குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி பதில் அளிக்காதது தலைக்குனிவு தொல்.திருமாவளவன்

21 hours ago 17

சென்னை, பிப்.9- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் டில்லியில் இருந்து சென்னை வந்தார். அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு, பிரதமர் பதில் உரை ஆற்றாமல் நிறைவேற்றப்பட்டு உள்ளது இதுதான் முதல் முறை. எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளை பேச விடாமல் தடுத்து பதற்றத்தை உருவாக்கி, ஆளுங் கட்சியினர் மட்டுமே கூடி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

நாளுக்கு நாள் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகப் படுகொலை அரங்கேற்றப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்-இந்திய பிரதமருக்கும் இடையான, உறவுகள் குறித்தும் இன்னும் பல பிரச்சினைகள் குறித்தும், நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்புவார்கள் என்பதால், எதிர்க்கட்சியினரை பேச விடாமல் தடுக்கும் யுக்தியை, ஆளுங் கட்சியினர் கையாண்டனர்.

பிரதமர் பதில் உரையை ஆற்றாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டு உள்ள தலைக்குனிவு. இதற்கு பிரதமர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டுவதாக கூறி, தனது உரையில், பிச்சை எடுக்க கூட பயன்பாடாத மொழி தமிழ் என்று தனது, காழ்ப்புணர்வை கக்கி உள்ளார். இதுதான் பா.ஜ.க.வினரின் மனநிலை. தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், எதிரான மன நிலையை கொண்டவர்கள் என்பதற்கு, இதை விட சான்று தேவையில்லை. நிர்மலா சீதாராமனுக்கு, கமல்ஹாசன் பதிலடி தந்ததற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிர்மலா சீதாராமனுக்கு, கமல்ஹாசன் பதிலடி கொடுத்ததை, தமிழினமே பாராட்டுகிறது. வாழ்த்துகிறது. ஆனால் வானதி சீனிவாசன் போன்றவர்கள், பா.ஜ.க.வினர் வயிற்று எரிச்சலில், கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

எங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும். அதைப் போல் வாக்குச்சாவடி பணிக்குழு முகவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article