந்த அம்சம், தாம் அதன்வழி பெற்ற மக்கள் சொத்து என்று மே ஃபெய் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

“கலை என்பது இனம், மொழி போன்ற அடையாளங்களைக் கடந்தது என்பதை பரதநாட்டியம் மூலம் உணர்ந்துகொண்டேன்,” என்றார் மே ஃபெய்.

பார்ப்பதற்கு, பேசுவதற்கு இந்திய பரதநாட்டியக் கலைஞர்கள்போல் இல்லாததால் தம்மை ஒதுக்கிவைப்பது மற்றக் கலைஞர்களுக்கு எளிதாக இருந்திருக்கலாம் என்றார் மே ஃபெய்.

“ஆனால், அவர்கள் அதற்கு நேர்மாறானதைச் செய்தார்கள். என்னை வரவேற்று, என்னைத் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள்,” என்று அவர் உணர்வுபொங்கக் கூறினார்.

Read Entire Article